`மயக்கத்தில் இருந்தேன்; ஊழியர் செய்ததை தடுக்க முடியல!'- போலீஸிடம் கதறிய 30 வயது பெண்  | Chennai hospital employee arrested over sexual harassment to woman patient

வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (13/06/2019)

கடைசி தொடர்பு:16:39 (13/06/2019)

`மயக்கத்தில் இருந்தேன்; ஊழியர் செய்ததை தடுக்க முடியல!'- போலீஸிடம் கதறிய 30 வயது பெண் 

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை அரங்குக்கு அழைத்துச்செல்லப்பட்ட வடமாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மருத்துவமனை ஊழியர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பாலியல் புகாரில் சிக்கிய ஊழியர்

சென்னை பெருங்குடியில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மூட்டு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர். இதையடுத்து, கடந்த 5-ம் தேதி அன்று, இடது காலில் அறுவைசிகிச்சைக்காக அந்தப் பெண் அறுவைசிகிச்சை அரங்குக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

அறுவைசிகிச்சைக்கான முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது, அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. மயக்க மருந்து கொடுத்த பிறகு, அந்தப் பெண் மட்டும் அறுவைசிகிச்சை அரங்கில் தனியாக இருந்துள்ளார். அறுவைசிகிச்சை முடிந்தபிறகு அந்தப் பெண், குடும்பத்தினரிடம் அதிர்ச்சித் தகவல் ஒன்றைத் தெரிவித்தார். அறுவைசிகிச்சை அரங்கில் இருந்தபோது, ஊழியர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறினார். இதைக்கேட்டு பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

 இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்திடமும் துரைப்பாக்கம் காவல் நிலையத்திலும் அந்தப் பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக, மருத்துவமனையில் மயக்க மருந்து பிரிவில் பணியாற்றும் வேலூரைச் சேர்ந்த டில்லிபாபுவை (21) போலீஸார் கைதுசெய்தனர். 

 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பாலியல் புகாரில் சிக்கிய ஊழியர்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பவத்தன்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு அறுவைசிகிச்சை நடந்துள்ளது. அப்போது, அந்தப் பெண்ணுக்கு டில்லி பாபு பாலியல் தொல்லை கொடுத்ததாக எங்களுக்கு புகார் வந்தது. உடனடியாக மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தோம். அறுவைசிகிச்சை அரங்கில் டில்லிபாபுவும் அந்தப் பெண்ணும் தனியாக இருந்ததற்கான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்தன. இதையடுத்து, டில்லிபாபுவிடமும் அந்தப் பெண்ணிடமும் தனித்தனியாக விசாரித்தோம். அதன்பிறகே டில்லிபாபுவை கைதுசெய்துள்ளோம். சமீபத்தில்தான் டில்லிபாபு மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்துள்ளார். அவர் வேறு யாரிடமும் இதுபோல நடந்துள்ளாரா என்றும் விசாரணை நடந்துவருகிறது" என்றனர். 

பாதிக்கப்பட்ட பெண், அனிமேஷன் துறையில் பணியாற்றுகிறார். கால் மூட்டு வலிக்காகத்தான் சென்னை வந்துள்ளார். அறுவை சிகிச்சை அரங்கில் என்ன நடந்தது என்பதை அந்தப் பெண் விவரமாக காவல் நிலையத்தில் கூறியுள்ளார். அதில், `தனக்கு மயக்க மருந்து கொடுத்தபோது, நானும் அந்த ஊழியரும்தான் இருந்தோம். நான் அரை மயக்கத்தில் இருந்தேன். அப்போதுதான் ஊழியர் ஒருவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். ஆனால், என்னால் தடுக்க முடியவில்லை. அதன்பிறகு, நான் சுயநினைவை இழந்துவிட்டேன்' என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். 

பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனை நிர்வாகத்திடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறியபோது, அங்குள்ளவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அறுவைசிகிச்சை அரங்கில் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு இல்லை என மருத்துவமனை தரப்பில் முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண், உறுதியாக நடந்த கொடுமைகளைச் சொல்லி கதறிஅழுததால் அந்தப் பெண்ணுக்கு அறுவைசிகிச்சை செய்தவர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான் டில்லிபாபு சிக்கிக்கொண்டார் என்கின்றனர் மருத்துவமனை தரப்பில்.  மேலும், அந்த ஊழியரை வேலையைவிட்டு நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறோம் என்றார், மருத்துவமனையின் நிர்வாக உயரதிகாரி ஒருவர். 

 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பாலியல் புகாரில் சிக்கிய ஊழியர்

காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்ததும், பிரபலமான மருத்துவமனை என்பதால் முதலில் காவல் துறையின் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, பெண்ணின் தரப்பிலிருந்து காவல் துறைக்கு பிரஷர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வேறுவழியின்றி டில்லிபாபுவை போலீஸார் கைதுசெய்துள்ளனர். இந்தத் தகவல் மீடியாக்களுக்குத் தெரிந்ததும் செய்தி சேகரிக்க சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளிடம் என்ன நடந்தது என்று கேட்க போன் செய்தனர். ஆனால், காவல் துறை தரப்பில் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, பெயர் விவரங்களைக் கூறிய பின்னர், முழுத் தகவலை சொல்லாமல் போலீஸார் மூடிமறைத்தனர். இதனால், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் டில்லிபாபு மட்டும்தான் உள்ளாரா அல்லது வேறு யாரையாவது காப்பாற்ற போலீஸார் முயற்சிசெய்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் இப்படியொரு சம்பவம் நடந்ததால், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்குதான் கெட்ட பெயர். எனவே, காவல் துறையினரும் இந்தச் சம்பவத்தில் அமைதிகாக்கின்றனர். 

போலீஸ் உயரதிகாரியிடம், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் மூடிமறைக்கப்படுவதாகத் தகவலைத் தெரிவித்தோம். உடனடியாக அவர், `பெண்ணின் எதிர்காலத்தைக் கருதிதான் அவரின் விவரங்களை வெளியிடவில்லை. மேலும், இதுஒரு பாலியல் புகார். அதற்குத் தேவையான ஆதாரங்களைச் சேகரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. சட்டத்தின்முன் எல்லோரும் சமம்.  அதனால்தான் டில்லிபாபுவை கைதுசெய்துள்ளோம்' என்றார்.