Published:Updated:

2 கொள்ளைகள்.. 5 கொலைகள்!

2 கொள்ளைகள்.. 5 கொலைகள்!

2 கொள்ளைகள்.. 5 கொலைகள்!
##~##

கொள்ளைகள் முதல் அதிர்ச்சி என்றால், கொலை அடுத்த பேரதிர்ச்சி. பட்டப்பகலில் கொள்ளை அடித்துச் சென்றவர் களைக் கண்டுபிடிக்கப் போன போலீஸ்காரர்கள் நள்ளிர வில்  ஐந்து 'திருடர்களைக்’ கொன்றுவிட்டார்கள். ''இந்த மாதிரியான கொள்ளைக்காரங்களை நடுரோட்டில் ஓடவிட்டுச் சுடணும்'' என்பது பொதுஜனங்களின் கோபமாக இருக்கிறது. ''குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்வதற்குத்தான் போலீஸுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், 'கொலைத் தண்டனை' வழங்கும் அதிகாரத்தை போலீஸ் தன் கையில் எடுத்துக்கொள்வது சரியா?'' என்பது மனித உரிமை ஆர்வலர்களின் கருத்து. இந்த வாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், நாடு அமைதியாக இல்லை, மக்கள் பதற்ற மனோநிலையில் இருக்கிறார்கள் என்பதுதான் இந்த சம்பவங்கள் மூலமாக நமக்குத் தெரிய வரும் முதல் செய்தி! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முகமூடி இல்லை!

''அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடனேயே வழிப்பறித் திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்கள்'' - இது, சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுக்கொண்டதும் முதல்வர் ஜெயலலிதா கூறிய வார்த்தைகள். ஆனால்... வழிப்பறி, திருட்டு, கொலை, கொள்ளை எதுவுமே குறையவில்லை. தினமும் செய்தித்தாளைத் திறந்தால், கொலை, கொள்ளை, வழிப்பறிச் செய்திகள்தான் ஆக்கிரமிக்கிறது. 'ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்போதும் சரியாக இருக்கும்’ என்பது அவருக்கு உள்ள முக்கியமான இமேஜ். ஆனால், அது இந்தமுறை ஆறு மாதங்களிலேயே அறுந்து தொங்குகிறது. இந்த சம்பவங்களின் உச்சமாக, சமீபத்தில் சென்னையில் நடந்து இருக்கும் இரண்டு வங்கிக் கொள்ளைகளும், திருப்பூர் நகைக் கடைக் கொள்ளையுமே போதும். பெருங்குடியில் பேங்க் ஆஃப் பரோடா, கீழ்க்கட்டளையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய இரண்டு இடங்களிலும் முகத்தை முற்றிலும் மறைக்கக்கூடிய முகமூடிகளை அணிந்து வரவில்லை கொள்ளையர். மிகச்சிறிய கர்ச்சீப்பால் 'சும்மா’ முகத்தை மூடிக்கொண்டு வந்தே, பணத்தை அள்ளிச் சென்று உள்ளனர். அதாவது எந்தப் பயமும் அவர்களுக்கு இல்லை. தமிழக போலீஸ் தலைகுனிய வேண்டிய விஷயம் இதுதான். குற்றவாளிகளைப் பிடிப்பதில் தமிழக போலீஸார் கில்லாடிகள் என்ற பெயர் இருந்தாலும், குற்றம் நடப்பதை முன்கூட்டியே தடுப்பதில் அது இல்லை.

2 கொள்ளைகள்.. 5 கொலைகள்!

இரண்டுமே திங்கள்கிழமை!

அடுத்தடுத்து நடந்த வங்கிக் கொள்ளைகள் சென்னைப் போலீஸின் கௌரவத்தையே காவு வாங்கியது. கடந்த திங்கள்கிழமை அன்று, மதியம் 2 மணிக்கு கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குள் கொள்ளையர் புகுந்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு மிக அருகில் இருக்கிறது இந்த வங்கி.  கர்சீப்பை முகத்தில் கட்டிக்கொண்டு புகுந்த கொள்ளையர் சுமார் 15 நிமிடங்களுக்குள் 14 லட்ச ரூபாயை அள்ளிக்கொண்டு சென்றுவிட்டனர். (கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி திங்கள்கிழமை பெருங்குடி பரோடா வங்கியிலும் மதியம் 2 மணிக்குத்தான் கொள்ளை அடிக்கப்பட்டது.) இதற்குப் பிறகுதான் போலீஸ் விழித்துக் கொண்டது. 35 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. கீழ்க்கட்டளை பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளிலும் சாதாரண உடை அணிந்த போலீஸ்காரர்கள் புகுந்து விசாரணையை ஆரம்பித்தனர். ஐ.ஓ.பி. வங்கிக்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடையைக்கூட இரண்டு நாட்களாக போலீஸ்தான் ஆக்கிரமித்து இருந்தது. அனைத்து டேபிள்களிலும் போலீஸார் 'சும்மா’ உட்கார்ந்து குடிப்பது போல நடித்துக் கொண்டு இருந்தார்கள். அந்தப் பகுதியில் கடை நடத்துபவர்கள் எல்லாம், அடுத்தடுத்து வந்து துளைத்து எடுக்கும் போலீஸ்காரர்களுக்கு பதில் சொல்லிச் சொல்லியே சோர்ந்துவிட்டனர். கடைக்கு லீவு விடவும் பயம். இவர்களுக்கே இந்த நிலை என்றால், பணத்தைப் பறிகொடுத்த வங்கியில்...?

பேசக்கூடாது என்று தடுத்தது ஏன்?

சம்பவம் நடந்த திங்களன்று மதியம் முதல் போலீஸ் கட்டுப்பாட்டுக்கு வந்த வங்கி ஊழியர்கள், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்குத்தான் விசாரணை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். மீண்டும் காலை 9.30 மணிக்கு அவர்களுக்கு வேலை தொடங்கியது. அன்று காலையில் இருந்து மீண்டும் விசாரணை.

பெயர் வெளியிட வேண்டாம் என்ற கோரிக் கையோடு நம்மிடம் பேசிய வங்கி ஊழியர் ஒருவர், ''உயர் அதிகாரிகள் விசாரணை முடித்த பிறகு, தனிப்படை போலீஸ்காரர்கள் ஒவ்வொருவராக வந்து, வங்கியின் மேலாளர் சண்முகசுந்தரத்தைத் துளைத்து எடுத்துவிட்டனர். கொள்ளைச் சம்பவம் குறித்து எந்தத் தகவலையும் யாரிடமும் சொல்லக் கூடாது என்று, வங்கி ஊழியர்களைப் போலீஸார் மிரட்டினர். கொள்ளையர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும்கூட, தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து மேலாளரை விடுவிக்கவில்லை'' என்றார். கீழ்க் கட்டளை சம்பவத்தைக் கேள்விப்பட்ட முதல்வர்,  போலீஸ் உயர் அதிகாரிகளுக்குக் கடுமையான எச்சரிக்கை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ''மூன்று நாள் கெடு விதித்தார்'' என்கிறது போலீஸ் வட்டாரம்.

துப்புக் கொடுத்தது யார்?

திங்களன்று இரவு முதலே தீவிர தேடுதல் வேட் டையில் இருந்த போலீஸ் படை, கீழ்க்கட்டளை, மேட வாக்கம், பல்லாவரம், துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஆகிய பகுதிகளில் திடீர் செக்போஸ்ட்கள் அமைத்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது. புதன்கிழமை அன்று போலீஸுக்கு முக்கிய 'க்ளு’ கிடைத்தது. போலீஸ் வெளியிட்ட படத்தில் இருப்பது வினோத்குமார், அவன் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படித்த மாணவன் என்பதுதான். உடனே, ஒரு தனிப்படை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துக்கு விரைந்தது. அங்கு சேகரித்த தகவலில், போலீஸ் வெளியிட்ட படத்தில் இருப்பது வினோத்குமார் என்பது உறுதியானது. அந்தக் கோணத்தில் தேடுதல் வேட்டை நடத்திக்கொண்டு இருந்தபோது, புதனன்று மதியம் போலீஸுக்கு இன்னொரு தகவல் கிடைத்தது. வேளச்சேரி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வினோத்குமார் வசிப்பதாகவும், தனது வீட்டில்தான் வாடகைக்கு குடி இருப்பதாகவும் கூறி இருக்கிறார் வீட்டு உரிமையாளர். புதனன்று இரவு 10 மணிக்கு, வேளச்சேரி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பை போலீஸ் படை முற்றுகை இட்டது. அங்கிருந்த அனைத்து வீடுகளையும் கதவைப் பூட்டிக் கொள்ளச் சொல்லி உத்தரவிட்ட போலீஸ், யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவித்துள்ளது. அதற்குப் பிறகு, ஏரியாவே நிசப்தம் அடைந்தது.

ஆனாலும் பல சந்தேகங்கள்!

''அதிகாலை 1 மணிக்கு வினோத்குமார் தங்கி இருந்த வீட்டைச் சுற்றிவளைத்தது போலீஸ் படை. அறைக்குள் போலீஸ் நுழைந்ததுமே, வினோத் குமார், வினய் பிரசாத், ஹரீஸ்குமார், அபய்குமார், சந்த்ரிகா ராய் ஆகிய ஐந்து பேரும் கைகளைத் தூக்கி சரண் அடைய முன்வந்ததாகவும், ஆனால் போலீஸார் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து நடந்த வங்கிக் கொள்ளைகளால் சென்னை மாநகரப் போலீஸ் பெருத்த அவமானத்தில் சிக்கித் தவித்தது. அதனால் ஏற்பட்டிருந்த ஆத்திரத்தில்தான் சரண் அடைய முன்வந்தும் அந்த இளைஞர்களைச் சுட்டுத் தள்ளி விட்டார்கள்'' என்கிறார்கள் சென்னை போலீஸில் உள்ள சிலர்.

போலீஸாருக்கு இவர்கள் குறித்த தகவலை யார் சொன்னது என்பது குறித்து வெவ்வேறு விதமான கருத்துகள். வீட்டு உரிமையாளரின் தம்பி சொன்னதாக சிலரும்,  உரிமையாளரின் மகன் சொன்னதாக வேறு சிலரும் சொல்கிறார்கள். ''மாலை நாளிதழ் ஒன்றில் போலீஸார் வெளியிட்ட புகைப்படம் வால் போஸ்டரில் இருந்தது. அதனைப் பார்த்த இவர், 'நம்ம வீட்டுல வாடகைக்கு இருக்கிற பையன் மாதிரி இருக்கே’ என்று யோசித்திருக்கிறார். அதன் பிறகு வீட்டுக்கு வந்தவர்களுக்கு சந்தேகம் வலுத்து போலீஸுக்கு தகவல் கொடுத்தார்கள். இந்த நேரத்தில் வினோத்குமார், 'நாங்க வீட்டைக் காலி பண்ணப்போறோம்’ என்று சொல்ல வந்தது இவர்களுக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியது.'' என்றும் சொல்கிறார்கள்.

ராத்திரி முழுக்க திக்திக்திக்!

துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டுக்கு அருகில் இருக்கும் வீடுகளில் வசிக்கும் சிலரிடம் நாம் விசாரித்தபோது, ''சாயந்தரமே போலீஸ்காரங்க வந்துட்டாங்க. ராத்திரி 10 மணிக்கெல்லாம் எல்லாரையும் விரட்ட ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க வீட்டுக்குள்ளதான் இருந்தோம். ஆனா, ராத்திரி முழுக்க நாங்க தூங்கல. போலீஸ்காரங்க நடந்துக்கிட்டே இருந்தாங்க. அந்த பூட்ஸ் சத்தமே எங்களைத் தூங்கவிடலை. ஜீப்பும் வந்துக்கிட்டு போய்க்கிட்டும் இருந்துச்சு. ஆனா, கதவைத் திறந்து பாத்தா, திட்டுவாங்கன்னு பயந்துட்டு இருந்தோம். துப்பாக்கி வெடிக்கிற சத்தம் எதுவும் எங்களுக்கு கேக்கலை. வேற எங்கயாவது கொன்னுட்டு, இங்க நடந்ததா சொல்றாங்கன்னு நெனைக்கிறேன். போலீஸ்காரங்க அப்படித்தான் செய்வாங்களாமே'' என்றார் சுதா என்ற (பெயர் மாற்றப்பட்டுள்ளது!) பெண் அப்பாவியாக!

2 கொள்ளைகள்.. 5 கொலைகள்!

''புதன்கிழமை காலையிலேயே வினோத் குமார் சிக்கி இருக்கிறான். அவனிடம் வீட்டு முகவரி மற்றும் கூட்டாளிகள் தங்கி இருக்கும் இடம் பற்றி விசாரித்துவிட்டு, உடனே அவனை சுட்டுக் கொன்றுவிட்டார்கள். அதற்குப் பிறகுதான், கூட்டாளிகளான மற்ற நான்கு பேரையும் வேளச்சேரி வீட்டில் சுற்றி வளைத்து இருக்கின்றனர். அங்கிருந்து அவர்களைச் அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து, பணத்தைக் கைப்பற்றிய பிறகு அந்த நான்கு பேரையும் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள். பின்னர், ஐந்து உடல்களையும் வேனில் ஏற்றி, வேளச்சேரிக்கு மீண்டும் கொண்டு வந்தனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கதவை உடைத்த போலீஸ்காரர்கள், ஐந்து உடல்களையும் உள்ளே கொண்டுபோய், என்கவுன்டர் நடந்தது போல காட்சியை உருவாக்கினார்கள். இறந்த உடல்களை உளவுப்பிரிவு எடுத்துள்ள போட்டோக்களைப் பார்த்தாலே இது நன்றாகத் தெரியும். அவர்கள் கனமான ஷூ அணிந்திருப்பார்கள். நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களைச் சுற்றி வளைத்ததாக போலீஸ் சொல்கிறது. கனமான ஷூ, ஜீன்ஸ் பேன்ட் அணிந்துகொண்டு யாராவது தூங்கு வார்களா?'' என்று அப்பகுதி மக்கள் கேட்கும் கேள்விகள் அர்த்தம் உள்ளவையாக உள்ளன.

குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்... ஆனால் அதற்காக, போலீ ஸார் கைகொள்ளும் வழிமுறைகள்தான் ஆயிரம் சந்தேகங்களைக் கிளப்புவதாக இருக்கிறது!

பல்கலைக் கழக புரோக்கர்கள்!

வயிற்றுப் பிழைப்புக்காக வேலைக்கு வருபவர்கள் ஒரு பக்கம், சொந்த மாநிலத்தில் உயர் கல்வி பெற முடியாமல் தரமான கல்விக்காக இங்கே வருபவர்கள் மறுபக்கம் என சென்னையும் தமிழகத்தின் முக்கிய நகரங்களும் வெளி மாநிலத்தவர்களால் நிரம்பி வழிகிறது. வந்தோம்... படித்தோம்... கிளம்பினோம்... என்று இல்லாமல் கெட்டுக் குட்டிச்சுவரான சில 'ஓல்டு மாணவர்கள்’தான் இம்மாதிரியான குற்றச் செயல்களில் இறங்குகிறார்கள். படிப்பைப் பாதியில் விட்டவர்கள், ஏதாவது தவறு செய்து, அதனால் பல்கலைக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மறுபடியும் தங்கள் மாநிலத்துக்குச் செல்வது இல்லை. இங்கேயே தங்கிவிடுகிறார்கள். இவர்கள் ஏதாவது வேலை பார்த்து நிம்மதியாக வாழ்க்கை நடத்தினாலும் பரவாயில்லை. எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தார்களோ... அதே பல்கலைக்கழகத்தில் மாணவர்களைப் பிடித்துக் கொடுக்கும் புரோக்கர்களாக மாறுகிறார்கள். எல்லா ஊர்களிலும் தனியார் பல்கலைக்கழகங்கள் அதிகரித்து விட்டன. இதனால் மாணவர்கள் கிடைப்பதும் கஷ்டமாக இருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து மாணவர்களை அழைத்து வரும் புரோக்கர்களாக இந்த ஓல்டு மாணவர்களைத்தான் பல நிர்வாகங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.

தீபாவளி அன்று நடந்த திகில் சம்பவம்...

பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு கல்லூரி மாணவரை, இன்னொரு கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். அசாம் மாநிலத்தைச் சேர்த நவஜோத் தங்காடி என்ற பையன் இங்கே பொறியியல் படிக்க வந்தான். ஃபெயிலாகி ஃபெயிலாகி ஒன்பது வருடங்களாகத் தேர்வு எழுதி வந்தான். அவனது ஊரைச் சேர்ந்த மதூர்ஜியா என்பவனை, தான் படித்த கல்லூரியில் இந்த தங்காடி சேர்த்து விட்டான். இதில் கொடுக்கல் வாங்கல் தகராறு இருவருக்கும் ஏற்பட்டது. படூர் சரசு மேன்ஷனில் இருந்த மதூர்ஜியாவை, தங்காடி குத்திக் கொலை செய்தான். இந்த சம்பவத்தை கடந்த 6.11.11 தேதியிட்ட ஜூ.வி. இதழில் எழுதி இருந்தோம். ''இந்தப் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். பலர் இங்கேயே நீண்ட காலமாக தங்கி லோக்கல் ரவுடிகளுடன் சேர்ந்து ரவுடிகளாக மாறிவிடுகிறார்கள். இவர்களால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைகிறது. சில மாணவர்களிடம் துப்பாக்கிகள் இருப்பதாகக்கூட எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. சமீபத்தில், வாலாஜாவில் பீகாரைச் சேர்ந்த ஒரு மாணவனிடம் இருந்து லைசென்ஸ் இல்லாத துப்பாக்கியைப் பறிமுதல் செய்தோம். மாணவர்களின் அனைத்துச் செயல்களுக்கும் கல்லூரி நிர்வாகங்களே பொறுப்பு'' என்று, காஞ்சி புரம் எஸ்.பி. மனோகரன் அப்போது நமக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

போலீஸ், கல்லூரி நிர்வாகங்கள் இரண்டும் இணைந்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கி யாக வேண்டிய நெருக்கடியை இந்த என்கவுன்டர் சம்பவம் உணர்த்தி உள்ளது!

என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் லட்சக்கணக்கில் இருக்கும் வேற்று மாநில ஆட்களை கண்காணிக்க என்ன வழி? சொல் கிறார் வழக்கறிஞர் வேதா பகத்சிங்:

''வேலை மற்றும் படிப்புக்காக வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை 2000-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகரித்து இருக்கிறது. இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்குள் வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்க முடியாது. அது, அவர்களின் அடிப்படை உரிமை. ஆனால், முறைப்படுத்தலாம். கல்லூரி மாணவர்கள் மற்றும் சாஃப்ட்வேர் நிறுவனங்களில் வேலைக்கு வருபவர்களைப் பற்றிய விவரங்கள், சம்பந்தப்பட்ட கல்லூரியிலும், நிறுவனங்களிலும் இருக்கும். தமிழகம் முழுவதுமே வடமாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் கட்ட டம் கட்டும் வேலை செய்கின்றனர். ஆனால், அவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவும் போலீஸிடம் இல்லை. இந்தத் தொழிலாளர்களை, வடமாநிலங் களில் இருந்து அழைத்து வருவதற்கு ஏஜென்ட்டுகள் இருக்கின்றனர். அந்த ஏஜென்ட்டுகள், தங்களிடம் உள்ள தொழிலாளர்களைப் பற்றிய விவரங்களை, போலீஸ் அல்லது தொழிலாளர் நலத்துறையில் சமர்ப்பிக்க உத்தரவு போடலாம். அதற்கு முன், தொழிலாளர்களை ஏஜென்ட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவு இட வேண்டும். அதேபோல, கல்லூரி விடுதியில் தங்காமல் வெளியில் வீடு எடுத்துத் தங்கும் மாணவர்களிடம், சம்பந்தப்பட்ட கல்லூரியில் இருந்து கடிதம் வாங்கி சமர்ப்பித்தால் மட்டுமே வாடகைக்கு வீடு வழங்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் குற்றங்களைக் குறைக்க உதவும்.''

உயிருடன் பிடித்து இருக்கலாம்

பெருங்குடியில் உள்ள பரோடா வங்கியில் ஜனவரி 23-ம் தேதியன்று கொள்ளைச் சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் நடந்த வங்கியில் கண்காணிப்பு கேமரா இல்லை. அதனால், கொள்ளையரைப் பற்றிய துப்பு கிடைக்கவில்லை. இதே சம்பவம் நடந்த ஒரே வாரத்தில் புறநகர் பகுதிகளில் உள்ள பிஸியான ரோடுகளில் உள்ள வங்கிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அலசினர். அந்த வகையில், சிக்கியவன்தான் பீகாரை சேர்ந்த வினோத் குமார். அப்போதே அந்த வீடியோ - போட்டோவை போலீஸ் வெளியிட்டிருந்தால், கீழ்க்கட்டளை வங்கிக் கொள்ளை தடுக்கப்பட்டு ருக்கும். கொள்ளையரும் உயிருடன் பிடிபட்டு இருப்பார்கள்.

திக்திக் டான் கீ

''பட்டப்பகலில்... துணிச்சலாக நான்கு பேர் வங்கிக்குள் புகுந்து கொள்ளை அடிக்கிறார்கள் என்றால், 'நிச்சயமாக 'டான் கீ’ கம்பெனி ஆகத்தான் இருக்கும்' என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள் சென்னை போலீஸார். துப்பாக்கி சப்ளை, கத்தை கத்தையாக பணம், பீகாரைச் சேர்ந்த கூலிப்படை சப்ளை... என்று சென்னையை கலக்கிக் கொண்டிருப்பவர்கள் 'டான் கீ கம்பெனி' ஆட்கள்

யார் அந்த டான் கீ? வடமாநில  கிரிமினல்கள் மத்தியில் ரகசியமாக புழக்கத்தில் இருக்கும் ஒரு பெயர் 'டான் கீ’. இது ஒரு தனிநபரின் பெயரா? அல்லது வடக்கே உள்ளே கூலிப்படையின் பெயரா எனத் தெரியவில்லை.  சங்கிலிப் பறிப்பு சம்பவங்களை நடத்துவதற்காக சென்னைக்கு விமானத்தில் வந்து காரியத்தை முடித்துவிட்டு விமானத்தில் திரும்பிச் செல்லும் அளவுக்கு காஸ்ட்லியாக செலவு செய்கிற கம்பெனிதான் 'டான் கீ’. இந்தக் கிரிமினல்களுக்குள் கடந்த இரண்டு வருடங்களாக தகவல் நெட்-ஒர்க் ஏற்படுத்துவதுதான் 'டான் கீ’ கம்பெனி செய்து வரும் வேலை.

இந்தக் கம்பெனியில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால் எத்தனை சம்பவங்கள் நடக்கக் காத்திருக்கிறதோ?

- ஆர்.பி., தி.கோபி விஜய், எஸ்.கோபாலகிருஷ்ணன்

படங்கள்: என்.விவேக், கே.கார்த்திகேயன்,

சொ.பாலசுப்ரமணியன்

அந்த செல்போன்?

சென்னையில் வங்கிக் கொள்ளை நிகழ்த்திய கும்பல் பயன்படுத்திய செல்போன்களுக்குள் இருந்து பல மர்மங்களுக்கு (போலீஸ் நினைத்தால்) விடை கிடைக்கலாம் என்கிறார்கள் காக்கித் துறைக்குள்ளேயே இருப்பவர்கள். ''வங்கியில் கொள்ளை நிகழ்த்துவதற்காக கொள்ளையர்கள் உள்ளே புகுவதற்கு மிகச் சில நிமிடங்களுக்கு முன்பு அந்தக் கும்பலின் தலைவன் யாருடனோ செல்போனில் பேசியிருக்கிறான். உள்ளே வருவதற்கு வாகான நேரம்தானா, அதற்கான சூழல் வங்கிக்குள் நிலவுகிறதா என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு அதன் பின்பே அதிரடியாக உள்ளே புகுந்திருக்கிறான். அவன் செல்போனில் இருந்து பேசப்பட்ட எண் எது? அது யாருடையது என்பதை 'நச்'சென்று கண்டுபிடித்தால், அதன் மூலம் 'வங்கிக் கொள்ளைகளின் ஃபார்முலா' பற்றி புதிய தகவல்கள் கிடைக்கக்கூடும்!

கமிஷனருக்கு 'குட்'?!

2 கொள்ளைகள்.. 5 கொலைகள்!

சென்னை மாநகருக்கு கமிஷனராக திரிபாதி நியமிக்கப்பட்ட உடனேயே, 'அதிரடி என்கவுன்ட்டர்'களை எதிர்பார்த்தது காக்கி வட்டாரம். அந்த அளவுக்கு அவர் பிரபலம். ஆனால், உடனடியாக அப்படி எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் தனக்கு வாகாக செயல்படக்கூடிய 'என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' அதிகாரிகளை சென்னை வட்டாரத்துக்குள்ளேயே நியமிக்கும்படி மேலிடத்தில் கேட்டு ஒப்புதல் வாங்கிவிட்டார் திரிபாதி. எந்நேரமும் அந்த அதிகாரிகளை தயார் நிலையிலேயே வைத்திருந்தார். ரவுடிகளின் பட்டியல் ஒன்றையும் அவர் ரெடியாக வைத்திருந்தாராம். உடனடியாக பெரிய இடத்தில் இருந்து ஏனோ ஒப்புதல் கிடைக்கவில்லை. வரிசையாக செயின் அறுப்பு சம்பவங்கள் நடந்தபோது, 'சமூக விரோதிகளுக்கு குளிர்விட்டுப் போகிறது. ஏதாவது செய்ய வேண்டும்' என்று கமிஷனர் அலுவலகத்தில் இருந்து அனுமதி கேட்டு, அது மறுக்கப்பட்டதாம். இப்போது, வங்கிக் கொள்ளைக் கூட்டத்தை 'லொகேட்' செய்ததுமே, ஏரியா போலீஸ் அதிகாரிகளைத் தவிர வட சென்னைப் பகுதியில் இருந்து தனக்கு வாகான அதிகாரிகளை அழைத்து விறுவிறுவென ஆலோசித்த கமிஷனர், அவர்களையும் கூடச் சேர்த்துக்கொண்டே களம் இறங்கினாராம். ''கொள்ளைக் கூட்டத்தின் மீது பாய்ந்த முதல் குண்டு கமிஷனர் துப்பாக்கியில் இருந்துதான் வந்தது'' என்றும் தகவல் சொல்கிறார்கள்.

''சுட்டு முடித்த உடன் பெரிய இடத்துக்கு அந்த நள்ளிரவிலும் உடனே தகவல் சொன்னார் கமிஷனர். 'குட் ஜாப்' எனறு அதற்குப் பாராட்டு வந்தது'' என்கிறார்கள் காக்கிகளில் சிலர். 

யாரேனும் ஓர் அப்பாவி இருந்திருந்தால்..?

2 கொள்ளைகள்.. 5 கொலைகள்!

இந்த என்கவுன்டர் சம்பவத்தை மனித உரிமை ஆர்வலர்கள் மிகக் கடுமையாக கண்டிக்கிறார்கள். இதுகுறித்துப் பேசிய வழக்கறிஞர் புருஷோத்தமன், ''ஐந்து உயிர்கள் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதில், உண்மை நிலவரத்தைச் சொல்லாமல் போலீஸார் மறைக்கிறார்கள். அவர்கள் தங்கி இருந்த வீட்டை, சம்பவ தினத்தன்று மதியமே  போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர். அனைவரையும் கொல்ல வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம் என்பதால் இருட்டும் வரை காத்திருந்து, சுட்டுக் கொன்று உள்ளார்கள். நீதிமன்றத்தின் மீதும் சட்டத்தின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைத்தான் இந்த சம்பவம் உணர்த்துகிறது. கொல்லப்பட்டவர்களுடன் யாரேனும் ஒரு அப்பாவி இருந்திருக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? மயக்க வாயு, அல்லது கண்ணீர்ப் புகை வீசி குற்றவாளிகளைப் பிடித்து இருந்தால், அவர்களின் பல்வேறு கிரிமினல் தொடர்புகள் தெரிய வந்திருக்கும்.

எல்லா என்கவுன்டர்களிலும் போலீஸுக்கு மட்டும் சின்ன சிராய்ப்பு, காலில் வெட்டு, கையில் குத்து என்று உயிருக்கு ஆபத்து இல்லாத நாடகம் போடுகிறார்கள். இதற்கு முன்பு திண்டுக்கல் பாண்டியை என்கவுன்டர் செய்தபோது, அவருடன் கூடுவாஞ்சேரி வேலு என்பரையும் சேர்த்து சுட்டுக் கொன்றனர். அந்த வேலு மீது ஒரு குற்றவழக்குகூட கிடையாது. பொதுவாக என்கவுன்டர் நடத்திவிட்டு, ஆர்.டி.ஒ விசாரணை என்ற பேரில் தங்களுக்கு சாதகமான சாட்சிகளை மட்டும் பேசவைத்து வழக்கை முடித்துவிடுகின்றனர். அதனால் இந்த சம்பவத்தை பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து, விசாரணை நடத்தி வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, 'திட்டமிட்டு என்கவுன்டர் நடத்தும் போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று ஏற்கெனவே எச்சரிக்கை மணி அடித்துள்ளார். எனவே இந்தப் படுகொலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளேன்'' என்று சீறினார். 

2 கொள்ளைகள்.. 5 கொலைகள்!

நாகர்கோவிலில் ட்ரையல்... திருப்பூரில் கொள்ளை?

திருப்பூர் ஆலுக்காஸ் நகைக் கடைக் கொள்ளை, தமிழக திருட்டு சம்பவங்களில் புதிய அத்தியாயமே எழுதி இருக்கிறது. கோடிக்கணக்கான நகைகள் ஜஸ்ட் லைக் தட் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. கேஸ் சிலிண்டர் மூலமாக வெண்டிலேட்டர் கம்பிகளை கட் செய்து இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.  ''நாகர்கோவிலில் சில மாதங்களுக்கு முன்பு, இது போன்று ஒரு கொள்ளை முயற்சி நடந்தது. பொருட்கள் திருடு போகவில்லை என்றாலும் சம்பவ இடத்துக்கு அருகில் கேஸ் சிலிண்டர் கிடந்தது. அப்போதே போலீஸார் உஷாராகத் தேடுதல் வேட்டை நடத்தி இருந்தால், இந்த சம்பவத்தைத் தடுத்து இருக்கலாம்'' என்று சொல்கிறார்கள் நகைக் கடை உரிமையாளர்கள்.

துபாய் டு திருப்பூர்?!

திருப்பூர் நகைக் கடைக் கொள்ளை கொங்கு மண்டல வியாபாரிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தும் என்பதால், போலீஸார் மிகத் தீவிரமாக தங்கள் விசாரணையை முடுக்கினார்கள். உளவுத் துறை போலீஸாரின் துணையையும் இதற்கென்று நாடினார்கள். பல்வேறு அலசல்களுக்கு நடுவே சில தொலைபேசி எண்களையும் கண்காணித் ததாம் உளவு போலீஸ். இதே கடையில் முன்பு முக்கியப் பதவியில் நிர்வாகியாக இருந்து, தற்போது விலகி நிற்கும் ஒருவரின் தொலைபேசிப் பேச்சு போலீஸாரை குழம்பி அதிரவைத்ததாம். அந்த உரையாடலில் கிடைத்த க்ளூவின்படி பார்த்தால், கொள்ளை நடத்தியவர்களுக்கு இந்த நகைக் கடைக்கு உள்ளிருந்தேகூட உதவிகள் கிடைத்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதாம். தமிழ்நாடு அல்லது வெளி மாநிலக் கோஷ்டிகள் கை வைத்தால் போலீஸிடம் எப்படியும் சிக்கிவிடுவார்கள் என்று நினைத்து, துபாயில் இருந்து இதற்கென்று ஒரு கும்பல் வந்து காரியத்தைக் கச்சிதமாக அரங்கேற்றியதா? நகைக் கடையின் வேறு வெளி மாநிலக் கிளைகளில் இதேபோல் திருட்டு சம்பவங்கள் நடந்தது உண்டா? நகைகள் மீதான இன்ஷூரன்ஸ் விவகாரங்கள் எப்படி?  இதெல்லாம்கூட இப்போது விசாரணை டீமின் பாயின்ட்டுகளில் வருகின்றனவாம்!