மளிகைக் கடைக்காரருக்கு விழுந்த கத்திக்குத்து! - சிறுமி சீண்டலுக்குப் பழிவாங்கியது யார்? #CHENNAI | 16 year old girl sexual abused by shopmen in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (14/06/2019)

கடைசி தொடர்பு:14:57 (14/06/2019)

மளிகைக் கடைக்காரருக்கு விழுந்த கத்திக்குத்து! - சிறுமி சீண்டலுக்குப் பழிவாங்கியது யார்? #CHENNAI

சென்னையை அடுத்த பம்மலில் பால் வாங்கச் சென்ற சிறுமிக்குக் கடைக்காரர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் வெளியானது. அதைத் தட்டிக் கேட்கச் சென்றபோது கடைக்காரர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாம்பரம் அரசு மருத்துவமனையில் கிருஷ்ணன் சிகிச்சை பெற்றுவருகிறார். 

பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்படும் கடை

சென்னையை அடுத்த பம்மல், பகுதியில் மளிகை கடை நடத்திவருபவர் கிருஷ்ணன் (40). இவரின் கடை முன், ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். அவரிடம் சிலர் தகராற்றில் ஈடுபட்டனர். இந்தச் சமயத்தில் கிருஷ்ணன் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணனை தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து சங்கர்நகர் போலீஸார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கிருஷ்ணனின் கடைக்கு அந்தப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பால் வாங்கச் சென்றுள்ளார். அந்தச் சிறுமி அங்குள்ள பள்ளியில் படித்துவருகிறார். கடையிலிருந்து வீட்டுக்கு ஓடிவந்த அந்தச் சிறுமி, கிருஷ்ணன், தன்னிடம் அநாகரிகமாக நடந்ததாகச் சொல்லி கதறி அழுதுள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணனின் கடைக்குச் சென்று தகராற்றில் ஈடுப்பட்டுள்ளனர். 

பாலியல் தொல்லை கொடுத்த கடைக்காரருக்கு கத்திகுத்து

இந்தச்சமயத்தில்தான் கூட்டத்திலிருந்த ஒருவர் கிருஷ்ணனைக் கத்தியால் குத்தியுள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளோம். சிறுமி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கிருஷ்ணனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம். தற்போது கிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரிடமும் கத்திக் குத்து சம்பவம் குறித்து வாக்குமூலம் பெற்றுள்ளோம்" என்றனர். 

இதற்கிடையில் கிருஷ்ணனை யார் கத்தியால் குத்தியது என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். இதற்காக அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். அதில், கடையின் முன் பொதுமக்கள் திரண்டிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால், யார் கத்தியால் குத்தினார் என்பது சரியாக தெரியவில்லை. இதையடுத்து கிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டவர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். கிருஷ்ணனைக் கத்தியால் குத்தியவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கர் நகர் போலீஸார் தெரிவித்தனர். 

 பாலியல் தொல்லை கொடுத்ததாக கத்தி குத்துப்பட்ட கிருஷ்ணன் சிகிச்சை பெறும் மருத்துவமனை

 கிருஷ்ணன் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``பால் வாங்க வந்த சிறுமியிடம் கிருஷ்ணன் தவறாக நடந்ததாகச் சொல்லப்படுவது பொய். அவர், அப்படிப்பட்ட நபர் இல்லை. இந்தப்பகுதியில் கிருஷ்ணனை எல்லோருக்கும் தெரியும். சிலரின் தூண்டுதலின்பேரில் கிருஷ்ணன் மீது தேவையில்லாத குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. அவரை கத்தியால் குத்திய நபரை போலீஸார் கைது செய்யவேண்டும். போலீஸாரிடம் முழுவிவரத்தைச் சொல்லியுள்ளோம்" என்றனர். 

கிருஷ்ணனின் தரப்பில் பாலியல் குற்றச்சாட்டு மறுக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீஸார் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி ``பால் வாங்கச் சென்ற போது கடையில் யாரும் இல்லை. பால் வேண்டும் எனக் கடைக்காரரிடம் கேட்டேன். அதற்கு அவர் இரட்டை அர்த்தத்தில் பேசினார். அதோடு என்னிடம் அநாகரிகமாக நடக்க முயன்றார். அதனால் அங்கிருந்து வீட்டுக்கு ஓடிவந்துவிட்டேன்" என்று கூறியுள்ளார். சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.