கடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்கிய பீடி இலை மூட்டைகள் - ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை!

கடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்கிய பீடி இலை மூட்டைகள் - ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை!
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் மூட்டை மூட்டையாகப் பீடி இலை கரை ஒதுங்கியுள்ளன. இவை இலங்கைக்குக் கடத்திச் செல்ல இருந்தவையா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை ஏராளமான சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கிக் கிடந்தன. இது குறித்து தகவலறிந்த போலீஸார் அவற்றைச் சோதனையிட்ட போது அந்த மூட்டைகளில் பீடி தயாரிக்கப் பயன்படும் இலைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கீழக்கரை அருகே உள்ள கடலோரப் பாதுகாப்புக் குழுமக் காவல் நிலையம் அருகே மேலும் 3 மூட்டை பீடி இலைகள் கரை ஒதுங்கின. இதே போல் தனுஷ்கோடி துறைமுகப் பகுதியில் சிதறிய நிலையில் ஏராளமான பீடி இலைகள் கரை ஒதுங்கிக் கிடந்தன. இவற்றையும் கைப்பற்றிய கடலோரக் காவல் குழும போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்கிய இந்தப் பீடி இலை மூட்டைகள் இலங்கைக்குக் கடத்தி செல்லப்பட இருந்தவையாக இருக்கும் எனவும், பீடி இலைகளைப் படகு மூலம் கடத்திச் செல்லும் போது பாதுகாப்புப் படையினர் வந்த காரணத்தினால் இவற்றைக் கடத்தல்காரர்கள் கடலில் வீசிச் சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே இலங்கை தலைமன்னார் கடற்கரைப் பகுதியில் இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 939 கிலோ எடை கொண்ட பீடி இலை மூட்டைகள் இலங்கைக் கடற்படையினரிடம் பிடிபட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து இலங்கை மற்றும் இந்தியக் கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து பீடி இலை மூட்டைகள் கடத்திச் செல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.