Published:Updated:

ஆடு திருடி ஆன்லைனில் விற்பனை... போலீஸ் வலையில் சென்னை இளைஞர்கள்!

ஆடு திருடி ஆன்லைனில் விற்பனை... போலீஸ் வலையில் சென்னை இளைஞர்கள்!
ஆடு திருடி ஆன்லைனில் விற்பனை... போலீஸ் வலையில் சென்னை இளைஞர்கள்!

ஆடு திருடி ஆன்லைனில் விற்பனை... போலீஸ் வலையில் சென்னை இளைஞர்கள்!

திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஆடுகளும் கன்றுக்குட்டிகளும் திருடுபோவது சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. சென்னையைச் சேர்ந்த சில இளைஞர்கள் கார், ஆட்டோ மற்றும் பைக்குகளில் சென்று ஆடுகளையும் கன்றுக்குட்டிகளையும் திருடிவந்து சென்னையில் உள்ள உணவகங்களுக்கும் கறிக்கடைகளுக்கும் விற்பனை செய்வதாக போலீஸார் கூறுகின்றனர். சிலர் ஆடுகளைத் திருடி ஆன்லைனில் விற்பதும் தெரியவந்துள்ளது. 

ஆடு திருடி ஆன்லைனில் விற்பனை... போலீஸ் வலையில் சென்னை இளைஞர்கள்!


 

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கம் அருகே வேகமாகச் சென்ற கார் ஒன்றைக் கடந்த செவ்வாய்க்கிழமை போலீஸார் வழிமறித்துச் சோதனையிட்டனர். கார் கதவைத் திறந்து பார்த்தபோது, வாய் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒன்பது ஆடுகள் இருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். காரை ஓட்டிவந்த நபரிடம் ‘விசாரணை’ நடத்தியபோது, அவை திருடப்பட்ட ஆடுகள் என்பது தெரியவந்தது. காரில் வந்த இரண்டு பேர் போலீஸாரிடமிருந்து தப்பி ஓடிவிட்டனர். காரை ஓட்டியவர் பல்லாவரத்தைச் சேர்ந்த 27 வயதான சாய்க்குமார் என்பது தெரியவந்தது. வழக்கமாக, புதன்கிழமை அன்று இறைச்சி விற்பனை அமோகமாக இருக்கும். அதனால், செவ்வாய்க் கிழமையன்று ஆடுகளைத் திருடிவந்துள்ளனர். இது குறித்து அச்சரப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சாய்குமாரை கைதுசெய்தனர்.

கடந்த சில மாதங்களாகத் திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆடுகள் காணாமல் போவதாகப் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம், வடகரை, அழிஞ்சிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த டிசம்பர் மாதம் 90-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் காணாமல்போனதாகப் புகார்கள் வந்தன. நல்ல விலை கிடைக்கும் என்பதால், குட்டி வெள்ளாடுகளை விட்டுவிட்டு பெரிய வெள்ளாடுகளையே திருடர்கள் குறிவைக்கிறார்கள் என்கிறார்கள் அந்தப் பகுதி விவசாயிகள். 
இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, “சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் கார், ஆட்டோ, பைக் ஆகியவற்றில் வந்து ஆடுகளையும் கன்றுக்குட்டிகளையும் திருடிச்செல்கிறார்கள். ஆடுகளைக் கடத்துவதற்கு அதிவேகமாகச் செல்லக்கூடிய பைக்குகளில் வருகிறார்கள். ஆடுகளைத் திருடித் தூக்கிச்செல்லும் காட்சிகள் சில இடங்களில் சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியுள்ளன. சமீபத்தில் ஆட்டோவில் வந்து கன்றுக்குட்டியைத் திருடிய ஒரு கும்பல் சிக்கியது. அடிக்கடி ஆடுகள் திருடு போவதால் குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” என்றனர்.

மதுராந்தகம் அருகே அணைக்கட்டு என்ற இடத்தில் ஆடு திருடிய இரண்டு இளைஞர்கள் பொதுமக்களிடம் சிக்கினர். அவர்களைக் கட்டிவைத்து அடித்து போலீஸிடம் மக்கள் ஒப்படைத்தனர். அவர்கள் ஏற்கெனவே கால்நடைகளைத் திருடிய வழக்கு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆடு திருட்டில் ஈடுபட்டு போலீஸில் சிக்கிய இளைஞர்கள் சிலர், திருடும் ஆடுகளைச் சென்னையில் உள்ள உணவகங்களிலும் ஆன்லைனிலும் விற்றுவிடுவதாக போலீஸ் விசாரணையின்போது கூறியுள்ளனர்.

செங்குன்றம் அருகே கோனிமேடு பகுதியில் ஆடுகளைத் திருடிய இரண்டு இளைஞர்கள் சில மாதங்களுக்கு முன்பு பிடிபட்டனர். ஆடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளைத் திருடியதாக இதுவரை கைதுசெய்யப்பட்ட அனைவருமே 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு