Published:Updated:

`டாக்டர் கனவு; தலையில் துளைத்த தோட்டா!”- டெல்லி கலவரத்தில் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

Representation Image
Representation Image

அவனுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று கனவு. கோச்சிங் க்ளாஸ் சேருவதற்கு கூட முயற்சி செய்துகொண்டிருந்தான் என்கின்றனர் 15 வயது சிறுவன் அகமதுவின் நண்பர்கள்.

டெல்லியில் 15 வயது சிறுவனின் மரணம் குடும்பத்தைக் கலங்க வைத்துள்ளது. சகோதரிகளும் தாயும் அந்தச் சிறுவனின் மரணச் செய்தி கேட்டதிலிருந்து உணவு, தண்ணீரை மறந்து இருக்கின்றனர். அவர்களுக்கு சமாதானம் கூற வார்த்தைகள் இல்லை. டெல்லியின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த இத்மினான் அகமது (Itminaan Ahmad) பால் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். வெளியேறி நீண்டநேரமாகியும் அஹமது குறித்த எந்தத் தகவலும் இல்லை. மாலையில் வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய குரல் உங்கள் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறியதும் அவரது குடும்பத்தினர் பதறிவிட்டனர். குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை
AP

சிறுவனின் மாமா இர்ஷத் அகமது கூறுகையில், ``வன்முறை நடந்த பகுதிக்கு எங்க பையன் எப்போது சென்றான் என எங்களுக்குத் தெரியாது. மாலை 5.30 மணிக்கு ஒரு போன் கால் வந்தது. உங்க பையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். இதையடுத்து, அன்வர் மருத்துவமனைக்கு விரைந்தோம். தலையில் தோட்டாக்கள் துளைத்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தான்.

துப்பாக்கிக் குண்டுகள் தலையில் இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். நள்ளிரவு 12.30 மணியளவில் அகமது உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். அவனுக்கு இப்படி நடக்கும் என நினைத்துப் பார்க்கவில்லை. ரொம்பவும் அமைதியான பையன். ஸ்கூல், வீடு என்றுதான் இருப்பான். நண்பர்களுடன் எல்லாம் வெளியில் சுற்றமாட்டான். அவனுக்கு ஏன் இப்படி நடந்தது எனத் தெரியவில்லை” என்றார் கண்ணீர் மல்க.

`காதலர் தினத்தில் தொடங்கிய வாழ்க்கை கலவரத்தில் முடிந்தது!'- 11 நாளில் கணவனை இழந்த இளம்பெண்

சிறுவனின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க ஏராளமானவர்கள் அவரது வீடு அமைந்திருந்த பகுதியில் திரண்டனர். மக்கள் வெள்ளத்தில் சிறுவன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

``ஸ்கூல் முடிஞ்சதும் நாங்க எப்பவும் கிரிக்கெட் விளையாடுவோம். ஸ்கூல் இல்லாததால நாங்க யாரும் வெளியவே வரல. கடைசியா நாங்க கடந்த வெள்ளிக்கிழமைதான் பார்த்துக்கொண்டோம். அவனுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று கனவு. அதுக்கான கோச்சிங் க்ளாஸ் சேருவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தான்” என நண்பர்கள் கண்ணீர் வடித்தனர்.

Representation Image
Representation Image

``நாங்கள் எல்லாம் ஒரு குடும்பம் போலத்தான். நாங்க எல்லோரும் இங்க இருக்கோம் ஆனா அவன் மட்டும் இல்ல. அவனுக்கு இப்படி நடக்கும்னு நாங்க நினைக்கல. இதற்கு முன்பு இப்படியான கலவரத்தை நாங்கள் பார்த்ததில்லை. 1984-ம் ஆண்டு நடந்த சீக்கிய எதிர்ப்பு கலவரங்கள் கூட இப்படி பரவலாக நடக்கவில்லை. நாங்கள் அகமதுவை இழந்துவிட்டோம். இங்கு நடக்கும் இந்தக் கலவரங்களை, இறப்புகளை நாங்கள் விரும்பவில்லை” என்றனர் அப்பகுதி மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு