Published:Updated:

ராஜாஜி வாழ்க்கை வரலாறு

ஜூ.வி. நூலகம்

ராஜாஜி வாழ்க்கை வரலாறு

ஜூ.வி. நூலகம்

Published:Updated:

ராஜ்மோகன் காந்தி -  தமிழில்: 'கல்கி’ ராஜேந்திரன்,வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. விலை

ராஜாஜி வாழ்க்கை வரலாறு

.475  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காத்மா காந்தியின் மகன் தேவதாஸுக்கும் மூதறிஞர் ராஜாஜியின் மகள் லட்சுமிக்கும் மகனாகப் பிறந்தவர் ராஜ்மோகன் காந்தி. அதனால்தான் காந்தியின் சத்தியமும், ராஜாஜியின் தர்க்கமும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. அதனாலேயே விமர்சிக்கத்தக்கதாய் இருக்கிறது.

ராஜாஜி வாழ்க்கை வரலாறு

'எனக்கு வாரிசாக விளங்கக்கூடியவர் அவர் ஒருவர்தான்’ என்று (பின்னால் இதை வாபஸ் வாங்கிவிட்டார்!) காரைக்குடி கூட்டத்தில் காந்தி​யால் ஆசீர்வதிக்கப்பட்டவர் ராஜாஜி. இவரது மனைவி அலமேலு மங்கம்மாள், சிறு வயதிலேயே இறந்து​போனார். அதற்குப் பிறகுதான் ராஜாஜியின் தீவிர அரசியல் ஆரம்பமாகிறது. அந்தக் காலத்திலேயே ஒரு வழக்குக்கு ஆயிரம் ரூபாய் வாங்கக்கூடியவராகவும்... சேலம் ரயில் நிலையத்தில் இறங்கினால் பெட்டி தூக்குபவருக்கு ஒரு ரூபாய் கட்டணமும் கொடுக்கக்​கூடியவராகவும் இருந்த ராஜாஜி, பிரிட்டிஷ் எதிர்ப்பு அரசியலில் இறங்கினார். 95-வது வயது முடிந்த இரண்டாவது வாரம் இறந்துபோனார். இளமையிலேயே முகத்தில் முதுமை வந்தது. ஆனால் முதிய வயதிலும் இளைஞராகவே வலம் வந்தார்.

காந்தியைப் பார்த்து அரசியலுக்கு வந்தவர் ராஜாஜி. ஆனால், காந்தியுடன் பல விஷயங்களில் முரண்பட்டுப் பிரிந்தவர். பெரியாரும் அவரும் ஒன்றாகக் கதர் பிரசாரம் செய்தவர்கள். ஆனால், கடைசி வரைக்கும் எதிரிகள். 'நீங்கள் என்னோடுதான் இருக்க வேண்டும்’ என்று டெல்லியிலேயே ராஜாஜி இருக்குமாறு பதவிகளை உருவாக்கிக் கொடுத்தவர் நேரு. ஆனால், நேருவை எதிர்த்தே கட்சி தொடங்கினார். சத்தியமூர்த்தியின் சிஷ்யர் என்பதால் இவருக்கு காமராஜரையும் ஆகாது. ஆனால், கடைசியில் அவரோடு கை கோர்த்தார். 'கம்யூனிஸ்ட்டுகள்தான் முதல் எதிரி’ என்றார். அவர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டார்.  இத்தனைக்கும் அடிப்படை சுய லாபம் அல்ல. சுயசிந்தனையாளராக இருந்ததால்தான் ராஜாஜியால் ஒரே மாதிரி செயல்பட இயலவில்லை என்றே புரிந்துகொள்ள வேண்டி உள்ளது.

##~##

சென்னை ராஜதானியின் பிரதம மந்திரி ஆனதும் போட்ட முதல் உத்தரவு, சிறைக் கைதிகளுக்கு மோர் கொடுக்க வேண்டும் என்பதுதான். இறப்புக்கு சில மாதங்களுக்கு முன், முதல்வர் கருணாநிதி வீட்டுக்குச் சென்று ஒரு மழை நாளில், 'சாராயக் கடைகளை மட்டும் திறந்து விடாதீர்கள்’ என்று கெஞ்சியது அவரது கடைசி ஆசை. ஒரு சமூகத்துக்கு நல்லதையும் கெட்டதையும் ஒருசேர யோசித்த ஒரு சில தலைவர்களில் ராஜாஜியும் ஒருவர். 'ஐம்பது ஆண்டுகள் போராடிப் பெற்ற சுதந்திரம் என்பது வெறும் லஞ்ச ஊழலாக முடிந்து போனால், அதைவிடச் சோகம் வேறு என்ன?’ என்று ராஜாஜி அன்று கேட்ட கேள்வி, இன்றும் கேட்க வேண்டிய கேள்வியாகவே இருக்கிறது.

இந்த மனிதரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது... அயராத உழைப்பும் தனது சிந்தனையை யாருக்காகவும் சிறைப்படுத்திக்கொள்ளாத தைரியமும். ''நான் ஒரு பழங்காலப் போர் வீரன். விலங்கினங்களைப் பாருங்கள். முகம் காட்டி எதிர்க்கும் எந்த மிருகமும் வெற்றி பெறும். முதுகைக் காட்டும் விலங்கினம் தோல்வியையே சந்திக்கும்'' என்று சொல்லும் ராஜாஜியை அவரது பேரன் பூஜிப்பதாக மட்டும் இல்லாமல், பல இடங்களில் விமர்சனத்தோடும் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

85 வயதில் ரயிலில் 'அப்பர் பெர்த்’ கேட்டு வாங்கிப் பயணம் செய்த ராஜாஜி, சிந்தனையில் மட்டும் அல்ல செயலாலும் மலைக்க வைக்கிறார்!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism