Published:Updated:

கோவையில் காதலியை நடுரோட்டில் கத்தியால் குத்திய காதலன் - பிரேக் அப் செய்ததால் ஆத்திரம்!

எம்.புண்ணியமூர்த்தி
கோவையில் காதலியை நடுரோட்டில் கத்தியால் குத்திய காதலன் - பிரேக் அப் செய்ததால் ஆத்திரம்!
கோவையில் காதலியை நடுரோட்டில் கத்தியால் குத்திய காதலன் - பிரேக் அப் செய்ததால் ஆத்திரம்!
கோவையில் காதலியை நடுரோட்டில் கத்தியால் குத்திய காதலன் - பிரேக் அப் செய்ததால் ஆத்திரம்!

கல்லூரி காலத்தில் தன்னைக் காதலித்த இளம்பெண், கருத்து வேறுபாடு காரணமாக காதலை முறித்துக்கொண்டதால் ஆத்திரமடைந்த காதலன் அந்தப் பெண்ணை நடுரோட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்ய  முயன்ற  சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் செயல்பட்டுவருகிறது தனியார் கணினி பயிற்சி மையம். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். நேற்று மாலை 7.30 மணியளவில் இந்த மையத்தில் கணினி பயிற்சியை முடித்துவிட்டு வெளியே வந்த சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற மாணவியை சுரேஷ் என்கிற இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றுள்ளார். அருகிலிருந்த மாணவர்கள் நொடிப்பொழுதில் சுதாரித்து சுரேஷைத் தடுத்து அமிர்தாவைக் காப்பாற்றியிருக்கிறார்கள். இதில், சந்தியாவும் கத்திக் குத்தைத் தடுக்க முயன்ற  மாணவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பித்தனர். அவர்களுக்கு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சுரேஷ் போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து கோவை ஆர்.எஸ் புரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் பேசினோம், ``சந்தியாவும், சுரேஷும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கல்லூரி காலத்தில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்பு இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சந்தியா, சுரேஷிடம் பழகுவதைத் தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், சந்தியாவைக் கொலை செய்யும் நோக்கில் இன்று கத்தியால் குத்தியுள்ளார். சந்தியாவைக் கொலை செய்வதற்காக சுரேஷ் கொண்டு வந்த கத்தி, அவர் வேலை பார்த்த இடத்தில் சந்தியாவைக் கொலை செய்வதற்காக அவரே தயார் செய்து எடுத்து வந்த கத்தி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடர்ந்து வருகிறோம்'' என்றனர்.