Published:Updated:

`5 பேரைக் காட்டிக் கொடுத்த செல்போன் சிக்னல்'- சிறுமி வழக்கில் சிக்கிய நிஷாவின் அதிர்ச்சி பின்னணி

எஸ்.மகேஷ்

16 வயதுச் சிறுமி வழக்கில் தேடப்பட்டுவரும் 5 பேரின் விவரங்கள் கிடைத்துள்ளன. சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் சிக்னல், அவர்களை காட்டிக் கொடுத்ததாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நிஷா
நிஷா

வடசென்னையைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமிக்கு ஆதரவு கரம் நீட்டுவதைப் போல நடித்த ஜெபினா, முபினா பேகம், நிஷா ஆகிய மூன்று பெண்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனுராதா ஆகியோர் சிறுமியிடமும் கைதான பெண்களிடமும் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

Representational image
Representational image

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சிறுமி வழக்கில் கைதான நிஷா, ஜெபினா, முபினா பேகம் ஆகியோரின் நட்பு குறித்து விசாரணை நடத்தியதில் சில தகவல்கள் கிடைத்தன. நிஷாவின் உறவினர் முபினா பேகம். ஜெபினாவும் முபினா பேகமும் தோழிகள். அதனால்தான் சிறுமி, ஜெபினா வீட்டுக்கு வந்ததும் முபினா பேகம் மூலம் நிஷாவிடம் அவள் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அங்குதான் சிறுமிக்கு அந்தக் கொடுமை நடந்துள்ளது.

சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அப்போது சில பரிசோதனைகளும் நடந்தன. அந்த ரிப்போர்ட்டுக்காகக் காத்திருக்கிறோம். இதற்கிடையில் சிறுமி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் மூன்று பெண்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்.

முபினா பேகம்
முபினா பேகம்

நிஷாவின் பின்னணி குறித்து விசாரித்தபோது சில தகவல்கள் தெரியவந்தன. நிஷாவின் குடும்பத்தினர் வீட்டில் இல்லையென்றால் அங்கு சிலர் வருவார்கள். எப்போதும் நிஷாவின் வீடு பூட்டியே கிடக்கும் போன்ற தகவல்களை நிஷா குடியிருக்கும் பகுதியிலிருந்து போலீஸார் சேகரித்துள்ளனர். மேலும், நிஷாவுக்குக் குறிப்பிட்ட சிலர் வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர். போலீஸுக்குப் பயந்து குடும்ப செட்டப்பில் நிஷா, பாலியல் தொழில் செய்துவந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நிஷாவின் முழு விவரங்களை சேகரித்து அதைக் காவல்துறை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளோம்.

சிறுமி வழக்கில் நிஷாவுக்குத் தெரிந்த 5 பேரை தேடிவருகிறோம். அவர்கள் குறித்து நிஷாவிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அவர் தெரிவித்தார். இதனால் நிஷாவின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது 5 பேரில் 3 பேரின் விவரங்கள் தெரியவந்துள்ளன. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

ஜெபினா
ஜெபினா

மீதமுள்ள 2 பேர் யாரென்று விசாரித்தபோது நிஷாவின் வீட்டுக்கு அடிக்கடி வரும் ஒருவர் எனத் தெரியவந்தது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவர் தலைமறைவாகியுள்ளார். அவரின் செல்போன் சிக்னல் மூலம் பதுங்கியிருக்கும் இடத்தைக் கண்டறிந்து சென்றபோது அவர் தப்பிவிட்டார். இன்னொருவர் வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது.

இதற்கிடையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த வீடியோ, யாரிடம் உள்ளது என்று தீவிரமாக விசாரித்துவருகிறோம். சிறுமியின் வீடியோ வெளியாகாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சிறுமி மூலம் கிடைத்த பணத்தை ஜெபினா, முபினா பேகம், நிஷா ஆகியோர் பங்கு போட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. ஆனால், அது உண்மையில்லை. மேலும், சிறுமிக்கு 350 ரூபாய் மதிப்பில் புதிய சுடிதாரை வாங்கிக் கொடுத்துள்ளனர். செலவுக்கும் சில நூறு ரூபாய்களை கொடுத்த நிஷா, சிறுமியை ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Representational image
Representational image

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான கவுன்சலிங் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை. சிறுமியின் குடும்பத்தினரிடம் அவளின் நடவடிக்கைகள் குறித்து சில தகவல்களை கேட்டறிந்துள்ளோம். மேலும், இந்தச் சிறுமியைப் போல வேறு யாராவது நிஷாவிடம் சிக்கியுள்ளார்களா என்றும் விசாரணை நடத்திவருகிறோம்" என்றார்.