`நான் நினைத்தால் உங்களை..!’ - தண்ணீர்ப் பிரச்னையில் இன்ஜினீயரின் மனைவியை வெட்டிய சபாநாயகரின் டிரைவர் | Chennai man attacks woman over water issue

வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (14/06/2019)

கடைசி தொடர்பு:16:04 (14/06/2019)

`நான் நினைத்தால் உங்களை..!’ - தண்ணீர்ப் பிரச்னையில் இன்ஜினீயரின் மனைவியை வெட்டிய சபாநாயகரின் டிரைவர்

சென்னை அனகாபுத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடிதண்ணீர் தகராறில் இன்ஜினீயரின் மனைவியைத் தமிழக சபாநாயகரின் கார் டிரைவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தண்ணீர் பிரச்னையில் நடந்த அடுக்குமாடி குடியிருப்பு

சென்னையை அடுத்த அனகாபுத்தூர், அமரேசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு இன்ஜினீயர் மோகன், குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவர் நேற்றிரவு மின்மோட்டார் மூலம் தண்ணீரைக் குடிநீர் தொட்டிக்கு ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் ஐயப்பன் என்கிற ஆதிமூல கிருஷ்ணன் (36), மோகனிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவரும் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். 

இந்தச் சமயத்தில் மோகனின் மனைவி சுபாஷினி அங்கு வந்துள்ளார். அவர், என் கணவரை எப்படி நீங்கள் அடிக்கலாம் எனத் தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு ஐயப்பன், `நான் யாரென்று தெரியுமா, நான் நினைத்தால் உங்களைக் கூண்டோடு உள்ளே தள்ளிவிடுவேன்' என்று மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. ஐயப்பனிடம் மோகனும் சுபாஷினியும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தபோது வீட்டுக்குள் சென்றுள்ளார் ஐயப்பன். அங்கிருந்து எடுத்துவந்த கத்தியால் சுபாஷினியைக் குத்தியுள்ளார். 

தண்ணீர் பிரச்னையில் சபாநாயகரின் டிரைவர் ஐயப்பன்

சுபாஷினியின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் உள்ளவர்கள் வந்தனர். அவர்கள் இருதரப்பினரையும் சமரசப்படுத்தினர். பிறகு, சுபாஷினியைத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி ஐயப்பனை கைது செய்தனர். 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``குடிதண்ணீர்ப் பிரச்னையில் சுபாஷினியை ஐயப்பன் கத்தியால் குத்தியுள்ளார். அதுதொடர்பாக அவரைக் கைது செய்துள்ளோம். ஐயப்பன், தமிழக சபாநாயகர் தனபாலுக்கு கார் டிரைவராகப் பணியாற்றிவருகிறார். மேலும், தலைமைச் செயலகப் பணியாளர்கள் சங்கத்திலும் உள்ளார். ஐயப்பனை கைது செய்யக் கூடாது எனப் பல தரப்பிலிருந்து எங்களுக்கு பிரஷர் வந்தது. இருப்பினும் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றனர். 

சபாநாயகரின் கார் டிரைவர் இன்ஜினீயரின் மனைவியைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.