Published:Updated:

புத்தகத்துக்குள் கத்தி... தப்பி ஓடாத மாணவன்!

ஆசிரியர் அதிர்ச்சிக் கொலை

புத்தகத்துக்குள் கத்தி... தப்பி ஓடாத மாணவன்!

ஆசிரியர் அதிர்ச்சிக் கொலை

Published:Updated:
##~##

சில சமயங்களில், கற்பனைக் கதை​​களைவிட உண்மை விசித்திரமாகவும் விபரீத​மாகவும் இருப்பது உண்டு. பள்ளி மாணவன் ஒருவனின் செயல், அந்த ரகம். 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எதிரில் உள்ள ஆர்மேனியன் தெருவில் இருக்கிறது செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி. இந்தப் பள்ளியில் அறிவியல் மற்றும் ஹிந்தி ஆசிரியையாக பணியாற்றியவர் உமா மகேஸ்வரி. கடந்த வியாழன் அன்று காலை, வழக்கம்போல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹிந்தி சொல்லிக் கொடுக்க வகுப்பறைக்குள் நுழைய... முகமது இர்ஃபான் என்ற மாணவன்  மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியை உமா மகேஸ்வரியை சரமாரியாகக் குத்தி இருக்கிறான். அலறியடித்து வெளியே ஓடிவந்த மாணவர்கள், மற்ற ஆசிரியர்களிடம் தகவலை தெரிவித்துக் காப்பாற்ற முயற்சிப்பதற்குள், உமா மகேஸ்வரியின் உயிர் பிரிந்துவிட்டது. அடுத்த சில நிமிடங்களில் இந்த விஷயம் தமிழகம் முழுவதும் காட்டுத்தீயாக பரவ, நாம் சம்பவ இடத்துக்கு விரைந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புத்தகத்துக்குள் கத்தி... தப்பி ஓடாத மாணவன்!

என்னதான் நடந்தது என்று ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சிலரிடம் கேட்டோம்.

''உமா மகேஸ்வரி டீச்சர் ரொம்ப நல்ல​வங்க. எல்லா பசங்ககிட்டேயும் அன்பா இருப்​பாங்க. அந்த முகமது இர்ஃபான், ஹிந்தி சரியாவே படிக்க மாட்டான். டீச்சர் கொடுக்குற ஹோம் வொர்க்கும் செய்றதில்லை. நிறையமுறை வார்ன் பண்ணிப் பார்த்தாங்க. அவன் காதுலயே வாங்கலை. ரெண்டு நாளைக்கு முன்னாடி இர்ஃபானின் ரிமார்க் நோட்டில், 'உங்க பையன் சொல்பேச்சு கேக்குறது இல்லை. பெற்றோர் வந்து என்னைச் சந்திக்கவும்’னு உமா மகேஸ்வரி டீச்சர் எழுதி அனுப்பினாங்க. அப்ப இருந்தே இர்ஃபான் யார்​கிட்டேயும் சரியாப் பேசுறது இல்லை.

இன்னைக்கு காலைல மூணாவது பீரியட் எடுக்கிறதுக்​காக உமா மகேஸ்வரி டீச்சர் வந்தாங்க. புத்தகத்துக்குள் கத்தியை மறைச்சி வெச்சிட்டு, டீச்சர் பக்கத்துல போன இர்ஃபான், திடீர்னு கத்தியை எடுத்து அவங்க வயித்துல குத்திட்டான். டீச்சர் அலறிக்கிட்டே அவன்கிட்ட இருந்து தப்பிக்கப் பார்த்தாங்க. ஆனா, விடாமத் துரத்தி குத்தினான்...அதனால அப்படியே சரிஞ்சிட்டாங்க. எங்க சார் எல்லாரும் போலீ​ஸுக்குத் தகவல் சொல்லிட்டு டீச்சரை பக்கத்துல இருக்குற நேஷனல் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனாங்க. ஆனா, அதுக்குள்ள செத்துட்டாங்களாம். டீச்சரைக் குத்துன இர்ஃபான் எங்கேயும் தப்பிச்சி ஓடாம, அமைதியா தலை குனிஞ்சபடி எங்க கிளாஸ் பெஞ்சிலயே உட்கார்ந்து இருந்தான். நாங்க யாரும் அவன் பக்கத்துலயே போகலை. போலீஸ் வந்து அவனைக் கூட்டிட்டுப் போனாங்க. அப்பவும் அவன் முகத்துல எந்தப் பயமும் இல்லை'' என்று மிரட்சியுடன் பேசினார்கள்.

புத்தகத்துக்குள் கத்தி... தப்பி ஓடாத மாணவன்!

சம்பவம் நடந்த அந்த வகுப்பறையைப் பார்க்கச் சென்றோம். வெளியில் போலீஸ் காவலுக்கு நிற்க... ஆங்காங்கே ரத்தக்கறைகள். உமா மகேஸ்வரி விழுந்த இடம் சாக்பீஸால் மார்க் செய்யப்பட்டு இருந்தது.

பள்ளி நிர்வாகிகளில் ஒருவரான பாதிரியார் போஸ்கோவிடம் பேசினோம். ''இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. உமா மகேஸ்வரி டீச்சரின் மரணம் எங்கள் அனைவருக்கும் வேதனை​யைத் தருகிறது. அவருக்கு இரண்டு குழந்தைகள். அந்தக் குடும்பத்துக்கு நாங்கள் எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை'' என்றார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை உதவி ஆணையர் முரளி, ''பள்ளியில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நாங்களே எதிர்

பார்க்​கவில்லை. சிறுவன் முகமது இர்ஃபானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கெல்லீஸில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப் போகிறோம்'' என்றார்.

இந்த சம்பவம் மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாடம்.

- தி.கோபிவிஜய்

படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism