Published:Updated:

`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்!' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்

எஸ்.மகேஷ்
`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்!' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்
`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்!' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்

சென்னையில், மூதாட்டிகளிடம் அன்பாகப் பேசி, அவர்களிடமிருந்து தங்க நகைகளை வழிப்பறி செய்துள்ளார், ஒரு ஆட்டோ டிரைவர். நீங்கள் ஆசீர்வாதம் செய்தால், 1000 ரூபாய் கிடைக்கும் என்று கூறி அவர்களை நம்பவைத்து ஏமாற்றியுள்ளார். 

`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்!' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்

சென்னை செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், நீலாங்கரை, திருவான்மியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் முதாட்டிகளைக் குறிவைத்து வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து, அடையாறு துணை கமிஷனர் செசாங்சாய் உத்தரவின்பேரில்,  உதவி கமிஷனர் லோகநாதன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமாா் தலைமையில்,  தலைமைக் காவலர்கள் புஷ்பராஜ்,  தாமோதரன், போலீஸார் வெங்கடேஸ்வரன், கண்ணன்  ஆகியோா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், சம்பவம் நடக்கும் இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது, ஆட்டோ ஒன்றில் மூதாட்டிகள் அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் பதிவாகியிருந்தன. ஆட்டோ நம்பரை வைத்து டிரைவரை போலீஸார் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்!' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,  ``தினமும் மாலை நேரத்தில் வீட்டு வாசல் மற்றும் கடைகளில் அமர்ந்திருக்கும் வயதானவா்களை ஆட்டோடிரைவா் சுந்தர் அழைத்துச்செல்வது விசாரணையில் தெரியவந்தது. சுந்தர், ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர். இவர், வயதானவர்களிடம் அன்பாகப் பேசி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். `பணக்காரர் ஒருவர் வீட்டில் கிரகப்பிரவேசம் நடக்கிறது. அவர்களை நீங்கள் ஆசீர்வாதம் செய்தால், ஆயிரம் ரூபாய் உங்களுக்கு தருவார். அதனால்தான் உங்களை அழைத்துச் செல்கிறேன்' என்று சுந்தர் கூறுவார். அவரின் பேச்சை நம்பி சென்றவர்களிடம், தங்க நகைகளைக் கத்தி முனையில் பறித்துக்கொண்டு சுந்தர் தப்பிவிடுவார். அவரிடமிருந்து 72 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்துள்ளோம். சுந்தர் மீது திருவல்லிக்கேணி, ஐ.சி.எஃப், ஆயிரம் விளக்கு ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்றனர். 

Vikatan