Published:Updated:

`குழந்தை பிறந்தாச்சு...ஊருக்கு வரப் போறாங்க...!'- அண்ணனின் காதலுக்காகக் கொல்லப்பட்ட தம்பி

அண்ணனின் காதலுக்காகத் தம்பி ஆணவக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது.

தம்பி ஜஸ்ப்ரீத்
தம்பி ஜஸ்ப்ரீத்

பஞ்சாப் மாநிலம் மன்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 55 வயதான சூரத் சிங். இவருக்கு குல்வீந்தர் சிங் மற்றும் ஜஸ்ப்ரீத் சிங் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் குல்வீந்தர் சிங் கடந்த சில வருடங்களாக தன் பக்கத்து வீட்டுப் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இரு வீட்டினருக்கும் தெரிய வந்துள்ளது. ஆனால், இருவரின் பெற்றோரும் குல்வீந்தரின் காதலுக்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை.

காதல்
காதல்

அதனால் குல்வீந்தரும் அந்தப் பெண்ணும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊரைவிட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். குடும்பத்தினரின் தொடர் எதிர்ப்பால் தற்போது அவர்கள், மன்சா மாவட்டத்துக்கு அருகில் உள்ள புட்லடா என்ற பகுதியில் வசித்து வருகின்றனர். அந்தத் தம்பதிக்கு குழந்தை பிறந்து சில நாள்களுக்கு முன்பு அக்குழந்தைக்குப் பிறந்தநாளும் கொண்டாடப்பட்டுள்ளது.

காதல் கூடாது; மகளைத் தீவைத்து எரித்து தற்கொலைக்கு முயன்ற தாய்! - நாகை அருகே சோகம்

இதற்கிடையில், தன் அண்ணன் மகனின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு வீடுதிரும்பிய 16 வயது ஜஸ்ப்ரீத் சிங், அண்ணியின் சகோதரரிடம் (ஜஷான் ப்ரீத்) சென்று குழந்தையைப் பற்றியும் விரைவில் சகோதரரின் குடும்பத்தை தன் வீட்டுக்கு அழைத்து வர இருப்பதாகவும் கூறிக் கிண்டல் தொனியில் பேசியிருக்கிறார்.

தன் சகோதரியின் திருமணத்தால் ஜஷான் ப்ரீத்தின் மொத்தக் குடும்பமும் ஜஸ்ப்ரீத்தின் குடும்பத்தின் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். அவர்கள், குல்வீந்தர் சிங்கை ஊருக்குள் நுழையவிடாமல் தடுத்து வைத்திருந்துள்ளனர்.

தீ
தீ

இந்த நிலையில், ஜஸ்ப்ரீத் சிங் கிண்டல் செய்ததால் இன்னும் கடுப்பான ஜஷான், தன் நண்பர்கள் இருவரது உதவியுடன் ஜஸ்ப்ரீத்தை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று, ஒரு தூணில் கட்டிவைத்து அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இறுதியாக அவர் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். ஜஸ்ப்ரீத் எரிவதைக்கண்ட சிலர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே ஜஸ்ப்ரீத் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, ஜஸ்ப்ரீத்தின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜஷான் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மூவரும் தலைமறைவாக இருப்பதால் அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மன்சா மாவட்ட போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை
கொலை

இது பற்றி இந்தியா டுடே ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள தந்தை சூரத் சிங், ``ஜஸ்ப்ரீத் எதுவும் அறியாதவன். அண்ணன் செய்த தவற்றுக்காக அவனைக் கொலை செய்துவிட்டனர். ஜஸ்ப்ரீத் செய்த ஒரே தவறு, தன் அண்ணனுக்குக் குழந்தை பிறந்த விஷயத்தையும் அவர்களை வீட்டுக்கு அழைத்துவரவுள்ள விஷயத்தையும் ஜஷானிடம் கூறியது மட்டும்தான்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அண்ணனின் காதலுக்காகத் தம்பி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.