`புல்லுக்கட்டு உரசியதால் விரோதம்; பழிக்குப் பழி' - நெல்லையில் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர்! | an executive of DYFI was murdered in nellai and tension prevails

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (13/06/2019)

கடைசி தொடர்பு:21:20 (13/06/2019)

`புல்லுக்கட்டு உரசியதால் விரோதம்; பழிக்குப் பழி' - நெல்லையில் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளரான அசோக் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பதற்றம் நீடிக்கிறது. அவரது மரணத்துக்குக் காரணமானவர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

வெட்டிக்கொலை செய்யப்பட்ட அசோக்    

நெல்லைப் புறநகர் பகுதியான கரையிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர், அசோக் . 23 வயதான இவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டுவந்தார். அந்த அமைப்பின் நெல்லை மாவட்டப் பொருளாளராகவும் பொறுப்பு வகித்துவந்தார். கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டுவந்த தனியார் டயர் கம்பெனியில் அசோக் பணியாற்றிவந்தார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, அசோக்கும் அவரது தாயாரும் வயல்வெளிக்குச் சென்று மாட்டுக்கு புல் அறுத்து எடுத்து வந்துள்ளனர். இரு சக்கர வாகனத்தில், புல்லை கட்டாகக்கட்டி எடுத்து வந்த அசோக், அதே வாகனத்தில் தாயாரையும அழைத்துவந்துள்ளார். அப்போது, சாலையில் நடந்துசென்ற இளைஞர்கள்மீது புல்லுக்கட்டின் நுனிப்பகுதி பட்டதாகக் கூறப்படுகிறது.

அதனால் கோபம் அடைந்த இளைஞர்கள், அசோக்கைத் தாக்கியுள்ளனர். அவரும் பதிலுக்கு தாக்கியிருக்கிறார். இது தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துவிட்டு அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். 

சாலை மறியல்

ஆனால், அசோக் மீது கோபத்தில் இருந்த எதிர்த் தரப்பினர், அவரைப் பழிவாங்கக் காத்திருந்துள்ளனர். இந்த நிலையில், இரவுப் பணிக்காக அசோக் புறப்பட்டு பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அங்கு வந்த எதிர்த் தரப்பினர், அவரை ஓடஓட விரட்டிக் கொலை செய்துள்ளனர். அத்துடன், அவரது உடலை அருகில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தின் அருகே வீசிச் சென்றிருக்கிறார்கள். 

இது பற்றித் தகவல் அறிந்ததும் அங்கு சென்று பார்த்த உறவினர்கள், அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் குற்றவாளிகளைக் கைதுசெய்யக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களைச் சமாதானப்படுத்தினார்கள். இந்த நிலையில், அசோக் கொலைக்குக் காரணமானவர்கள் என இருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். ஆனால், உண்மையான குற்றவாளிகள் இவர்கள்தான் என ஏழு பேரின் பெயரை உறவினர்கள் போலீஸாரிடம் அளித்துள்ளனர். 

மறியல் போராட்டம்

உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்தால் மட்டுமே அவரது உடலைப் பெறுவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். இதனிடையே, ஆணவப் படுகொலையாக இந்தச் சம்பவம் நடந்திருப்பதாகப் பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான கே.பாலகிருஷ்ணன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அசோக் படுகொலை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, கொலையாளிகளைக் கைதுசெய்யக் கோரி, நெல்லை-மதுரை சாலையில் அசோக் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் உள்ளிட்ட கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், மதுரை செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. இந்தப் படுகொலை காரணமாக நெல்லையில் பதற்றம் நீடிப்பதால், போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.