Published:Updated:

இனி 4ஜி ராசா?!

புறப்பட்டது வை-மேக்ஸ் புயல்!

இனி 4ஜி ராசா?!

புறப்பட்டது வை-மேக்ஸ் புயல்!

Published:Updated:
##~##

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பூதம் நீதிமன்றத்தில் சிக்கிக் கிடக்கும் நிலையில், வை-மேக்ஸ் ஊழல் என்ற புதிய புயலும் துணைக்கு கிளம்பி​விட்டது. கடந்த சில வருடங்களாகவே இந்த ஊழல் பற்றி அரசல் புரசலாக அடிபட்டு வந்தது. மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறையில் வை-மேக்ஸ் லைசென்ஸை குறுக்குவழியில் பெற டெல்லியில் செல்வாக்கான சிலர் முயற்சி செய்வது பற்றி 13.05.2009 தேதியிட்ட ஜூ.வி-யில் எச்சரித்து எழுதியிருந்தோம்.   

வை-மேக்ஸ் லைசென்ஸ் பெற்ற, 'ஸ்டார்நெட் கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனத்தின் மர்மப் பின்னணியை விசாரிக்க, மேற்கு வங்காள மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரசாந்த் சாட்டர்ஜி எடுத்த முயற்சிகள் பற்றி 8.12.2010 தேதியிட்ட ஜூ.வி-யில், அவர் விரிவாக பேசியிருந்தார். இந்த நிலையில், தற்போது சி.பி.ஐ-யின் முதல்கட்ட விசாரணையில், வை-மேக்ஸ் லைசென்ஸ் வழங்கியதில் 550 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடத்துள்ளதாகக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில், கடந்த வாரம் பி.எஸ்.என்.எல். உயர் அதிகாரிகள், ஸ்டார்நெட் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் சென்னை அலுவலகம், இந்த நிறுவன அதிகாரிகளின் வீடு என்று இந்தியாவின் பல்வேறு ஊர்களில் ஒன்பது இடங்களில் ரெய்டு நடந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி 4ஜி ராசா?!

தொலைத் தொடர்புத் துறையில் கம்பி இல்லா அதிவேக பிராட்பேண்ட் சேவைக்குத்தான் வை-மேக்ஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதை '4ஜி' என்றுகூட சொல்லலாம். பக்காவாக கம்பி இணைப்பு

இனி 4ஜி ராசா?!

கொண்டு போக முடியாத கிராமப்புறங்களிலும் 'பூஸ்டர்கள்' மூலம் இன்டர்நெட் வசதி கிடைக்கச் செய்வதுதான் இதன் நோக்கம். இந்தச் சேவையை கிராமப்புற மக்களுக்கு வழங்குவதற்காக நான்கு நிறுவனங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் அனுமதி வழங்கியது. சென்னையைச் சேர்ந்த டேக் சொல்யூஷன்ஸ் லிமிடெட், பெங்ளூருவைச் சேர்ந்த அதீஸ்வார் இண்டியா லிமிடெட், டெல்லி நொய்டாவைச் சேர்ந்த தெராகாம் லிமிடெட் மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த ஆம்புலஸ் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் ஆகியவைதான் அவை. அதில் கொல்கத்தா நிறுவனத்தின் பெயர் இடையில் மாற்றம் செய்யப்பட்டு, ஸ்டார்நெட் கம்யூனிகேஷன் என்று ஆனது. இந்த குறிப்பிட்ட நிறுவனத்தை மையமாக வைத்துத்தான் தற்போது சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது.

சி.பி.ஐ. வட்டாரத்தில் விசாரித்தோம். ''விதிமுறைகளின்படி, வை-மேக்ஸ் லைசென்ஸ் பெறும் நிறுவனங்களுக்கு தொழில்நுட்பத் தகுதி தேவை. இந்த நிறுவனங்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டு​களுக்கு 100 கோடி ரூபாய் வரை, வரவு செலவு செய்து இருக்கவேண்டும். ஸ்டார்நெட் கம்யூனிகேஷன் நிறுவனம் காட்டிய ஆவணத்தில் 100 கோடி ரூபாய் என்று உள்ளது. ஆனால் உண்மையில் அந்த அளவுக்கு வரவு செலவு உள்ள நிறுவனமா என்பதில் எங்களுக்கு சந்தேகம். ஆவணங்களைத் திருத்தி இருப்பார்கள் என்று நினைக்கிறோம். தொலைத் தொடர்புத்துறையின் உயர் அதிகாரிகள் சிலருக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. யார் அவர்களை செய்யச் சொன்னது என்கிற கோணத்தில் விசாரிக்கிறோம். இதுவரை ஆ.ராசா பெயரை யாரும் சொல்லவில்லை. அடுத்தகட்ட விசாரணையில் அவர் பெயரை எந்த அதிகாரியாவது சொன்னால், அதையும் விசாரிப்போம்'' என்றார்கள்.

சி.பி.ஐ. ரெய்டு பற்றி பி.எஸ்.என்.எல். தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் துணை பொதுச் செயலாளர் சி.கே. மதிவாணன், ''வை-மேக்ஸ் உரிமம் விற்றதில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 550 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக சி.பி.ஐ. சொல்கிறது. எங்களைப் பொறுத்தவரையில் இந்தத் தொகையும்கூட குறைவாகத்தான் தெரிகிறது. உண்மையில், எங்களுக்கு நஷ்டம் 8,300 கோடி ரூபாய். ஏனென்றால்... வை-மேக்ஸ் அலைக்கற்றை உரிமத்தை மத்திய அரசிடம் இருந்து எங்கள் நிறுவனம் வாங்கிய விலை அதுதான். அவ்வளவும் நஷ்டம்தானே? தனியார் நிறுவனத்துக்கு 80% பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 20% என்கிற விகிதத்தில் வருமான பகிர்வு செய்துகொள்ளவும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். பெரிய முதலீடு இல்லாமலே தனியார் நிறுவனங்கள் செமத்தியான லாபம் பார்க்கும் வகையில் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். வை-மேக்ஸ் சேவையை கிராமப்புற பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் அடிப்படை வசதி பி.எஸ்.என்.எல்-லிடம்தான் உள்ளது. எங்களை 'கேரியர்' ஆக்கித்தான் தனியார் நிறுவனங்கள் இந்த அலைக்கற்றையைக் கொண்டு செல்ல ஒப்பந்தம் ஆகி உள்ளது. இதை தனியாருக்குத் தருவதற்குப் பதில் நாங்களே சேவையை வழங்கி இருந்தால், பல்லாயிரம் கோடி ரூபாய் லாபத்தை அரசாங்கம் பெற்று இருக்கலாம்.

எங்கள் நிறுவனமே செய்யவேண்டிய பணியை, தனக்கு ஆதாயம் கிடைக்கவேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக, ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது நான்கு தனியார் நிறுவனங்களுக்குக் கை காட்டியிருக்கிறார்கள்.  இதற்கு ஊழியர் சங்கங்கள் சார்பில் அப்போதே எதிர்ப்பு தெரிவித்​தோம். ஆனாலும் எங்களையும் மீறி அந்த நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன. அந்த நிறுவனங்களில் ஒன்றுதான், ஸ்டார்நெட் கம்யூனிகேஷன். இந்த நிறுவனத்துக்காக ஆ.ராசா எத்தனை ஆர்வம் காட்டினார் என்பது எங்கள் நிறுவனத்தின் நடுநிலையான ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும்.

எங்களுக்கு கூடுதல் அதிர்ச்சி என்ன​வென்றால், இந்த வை-மேக்ஸ் ஊழல் குற்றச்​சாட்டில் இதுவரை ஆ.ராசாவின் பெயரை சி.பி.ஐ. சேர்க்கவில்லை. கையெழுத்துப் போட்ட அதிகாரிகள் மற்றும் அந்த குறிப்பிட்ட நிறுவனம் ஆகியோரை குறி வைத்துதான் சி.பி.ஐ. ரெய்டு நடத்தி இருக்கிறது. இவர்களை பின்னால் இருந்து இயக்கியவரின் பெயரை இனிவரும் விசாரணைகளிலாவது அதிகாரிகள் நிச்சயம் சொல்​வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அந்த வகையில், எங்களது நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் குல்தீப் கோயல் வீட்டிலும்கூட ரெய்டு நடந்திருக்கிறது.

கடந்த சில வருடங்களில் பி.எஸ்.என்.எல். நிறு​வனத்தில் நடந்த ஊழல்களைப் பற்றி விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பிரதமரிடம் நாங்கள் கோரிக்கை வைக்கப் போ​கிறோம். பெரியஆலமரம் போன்ற எங்கள் நிறுவனத்தை ஊழல்வாதிகள் சரமாரியாக அரித்து, கிட்டத்தட்ட சாய்த்துவிட்டார்கள். எனவே, ஊழியர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பை உருவாக்கி, ஊழலுக்கு எதிராகப் போராட திட்டமிட்டுள்ளோம்?'' என்றார்.

ஊழல் பாம்பு தலையை நீட்டும்போதே எச்சரிக்கைக் குரல்கள் கிளம்பியும்கூட... அப்போது சும்மா இருந்துவிட்டு, இப்போது அந்தப் பாம்பு வசமாக வந்து காலைச் சுற்றிய பிறகு விசாரணை என்று கம்பு தூக்கி இருக்கிறார்கள். பாம்பு சாகுமா, தடி முறியுமா? அல்லது, காலே காலியாகி விடுமா..? பார்ப்போம்!

- ஆர்.பி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism