
கரூரில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 18-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பல லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்த பணத்தில் சொகுசு வீடு கட்டியும் சொகுசு கார்கள் சகிதமாக உலாவி வந்த வணிகவரித்துறை ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறிய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் டிவன்காந்த். 39 வயதான இவர், கரூர் வணிக வரித்துறை அலுவலகத்தில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். கரூர் மாவட்டத்தில் 18-க்கும் மேற்பட்ட நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களிடம் பல லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியுள்ளார். கரூர் தான்தோன்றிமலைப் பகுதியைச் சேர்ந்த சுந்தரவடிவேலு என்பவரின் மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக அவரிடம் ஐந்து லட்சம் பணம் வாங்கியுள்ளார் டிவன்காந்த். அதேபோல், வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரிடம் இதே, `அரசு வேலை வாங்கித் தருகிறேன்' என்ற புரூடாவை விட்டு, அவரிடமும் ரூபாய் ஐந்து லட்சத்தை கறந்திருக்கிறார். இதுபோல், பலரிடமும் இதே கப்ஸாவை விட்டு, ஐம்பது லட்சத்துக்கு மேல் பணத்தைப் பெற்றுள்ளார். ஆனால், பணத்தைக் கொடுத்தவர்களுக்கு தான் கொடுத்த வாக்குறுதிபடி அரசு வேலை வாங்கித்தராமல் டிமிக்கிக் கொடுத்துள்ளார் டிவன்காந்த்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனால், பாதிக்கப்பட்டவர்கள் கரூர் நகர காவல்நிலையத்தில் டிவன்காந்த் மீது மோசடி புகார் அளித்தனர். வழக்கைப் பதிந்து, டிவன்காந்தை கைது செய்தனர் போலீஸார். ஆனால், கைது செய்யப் போன இடத்தில் போலீஸாரிடம், ``நான் யாரு தெரியுமில்லே. என்னையே கைது செய்றீங்களா, நான் ஒரு போன் போட்டா போதும். மொத்த போலீஸும் தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்தப்படுவீங்க" என்று ஏக சவுண்ட் விட்டிருக்கிறார். இதனால், போலீஸார் தங்களது வழக்கமான ட்ரீட்மென்டை செய்ய, கப்சிப் என்று அடங்கி இருக்கிறார் டிவன்காந்த்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், டிவன்காந்த் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி 18 நபர்களை ஏமாற்றியிருப்பதாகத் தெரிகிறது. இப்படி பொய் சொல்லி சம்பாதித்த பணத்தில் டிவன்காந்த், தான்தோன்றிமலைப் பகுதியில் புதிய சொகுசு வீடு கட்டி வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல், அந்தப் பணத்தில் டிவன்காந்த் வாங்கிய இரண்டு சொகுசு கார்களையும் கரூர் நகர போலீஸார் மீட்டனர்.
இதேபோல், கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவரும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரை ஏமாற்றி வந்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் அவர்மீது கொடுத்த புகாரின் அடிப்படையில், மாயனூர் காவல்துறையினர் அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.