`லவ் ஜிஹாத் அல்ல; ஒரே நேரத்தில் இரண்டு காதல்?' - கோவை மாணவி தற்கொலையில் தொடரும் குழப்பம்! | young girl suicide for love affair in kovai

வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (14/06/2019)

கடைசி தொடர்பு:14:56 (14/06/2019)

`லவ் ஜிஹாத் அல்ல; ஒரே நேரத்தில் இரண்டு காதல்?' - கோவை மாணவி தற்கொலையில் தொடரும் குழப்பம்!

இளம்பெண் தற்கொலை

` `லவ் ஜிஹாத்'தாக செயல்பட்டு ஒரு இளைஞர் மிரட்டியதால், என் மகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டாள். என் மகளது மரணத்துக்குக் காரணமான அந்த இளைஞரை உடனடியாக கைது செய்ய வேண்டும்' என்று தன் மகளைப் பறிகொடுத்த தந்தை கோவை கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் மல்கப் புகார் அளித்துள்ளார். 

கோவை பி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதாரன். இவரின் மகள் ஹேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் க.க.சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி, தனது வீட்டின் அறையில் ஹேமா திடீரென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தற்கொலை வழக்கை கோவை குனியமுத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சூழலில், ``என் மகள் `லவ் ஜிஹாத்' காரணமாகதான் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்குக் காரணமான இளைஞரை போலீஸார் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்'' என்று ஹேமாவின் தந்தை கங்காதாரன் புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த கங்காதாரன், ``எனது மகள் தற்கொலை செய்துகொண்டபோது அவரது அறையில் இருந்த கடிதத்தையும் சில பொருள்களை குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு என் மகள் எழுதிய கடிதத்தைக் காட்டுவதற்கு போலீஸ் மறுக்கிறது. ஜாஃபர் என்கிற இளைஞர், என் மகளின் செல்போன் எண்ணுக்கு மிரட்டும் வகையில் மெசேஜ் அனுப்பியுள்ளார். யாரும் இல்லாத நேரத்தில் அந்த இளைஞர் எங்கள்  வீட்டுக்கு வந்து என் மகளை மிரட்டியுள்ளார். அதன்பிறகே, என் மகள் தற்கொலை செய்திருக்கிறாள். `நீ மதம் மாற வேண்டும். அப்போதுதான் உன்னைத் திருமணம் செய்துகொள்வேன்' என அழுத்தம் கொடுத்துள்ளார். அந்த இளைஞர் காதலின் பெயரால் `லவ் ஜிஹாத்'தாக செயல்பட்டு என் மகளை மதம் மாற்ற முயன்றுள்ளார். ஆனால், குனியமுத்தூர் போலீஸார் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மகள் தற்கொலைக்குக் காரணமான ஜாஃபரைக் கண்டுபிடித்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும்" என்றார்.

இதுதொடர்பாக குனியமுத்தூர் இன்ஸ்பெக்டர் கணேஷிடம் பேசினோம், ``இதை எந்த அடிப்படையிலும்  `லவ் ஜிஹாத்' என்று சொல்ல முடியாது. தற்கொலை செய்துகொண்ட பெண் அப்துல் அப்பாஸ் என்ற இளைஞரையும் முகமது ஜாஃபர் என்ற இளைஞரையும் ஒரே நேரத்தில் காதலித்திருக்கிறார். அப்பாஸை காதலித்தது ஜாஃபாருக்குத் தெரியாது. ஜாஃபரை காதலித்தது அப்பாஸுக்குத் தெரியாது. ஒரு கட்டத்தில் அந்தப் பெண் அப்பாஸை காதலிப்பது ஜாஃபருக்குத் தெரிய வரவே அது பிரச்னையாக வெடித்திருக்கிறது. ஜாஃபர் அந்த பெண்ணின் வீட்டுக்கே சென்று நீ என்னைக் காதலிக்கிறாயா இல்லையா? எனக் கேட்டுள்ளார். இருவரையும் காதலிப்பது வெளியில் தெரிந்துவிட்டதால் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இரண்டு இளைஞர்களுக்கும் அந்தப் பெண்,  `ஐ லவ் யூ' என்று அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் எங்களிடம் இருக்கிறது. சம்பந்தப்பட்ட இளைஞர்கள் இருவரும் இஸ்லாமியர்கள் என்பதால் யாருடைய தூண்டுதலின் பேரிலோ அந்தப் பெண்ணின் தந்தை இப்படிப் பேசுகிறார். விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க