Published:Updated:

16 வயது சிறுமி... 4 ஆண்டுகளாகத் தொடர்ந்த பாலியல் கொடூரம்...

பாலியல் கொடூரம்..
பிரீமியம் ஸ்டோரி
பாலியல் கொடூரம்..

ஈவு இரக்கமற்ற அரக்கர்கள் திருந்துவது எப்போது?

16 வயது சிறுமி... 4 ஆண்டுகளாகத் தொடர்ந்த பாலியல் கொடூரம்...

ஈவு இரக்கமற்ற அரக்கர்கள் திருந்துவது எப்போது?

Published:Updated:
பாலியல் கொடூரம்..
பிரீமியம் ஸ்டோரி
பாலியல் கொடூரம்..
எத்தனைவிதமான பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டுவந்தாலும், பாலியல் வதைக்கு ஆளாகும் சிறார்களைப் பாதுகாக்க முடியாத நிலைதான் நம் நாட்டில் இன்னமும் இருக்கிறது. சமீபத்திய சாட்சியாக, நான்கு வருடங்களாகப் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமியொருவர், பாலியல் தரகர்களிடமிருந்து மீட்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 16 வயதேயான அந்தச் சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை உணர முடியாத அளவுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சிதைந்து போயிருக்கிறாள். மருத்துவச் சிகிச்சையிலிருக்கும் அந்தச் சிறுமிக்கு, உளவியல் சிகிச்சையும் தற்போது அளிக்கப்பட்டுவருகிறது. ஈவு இரக்கமின்றி சிறுமியை நரகத்தில் தள்ளிய ஐந்து பெண் தரகர்கள், போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பரபரப்பான மதுரை மாநகரத்தில், பிழைப்பதற்குச் சரியான வழியில்லாமல் விளிம்புநிலையில் வாழ்ந்துகொண்டிருந்த அந்தக் குடும்பத்தில் மொத்தம் ஐந்து குழந்தைகள். வறுமை வாட்டியெடுக்க, வாழ்வதற்கு வழி தெரியாத தந்தை தற்கொலை செய்துகொள்கிறார். குடும்பத் தலைவனை இழந்த அந்தக் குடும்பம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகிறது. மன நோயாளியாகிறார் தாய். உற்றார் உறவினர்களும் கண்டுகொள்ளாத நிலையில், திக்கற்று போகிறார்கள் குழந்தைகள். இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் கிடைத்த வாழ்க்கையைத் தேடிச் சென்றுவிட, ஆதரவற்று நின்ற 11 வயது சிறுமியை, தந்தையின் சகோதரியான ஜெயலட்சுமி அழைத்துச் செல்கிறாள். இது எதையுமே அறியாமல் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலிருக்கிறார் தாய்.

ஹேமா மாலா
ஹேமா மாலா

பாலியல் தொழில் மூலம் வருமானம் ஈட்டி வந்த ஜெயலட்சுமி, சிறுமியை வியாபாரப் பொருளாக்கத் திட்டமிடுகிறாள். சிறு வயதில் சாப்பிடக் கிடைக்காத உணவுகளையும், பானங்களையும், ஆடைகளையும் வாங்கிக் கொடுக்கும் ஜெயலட்சுமியின் செயலால் அப்பாவியாக ஏமாந்து, அவளுக்குக் கட்டுப்படத் தொடங்குகிறாள் சிறுமி. மது குடிக்கவும் பழக்கப்படுத்தப்படுகிறாள். ஒருகட்டத்தில், தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டவளாக மாறிப்போன அந்தப் பிஞ்சை, பாலியல் வெறிபிடித்த மனித மிருகங்களை அழைத்து வந்து நாசமாக்கத் தொடங்குகிறாள் ஜெயலட்சுமி.

ஆதரவில்லாத நிலையில், தனக்கு என்ன நேர்கிறது என்பதை அறியாத வயதிலிருக்கும் சிறுமிக்குப் பசிக்கு உணவு, உடுத்த உடை, தங்க இடம் ஆகியவை கொடுக்கப்பட்டு, வளர்ப்பு பிராணிபோல பயிற்றுவிக்கப்படும் கொடுமை தொடர்கிறது. மதுரையின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அழைத்து செல்லப்படுகிறாள். ஜெயலட்சுமி மட்டுமல்லாமல், அவளின் தோழிகளான நான்கு பெண் தரகர்களும் சிறுமியைப் பாலியல் படுகுழியில் தள்ளிவந்திருக்கிறார்கள். இப்படி, கடந்த நான்கு வருடங்களாகச் சிக்கி சிதைந்துகொண்டிருந்த நிலையில்தான், மதுரை மாநகர காவல்துறையின் தனிப்பிரிவான ஆள்கடத்தல் மற்றும் விபசார தடுப்பு பிரிவினர் சிறுமியை மீட்டிருக்கிறார்கள்.

16 வயது சிறுமி... 4 ஆண்டுகளாகத் தொடர்ந்த பாலியல் கொடூரம்...
globalmoments

அந்தப் பிரிவின் இன்ஸ்பெக்டர் ஹேமா மாலாவிடம் பேசினோம். ‘‘அந்தச் சிறுமியைப் பார்க்கவே கொடுமையா இருக்குது. அவளை அந்தக் கும்பல்ல இருந்து மீட்டுட்டு வந்து விசாரிச்சப்ப, ‘என்னை விட்டுடுங்க. நான் நிம்மதியா வாழ்ந்துக்கறேன். நான் விரும்பித்தான் இதையெல்லாம் செய்யறேன்’னு சொல்றா. அந்த அளவுக்கு அவளை அந்தக் கும்பல் அடிமைப்படுத்திவெச்சிருக்கு. ஆதரவில்லாத நிலையில தன் அத்தையோட போனவளுக்கு, ரெண்டு செல்போன் உட்பட அவள் விரும்புற பொருள்களை வாங்கிக் கொடுத்தும், செலவுக்குப் பணம் கொடுத்தும் ஆடம்பர வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்தி அவளோட மனநிலையை மாத்தி வெச்சிருக்காங்க. இப்படியெல்லாம் செய்யறது அந்தச் சிறுமிக்கு எந்தவிதக் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தலை. தான் செய்யறது தப்பே இல்லைனு நினைக்குற அளவுக்கு அவளை செக்ஸ் அடிக்ட்டா மாத்திட்டாங்க.

கைதான தரகர்கள்
கைதான தரகர்கள்

அந்தச் சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கணும். இப்போ அவளுக்கு 16 வயசாகுது. இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அவளைப் பத்திரமா பார்த்துக்கணும். சிறுமியைப் பாழாக்கின ஜெயலட்சுமி உள்ளிட்டவங்க பல ஆண்டுகளா பாலியல் தொழில் தரகர்களா செயல்பட்டுக்கிட்டு வர்றாங்க. அவங்களை எத்தனை முறை பிடிச்சு ஜெயிலுக்கு அனுப்பினாலும், வெளியில வந்து மறுபடியும் தொழிலை ஆரம்பிச்சிடறாங்க. தன்னை வன்கொடுமை செஞ்ச நபர்களைப் பத்தி அந்தச் சிறுமி சொன்னாத்தான் நடவடிக்கை எடுக்க முடியும். அதைப் பத்தி அனைத்து மகளிர் காவல் பிரிவினர் தனியா விசாரிச்சுட்டு இருக்காங்க’’ என்றவரிடம்,

‘‘மதுரையில் பாலியல் தொழிலும், சிறார் வதைகளும் அதிகரித்துவிட்டனவே?’’ என்று கேட்டோம். ‘‘மதுரையில ஹைடெக்கா இந்தத் தொழிலை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்காக மூணு ஆப்களை உருவாக்கியிருக்காங்க. அந்த நபர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துக்கிட்டிருக்கோம். எங்களைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்டவங்க புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். பெரும்பாலும் குடும்பச் சூழலாலதான் பல பெண்கள் இதுல வந்து மாட்டிக்கிறாங்க. இந்த வருஷம் மட்டும் பாலியல் தொழில்ல கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்ட, ஆதாயத்துக்காகக் கடத்தப்பட்ட 60-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகளை மீட்டிருக்கோம்’’ என்றார்.

மனநல சிகிச்சை வழங்கப்பட வேண்டியது மீட்கப்பட்ட சிறுமிக்கு மட்டுமல்ல... பிஞ்சென்றும் பாராமல் அச்சிறுமியைப் பாலியல் வேட்கைக்குப் பயன்படுத்திய அத்தனை பேருக்கும் கண்டிப்பாக மனநல சிகிச்சை தேவை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism