`கழுத்தில் கத்தியை வைத்தார்கள்!'- நள்ளிரவில் இளைஞரைப் பதற வைத்த மெரினா சம்பவம் | Chennai youth filed police complaint over robbery

வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (13/06/2019)

கடைசி தொடர்பு:16:05 (13/06/2019)

`கழுத்தில் கத்தியை வைத்தார்கள்!'- நள்ளிரவில் இளைஞரைப் பதற வைத்த மெரினா சம்பவம்

`ராயபுரத்திலிருந்து சைக்கிளிங்க்காக மெரினா நேப்பியர் பாலத்தின் அருகே வந்தேன். அப்போது என்னை வழிமறித்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டினர்' என்று பீதியோடு போலீஸாரிடம் தனிஷ் கூறினார். 

மெரினாவில் இளைஞரை மிரட்டிய சம்பவம்  

சென்னை காமராஜர் சாலை, நேப்பியர் பாலத்தின் அருகே சைக்கிள் பயிற்சியில் நேற்றிரவு வாலிபர் ஒருவர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் வாலிபரை வழிமறித்தனர். அதில் ஒருவர், `ஒழுங்கா செல்போனை கொடுத்துவிடு, சத்தம் போட்டால் குத்திவிடுவேன்' என்று கூறியபடி வாலிபரின் கழுத்தில் பட்டன் கத்தியை வைத்து மிரட்டினார். இதனால் பயந்துபோன வாலிபர் செல்போனை கொடுத்தார். அதன்பிறகு பைக்கில் அவர்கள் சர்வசாதாரணமாக புறப்பட்டனர். 

சில நிமிடங்களுக்குள் நடந்த இந்தச் சம்பவத்தால் பீதியடைந்தார் வாலிபர். அப்போது, ரோந்துப் பணியில் கோட்டை காவல் நிலைய போலீஸார் அவ்வழியாக வந்தனர். அவர்களிடம் செல்போனை பறிகொடுத்த வாலிபர் நடந்த சம்பவத்தைக் கூறினார். உடனடியாக போலீஸார், செல்போன் பறித்தவர்களைத் தேடியபடி வாகனத்தில் சென்றனர். அப்போது, செல்போனைப் பறித்தவர்கள் பைக்கில் செல்வதைப் பார்த்த போலீஸார் அவர்களை மடக்கிப்பிடித்தனர். பிறகு இருவரையும் கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர். 

 மெரீனாவில் இளைஞரை மிரட்டிய சம்பவம்

விசாரணையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டவர் ராயபுரத்தைச் சேர்ந்த தனிஷ் என்று தெரியவந்தது. இவர் தினமும் இரவு ராயபுரத்திலிருந்து நேப்பியர் பாலம் வழியாக காமராஜர் சாலையில் சைக்கிள் பயிற்சிக்காக தனியாக வருவார். அவரிடம்தான் பைக்கில் வந்த இருவர் நேற்றிரவு கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனைப் பறித்துள்ளனர். அவர்களின் பெயர் போரூரைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஆகாஷ் எனத் தெரிந்தது. கோபிநாத், ஆகாஷிடமிருந்த செல்போன், பட்டன் கத்தி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப்பிறகு இருவரையும் போலீஸார் சிறையில் அடைக்கவுள்ளனர்.

தனிஷ் போலீஸாரிடம் நடந்த சம்பவத்தை விவரித்தார். அவர் கூறுகையில், ``சார், நான் சைக்கிளிங்க்காக தினமும் வருவேன். முதலில் செல்போனைப் பறித்தனர். அதன்பிறகு கத்தியை எடுத்து கழுத்தில் வைத்தனர். அதனால் பயந்துபோய் செல்போனை கொடுத்துவிட்டேன்" என்று பீதியோடு கூறினார். அதோடு காவல் நிலையத்திலிருந்த செல்போன் திருடர்களைப் பார்த்த தனிஷ், இவர்கள்தான் செல்போனைப் பறித்தார்கள் என்று அடையாளம் காட்டினார். 

 மெரீனாவில் இளைஞரை மிரட்டிய சம்பவம்

சென்னையில் தொடர்ந்து செல்போன் பறிப்பு, நகை பறிப்புச் சம்பவங்கள் நடந்துவருகின்றன. செல்போனைப் பறிக்கும் கும்பல், அதை குறைந்த விலைக்கு விற்றுவருகின்றனர். திருட்டு செல்போன்களை வாங்குவதற்கென தனி நெட்வோர்க் சென்னையில் உள்ளது. சென்னையில் திருடப்படும் செல்போன்கள், வேறு மாநிலத்துக்கு உடனடியாக கைமாற்றிவிடப்படுகிறது. அதோடு செல்போனின் ஐ.எம்.இ.ஐ. நம்பரையும் மாற்ற சில இடங்கள் உள்ளன. ஐ.எம்.இ.ஐ. நம்பர்கள் மாற்றப்பட்ட செல்போன்கள், சென்னையிலேயே விற்கப்படுகின்றன. செல்போன் திருட்டுச் சம்பவத்தைத் தடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். ரோந்துப் பணிகளையும் தீவிரப்படுத்த காவல் நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் செல்போன் திருட்டுச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. தினமும் செல்போன்களைத் திருடர்களிடம் கொடுத்துவிட்டு பரிதவிப்பவர்கள் பட்டியல் நீள்கின்றன. 

செல்போன் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் யாரென்று போலீஸார் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டபோது அதிர்ச்சித் தகவல் வெளியானது. இன்ஜினீயரிங் படித்தவர்களும் பட்டதாரிகளும்தான் அதிகளவில் செல்போன் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் செல்போன் பறிப்பு திருடர்களை எளிதில் அடையாளம் காண முடிகிறது. ஆனால், அவர்களைப் பிடிக்கதான் காலதாமதம் ஏற்படுவதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 மெரீனாவில் நடந்த செல்போன் பறிப்பு

செல்போன் பறிப்புச் சம்பவங்களில் சிறைக்குச் செல்பவர்கள், எளிதில் வெளியில் வந்து மீண்டும் கைவரிசை காட்டத் தொடங்கிவிடுகின்றனர். இதனால், செல்போன் திருடர்கள் மற்றும் அதை வாங்குபவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே செல்போன் பறிப்புச் சம்பவங்கள் குறையும். நேப்பியர் பாலத்தில் தனிஷ் என்ற வாலிபரிடம் செல்போன் பறித்த சம்பவத்தில் போலீஸார் துரிதமாக செயல்பட்டதால் உடனடியாக இருவர் சிக்கிக்கொண்டனர். இல்லையெனில் தனிஷும் செல்போனை பறிகொடுத்தவர் பட்டியலில் சேர்ந்திருப்பார். 

சென்னையில் வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்களை மீட்ட தி.நகர், திருவல்லிக்கேணி சரக போலீஸார் அதை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. செல்போனை மிரட்டி பறிப்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.