Published:Updated:

உங்க ஷூட்டிங் அந்தப் பக்கம்.. எங்க ஷூட்டிங் இந்தப் பக்கம்!

பிரபாகரன் நகைச்சுவை

உங்க ஷூட்டிங் அந்தப் பக்கம்.. எங்க ஷூட்டிங் இந்தப் பக்கம்!

பிரபாகரன் நகைச்சுவை

Published:Updated:
##~##

ரு திரைப்படத்துக்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கூட்டம் போட்டு ஒன்று சேர்ந்தது, 'உச்சிதனை முகர்ந்தால்’ படத்துக்காகத்தான் இருக்கும்! 

இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் இயக்கிய இந்தப் படம், சிங்கள ராணுவ வெறியர்களால், கும்பலாக வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது தமிழ்ச் சிறுமியின் கதையை மையமாகக் கொண்டது. கடந்த டிசம்பர் 16-ம் தேதி வெளியாகி, ஒரு வாரம் ஓடியநிலையில், தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு விட்டது. தொழில் பிரச்னைகளுடன் கண்ணுக்குத் தெரியாத சக்தி​களின் தலையீடும் இருந்தது. இதையடுத்து, ஈழத்து இனப்படுகொலையை நினைவூட்டும் இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்று, திரையுலகக் கலைஞர்​களுடன் அரசியல் கட்சியினரும் கை​கோர்த்தனர். அதன் ஒருபகுதியாக, கடந்த 8-ம் தேதி சென்னை தியாகராயர் நகரில், 'உச்சிதனை முகர்ந்தால்’ படத்தின் மறுவெளியீட்டு விழாக்கூட்டம் நடந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்க ஷூட்டிங் அந்தப் பக்கம்.. எங்க ஷூட்டிங் இந்தப் பக்கம்!

படத்தின் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், கர்நாடகத் தமிழ் இயக்குநர் கணேசன், இயக்குநர் கௌதம், கவிஞர் காசிஆனந்தன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூத்த தலைவர் தீரன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, இந்தப் படத்துக்கு வசனம் எழுதிய தமிழருவி மணியன் ஆகியோர் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்கள்.

உங்க ஷூட்டிங் அந்தப் பக்கம்.. எங்க ஷூட்டிங் இந்தப் பக்கம்!

பட்டெனப் பேசிய பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.ராசேந்திரன், ''வேற்று மொழிக் குறிப்புகளுடன் இந்தியா முழுவதற்கும் இந்தப் படத்தை கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்'' என்று யோசனை தெரிவித்தார். அடுத்துப் பேசிய திரைப்படப் பாடலாசிரியர் தாமரை, ''ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கே பெரும் போராட்டம் நடத்தவேண்டி இருக்கிறது. அதன் பிறகு, அதை வெளியிடுவதற்கு ஒரு போராட்டம். அதுவும் தமிழ் இனத்தின் மீதான பெரும் இனப்படுகொலை பற்றிய படத்தை வெளியிட, இரண்டு முறை போராட வேண்டியிருக்கிறது என்றால், என்ன கொடுமை இது?'' என்று கொதித்தார்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, ''கடந்த 2003-ல் புகழேந்தி,

உங்க ஷூட்டிங் அந்தப் பக்கம்.. எங்க ஷூட்டிங் இந்தப் பக்கம்!

விடுதலைப் புலிகள் ஆட்சி நடத்திய தமிழீழ அரசுப் பகுதிக்குச் சென்று, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை சந்தித்தார். அப்போது அவரிடம் புகழேந்தி, 'காற்றுக்கென்ன வேலி’ படத்தை தமிழீழப் பகுதியில் படம் பிடிக்க அனுமதி கேட்டார். பிரபாகரனோ, 'நீங்கள் அனுமதி கேட்கத்தான் வேண்டுமா. தாராளமாகச் செய்யுங்கள்’ என்றார். அந்தப் படத்தின் 70 சதவிகிதக் காட்சிகள் அங்குதான் எடுக்கப்பட்டன. ஒருவேளை போர் வந்துவிட்டால் என்ன செய்வது என்று பிரபாகரனிடம் புகழேந்தி கேட்டார். அதற்கு பிரபாகரன், 'ஒரு பக்கம் உங்கள் ஷூட்டிங் நடக்கட்டும், இன்னொரு பக்கம் எங்களின் ஷூட்டிங் நடக்கும்’ என்று நகைச்சுவையாகச் சொன்னாராம்'' என்று மலரும் நினைவுகளைச் சொன்னபோது, பலத்த கைதட்டல்.

சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி​யின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவருமான நல்லகண்ணு பேசத் தொடங்கியதுமே, கூட்டத்தில் உணர்ச்சிமயம். ''உச்சிதனை முகர்ந்தால் படம் பார்த்தேன். பத்து நிமிடம் அழுதேன். வெளியில் வந்த பிறகு, படத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியாக நடித்த பிள்ளை வந்திருப்பதாகச் சொன்னார்கள். என் பேத்தி மாதிரி இருந்தது, அந்தப் பிள்ளை. யுத்தம் ஈழத்து தமிழ்ப் பெண்களை என்ன பாடு படுத்தியிருக்கிறது? பெரும்பாலான ராணுவத் தாக்குதல்களில் பாதிக்கப்படுவது, பெண்கள்தான். ஈழத்தில் சிங்கள இனவெறியர்களின் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமையை இந்தப் படத்தில் பார்க்கும்போது, நெஞ்சை உலுக்குகிறது. ஈழத்தில் இனவெறியர்களால் அம்மாவும் மகளும் கும்பல் வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட காட்சிகள், மனித மனதைக் குடையக்கூடியவை. ராணுவத்தை எதிர்த்துப் போராடும் பெண்களைக் கொடுமைப்படுத்தும்போது, அந்த சந்ததி அழிந்துவிடும். அரசு தடுத்தாலும் அதிகாரிகள் தடுத்தாலும் இந்தப் படத்தை மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு பார்த்து, வெற்றிபெற வைக்கவேண்டும். ஊருக்கு ஊர் போய் மக்கள் மத்தியில் போடும் நிலைக்கும் தயாராக இருக்கவேண்டும். இதை எடுபடவிடாமல் தடுக்கும் சூழ்ச்சிகளைத் தோற்கடிக்கவேண்டும்'' என்று அறைகூவல் விட்டார்.

இறுதியாகப் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப் போராட்டங்கள் தொடர்பான உலகத் திரைப்​படங்கள், பழைய தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி, சொல்லிக்கொண்டே போனவர், 'உச்சிதனை முகர்ந்தால்’ படத்தைப் பற்றி காட்சி காட்சியாக விவரித்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.  

இந்தப் படத்தில் இடம்பெற்ற ஈழத்து கலைஞர் பிரேம் குழுவினரின் நடனத்தில் காசி ஆனந்தனின், 'என் பிள்ளையை அவர்கள் மண்ணில் புதைத்தார்கள், அவன் தாய் மண்ணை அவர்கள் எங்கு புதைப்பார்கள்’ என்று பாடப்பட்டபோது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த வந்த போலீஸ்காரர்களும் கலங்கித்தான் போனார்கள்!

- இரா. தமிழ்க்கனல்

படங்கள்: என்.விவேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism