டிக்டாக் வீடியோ காதல் - மாணவியின் அம்மா எடுத்த அதிரடி முடிவு  | tik tok love youth arrested by police

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (11/06/2019)

கடைசி தொடர்பு:19:40 (11/06/2019)

டிக்டாக் வீடியோ காதல் - மாணவியின் அம்மா எடுத்த அதிரடி முடிவு 

 வடபழனியில் உள்ள வணிக வளாகத்துக்குச் சென்றபோது, அரக்கோணத்தைச் சேர்ந்த அசார் என்பவரைச் சந்தித்துள்ளார், அந்த மாணவி. அதன்பிறகு, டிக்டாக் வீடியோ மூலம் மாணவியை காதல் விலையில்  விழவைத்த அசார், சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார். 

டிக்டாக் செயலி

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி, 10-ம் வகுப்பு படித்துவருகிறார். சில நாள்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியில் சென்ற மாணவி, பிறகு வீடு திரும்பவில்லை. மாணவியின் அம்மா, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மாணவியின் அம்மா, சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் மாணவியைத் தேடிவந்தனர். 

 இந்த நிலையில் மாணவி வீடு திரும்பினார். அவருடன் வாலிபர் ஒருவரும் வந்தார். வீட்டுக்கு வந்த மாணவியிடம் அவரின் அம்மா விசாரித்தார். அப்போது, ''இவரின் பெயர் அசார், அரக்கோணத்தைச் சேர்ந்தவர். இவரை நான் காதலிக்கிறேன். இருவரும் சேர்ந்து வாழப்போகிறோம்'' என்று மாணவி கூறியுள்ளார். அதைக் கேட்டு மாணவியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். 

 இதையடுத்து மாணவியின் அம்மா, சூளைமேடு காவல் நிலையத்துக்கு ரகசியமாக செல்போன்மூலம் தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீஸ் டீம், மாணவியின் வீட்டுக்கு வந்தனர். அங்கு இருந்த அசார் மற்றும் மாணவியை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு, இருவரிடமும் விசாரணை நடந்தது. அப்போது மாணவி, ''அசாரைப் பிரிந்து வாழ முடியாது'' என்று பிடிவாதமாகக் கூறியுள்ளார். அவருக்கு 13 வயது ஆவதால், ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்துக்கு  மாணவியையும் அசாரையும் சூளைமேடு போலீஸார் அனுப்பிவைத்தனர். அங்கு, மாணவியின் அம்மா கொடுத்த புகாரில் அசார் கைதுசெய்யப்பட்டார். 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மாணவிக்கு அப்பா இல்லை. அம்மா, தங்கையுடன் வசித்துவந்தார். அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவருகிறார். சில மாதங்களுக்கு முன், வடபழனியில் உள்ள வணிக வளாகத்துக்கு மாணவி சென்றுள்ளார். அப்போதுதான் அரக்கோணத்தைச் சேர்ந்த அசாரை மாணவி சந்தித்துள்ளார். இருவரும் பழகியுள்ளனர்.  டிக்-டாக்  வீடியோ மூலம் மாணவியை அசார், தன்னுடைய காதல் வலையில்  விழவைத்துள்ளார்.

கடந்த 30-ம் தேதி, வீட்டிலிருந்து வெளியில் சென்று அசாரை சந்தித்துள்ளார். அதன் பிறகு, இருவரும் தலைமறைவாகிவிட்டனர். 10-ம் தேதி, மாணவி, அசாருடன் வீட்டுக்கு வந்துள்ளார். மாணவி வீட்டுக்கு வந்த தகவல் தெரிந்ததும் அங்கு சென்று விசாரித்தோம். மாணவியை ஏமாற்றிய குற்றத்துக்காக அசார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுசெய்து அவரைக் கைதுசெய்துள்ளோம். மாணவிக்குத் தேவையான கவுன்சலிங் அளித்துள்ளோம். டிக்டாக் வீடியோ குறித்து விழிப்புணர்வையும் மாணவிக்கு ஏற்படுத்தியுள்ளோம்" என்றனர். 


 


அதிகம் படித்தவை