Published:Updated:

கொலை செய்துவிட்டு தடயம் தேடுகிறார்களா?

எகிற வைக்கும் என்கவுன்டர் சந்தேகங்கள்

கொலை செய்துவிட்டு தடயம் தேடுகிறார்களா?

எகிற வைக்கும் என்கவுன்டர் சந்தேகங்கள்

Published:Updated:
##~##

கொள்ளையர்கள் என்ற பெயரில் ஐந்து இளைஞர்​கள் என்கவுன்டர் செய்யப்பட்​டதற்கு பாராட்டுகள் குவியும் நேரத்​தில் போலீஸின் இந்தச் செயலுக்கு எதிர்ப்புகளும், பலத்த சந்தேகங்களும் இருக்கத்தான் செய்கின்றன.   

சம்பவம்: போலீஸ் தரப்பில் 'கொள்ளையன் வினோத் குமார்’ என்று வெளியிடப்​பட்ட படம், வங்கிகளின் கேமராவில் இருந்த பதிவில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்தேகம் 1: அந்த வங்கிகளில் எல்லாம் அவருக்கு கணக்கு இருக்கிறதா அல்லது எந்த ஒரு வேலையுமே இல்லாமல் சும்மா வந்து இருந்தாரா? வேறு யாராவது நண்பர்களின் கணக்கில் பணம் செலுத்தவோ, துணைக்காகவோ வந்திருக்கலாமே!

கொலை செய்துவிட்டு தடயம் தேடுகிறார்களா?

சம்பவம்: இரவு 12.30 மணிக்கு கொள்ளையர் தங்கி இருக்கும் இடம் பற்றி போலீஸுக்குத் தகவல் வந்ததாகவும், அதிகாலை 1 மணிக்குத்தான் அந்தப் பகுதிக்கு போலீஸ் படை சென்ற​தாகவும் கமிஷனர் கூறுகிறார்.

சந்தேகம் 2: மாலை 6 மணிக்கே அந்தப் பகுதிக்கு, போலீஸ் படை வந்துவிட்டதாகவும், இரவு 10 மணிக்குஅந்தப் பகுதி மக்களை விரட்டி, வீடுகளைப் பூட்டிக் கொள்ளுமாறும், யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மிரட்டி​ய​​தாகவும் அங்கு வசிக்கும் மக்கள் சொல்வது எப்படி?

சம்பவம் : அதிகாலை 3 மணிக்கு ஐந்து சடலங்​களையும் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது, அனைவருமே ஜீன்ஸ், டி.ஷர்ட் மற்றும் ஷூ அணிந்த நிலையில் இருந்தனர்.

கொலை செய்துவிட்டு தடயம் தேடுகிறார்களா?

சந்தேகம் 3: அர்த்த ராத்திரியில் தூங்கும்போதுகூட இந்த உடைகளை அணிந்துதான் தூங்கிக்கொண்டு இருந்தார்​களா? அந்த ஐந்து பேரையும் எங்கேயோ அழைத்துச் சென்று, விசாரணை முடிந்தபிறகு இங்கு கொண்டு வந்தார்கள் என்று சொல்லலாமா?

சம்பவம் : சரண் அடையும்படி கொள்​ளை​யரை எச்சரிக்கை செய்ததாகவும், அவர்கள் ஜன்னல் வழியாகத் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதனால், அந்தத் தெருவில் வசிக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்காக, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்த போலீஸ் படை, கொள்ளையரைச் சுட்டதாகவும் கமிஷனர் திரிபாதி கூறுகிறார்.

கொலை செய்துவிட்டு தடயம் தேடுகிறார்களா?

சந்தேகம் 4: தெரு முழு​வதும் போலீஸ் நடமாட்டம் இருந்ததால், அந்தச் சத்தத்திலேயே மக்கள் தூங்காமல் இருந்துள்ளனர். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் எதுவும் கேட்கவில்லை என்கிறார்​கள். சத்தமே வராமல் என்கவுன்டர் நடந்தது எப்படி? சத்தம் வராத சைலன்ஸர் பொருத்தப்பட்ட துப்பாக்கியை போலீஸார் பயன்படுத்தினார்களா?

சம்பவம் : அந்த ஐந்து பேருமே கொள்ளையர்கள் என்று உறுதி செய்யப்​பட்டது. அந்த வீட்டு உரிமை​யாளர் மற்றும் ஐ.ஓ.பி. வங்கி ஊழியர்கள் சடலங்களை அடை​யாளம் காட்டியதாக போலீஸ் தரப்பில் கூறப்​படுகிறது.

சந்தேகம் 5 : சுட்டுக் கொன்றபிறகு அடையாளம் காட்டச் சொல்லி கேட்டது சரியா? 'இந்த நபர்கள் இல்லை...’ என்று கூறி இருந்தால் என்ன செய்ய​முடியும்? மேலும், சம்பவம் நடந்த மறுநாள், அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்த  உடல்களைப் பார்த்து அடையாளம் காண்பிக்க, வங்கி ஊழியர்​களை அழைத்து வந்தது ஏன்?  

சம்பவம்: போலீஸார் சரமாரியாகச் சுட்டதில் ஐந்து பேரும் ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்தனர். உடனே, அவர்களை ஆம்​புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். செல்லும் வழியிலேயே இறந்துவிட்டனர் என்று போலீஸ் கமிஷனர் கூறுகிறார்.

சந்தேகம் 6: அந்த வீட்டுக்குள் ரத்தம் வழியும் உடல்களை வெளியே இழுத்துச் சென்றதற்கான தடயங்கள் உள்ளன. ஆனால், உடல்கள் கிடந்த இடம் அருகே சுவர் பளிச் என்றே இருக்கிறது. வீட்டில் எந்த ஒரு பொரு​ளிலும் ரத்தக் கறை இல்லை. துப்பாக்கியால் சுடப்பட்டு இருந்தால் சுவர் மற்றும் அருகில் இருந்த பொருட்களில் ரத்தம் தெறித்து இருக்க வேண்டுமே?

சம்பவம்: கதவை உடைத்துக் கொண்டு புகுந்த போலீஸார், கண் இமைக்கும் நேரத்தில் ஐந்து பேரையும் சுட்டதாக கமிஷனர் சொல்கிறார். கொள்ளையர் என்று கூறப்படும் இளைஞர்களிடம் ஏழு துப்பாக்கிகள் இருந்ததாகவும் போலீஸ் சொல்கிறது.

சந்தேகம் 7: அந்த வீட்டுக் கதவில் தாழ்ப்​பாள்​கூட உடையவில்லை. கதவிலும் சேதம் இல்லை. கதவை உடைத்த நேரத்தில் ஒருவர் கூடவா கதவை நோக்கிச் சுடவில்லை? முதலில் நுழைந்த போலீஸ் மீது குண்டு பாய்ந்து இருக்குமே? ஆனால், போலீஸ் தரப்பில் மட்டும் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது எப்படி? என்கவுன்டர் நடத்திய போலீஸ், புல்லட் புரூப் ஜாக்கெட் அணிந்து இருந்தார்களா?

சம்பவம் : இறந்த வினோத்குமாரின் சடலத்தை வாங்க வந்த அவனது தந்தை மற்றும் உறவினர்கள் விமானத்தில் வந்து, மகனின் உடலை வாங்கிக் கொண்டு மீண்டும் விமானத்திலேயே பீகார் சென்று உள்ளனர்.

சந்தேகம் 8: வினோத்குமாரின் தந்தை மற்றும் உறவினர்களை பத்திரிகையாளர்கள் சந்தித்துவிடாமல் போலீஸ் தடுத்தது ஏன்? கொள்ளை அடித்த பணத்தை உறவினர்களிடம் கொடுத்து இருந்தாரா என்பது விசாரிக்கப்பட்டதா? விமானத்தில் வந்து செல்லும் அளவுக்கு வசதியான குடும்பம் என்றால், வினோத்குமாரின் தந்தை என்ன தொழில் செய்கிறார்? தந்தை மற்றும் உறவினர்களிடம் இருந்து பணம் மீட்கப்பட்டதா?

சம்பவம் : கொள்ளையர் என்று சொல்லப்படும் ஐந்து பேரின் பெயர் மற்றும் விவரங்கள் அந்த அறையில் கிடந்த அடையாள அட்டைகள் மூலம் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்​பட்டன. ஆனால், அந்தப் பெயர்களில் பெரும் குழப்பம்.

சந்தேகம் 9: யார் என்றே தெரியாமல், அவர்கள் ஐந்து பேரும்தான் கொள்ளையர்கள் என்று முடிவு செய்தது எப்படி?

சம்பவம்: ஐந்து பேரும் வீட்டுக்குள் இருந்து ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சுட்டதாக கமிஷனர் சொல்கிறார்.

சந்தேகம் 10: ஐந்து பேரும் வசித்த வீடு மிகவும் குறுகலான சந்தில் இருக்கிறது. ஜன்னல் வழியாக சுட்டு இருந்தால், எதிரில் இருக்கும் வீட்டின் சுவரில் குண்டுகள் துளைத்து இருக்க வேண்டும். அப்படி எத்தனை குண்டுகள் எதிர் வீட்டுச் சுவர்களில் இருந்து எடுக்கப்பட்டன? அதே ஜன்னல் வழியாக மயக்க மருந்து செலுத்தியோ, கண்ணீர்ப் புகை செலுத்தியோ அவர்களை உயிருடன் பிடிக்க போலீஸ் முயற்சி செய்யாதது ஏன்? கதவு உடைக்கப்படாமல் போலீஸ் உள்ளே சென்றது எப்படி?

இதுபோன்ற சந்தேகங்களை அடிப்படையாக வைத்து, 'காவல் துறையினர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302-வது பிரிவின் கீழ் உடனடியாக கொலை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும், விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றவேண்டும்’ என்று உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொலை செய்துவிட்டு தடயம் தேடுகிறார்களா?

வழக்கு தொடர்ந்துள்ள சிறைக் கைதிகள் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் புகழேந்தியை சந்தித்தோம். ''கடந்த 23-ம் தேதி நள்ளிரவு, தங்களை தற்காத்துக் கொள்வதற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல் துறை கூறுவது சுத்தப் பொய். ஏனென்றால், சம்பவ இடத்தை நாங்கள் பார்வையிட்டோம். அங்கு துப்பாக்கி மோதல் நடைபெற்றதற்கான எந்தத் தடயமும் இல்லை. துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் காயமடையும் போது, அவருடைய ரத்தம் சிதறித் தெறிக்கும். ஆனால், கொள்ளையர்கள் தங்கியிருந்த அறையின் சுவற்றில் ஒரு துளி ரத்தம்கூட கிடையாது. கொள்ளையர்களை தரையில் படுக்கவைத்து, அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருந்தால்தான் இப்படி ரத்தம் சிதறிக்கிடக்கும் வாய்ப்பு உண்டு.

காவல்துறையில் உள்ள எங்களுக்கு நெருக்கமான நண்பர்களிடம் விசாரித்தோம். கடந்த 21-ம் தேதி வேளச்சேரியில், மற்றொரு பகுதியில் தங்கியிருந்த வட மாநில இளைஞர்கள் ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தியுள்ளது. அவர்களில் ஒருவன் அடையாளம் காட்டியதன் பேரிலே வினோத் குமார் உள்ளிட்ட மற்ற ஐந்து பேர் தங்கியிருந்த அறையை காவல்துறை கண்டுபிடித்து சுற்றி வளைத்தது. அதன்பிறகு, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், அவர்களை கண்களையும் கைகளையும் கட்டி வேனில் ஏற்றியுள்ளது. அப்போது, அவர்களுக்கு தொலைபேசியில் மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவையடுத்து, அவர்களை மீண்டும் அறைக்குள் கொண்டு போய் அவர்களை கீழே படுக்க வைத்து, சுட்டுக் கொன்றதாகத் தகவல்.

எப்படிப் பார்த்தாலும் நடைபெற்ற சம்பவம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயல். திட்டமிட்ட படுகொலை என்பது தௌ¤வாகத் தெரி​கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்​படுத்த வேண்டிய அரசு ஊழியர்களான காவல்​துறையே சட்டத்தை மீறி இருப்பதும், அவர்களே குற்றவாளிகளுக்குப் பொய்யான காரணங்களை ஜோடித்து மரண தண்டனை வழங்குவதும் மிகவும் ஆபத்தான போக்கு. எனவே, தற்போது ஐந்து பேரைச் சுட்டுக் கொன்ற காவல்துறை (அவர்கள் கூற்றுப்படி தற்பாதுகாப்புக்காகவே என்றாலும்) மீது வழக்குப் பதிவு செய்து, முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த சம்பவத்தை ஆதரிக்கும் பொதுமக்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, சென்னை மாநகரில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் 60 சதவிகிதம் பொய்யான வழக்குகள். காவல்துறை படுகொலைகளை நாம் ஆதரித்தால், நாளை நம் மீதோ அல்லது நமது வீட்டில் உள்ளவர்கள் மீதோ பொய் வழக்கு போடப்பட்டு, நாமும் என்கவுன்டருக்கோ அல்லது ஜெயிலுக்குச் செல்லவோ நேரிடலாம்'' என்று படபடத்தார்.

- தி.கோபிவிஜய், எஸ்.கோபாலகிருஷ்ணன்

படங்கள்: கே.கார்த்திகேயன் 

சந்தோஷ வங்கி ஊழியர்கள்!

அனைத்து வங்கிகளின் சங்கத்தைச் சேர்ந்த 80 பிரதிநிதிகள், கமிஷனர் திரிபாதி​யை கடந்த 27-ம் தேதி சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களிடம் பேசிய போது, ''கொள்ளை​யர் சுடப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். பொது மக்களின் பணத்தை டீல் செய்யும் பணியில் இருக்கும் எங்களுக்கு இந்தக் கொள்ளை சம்பவத்தால் மிகுந்த பீதி ஏற்பட்டது. ஆனால், தமிழக போலீஸ் அதிரடியாகச் செயல்பட்டு, துப்பாக்கிச் சண்டை மூலம் பணத்தை மீட்டதால் இனி இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது''என்றனர். 

போலீஸ் விளையாட்டு!

கொலை செய்துவிட்டு தடயம் தேடுகிறார்களா?

வேளச்சேரி என்கவுன்டர் தொடர்பாக பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கையில், 'ஐந்து பேரையும் கொன்று தீர்க்கும் நோக்குடன்தான் காவல்படை சென்றுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய பேராசிரியர் அ.மார்க்ஸ், ''கைது செய்யப்பட வேண்டியவர் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அளவுக்குரிய குற்றத்தை செய்திருந்தால் மட்டுமே, அவரைக் கொல்லலாம் என்று, இந்திய தண்டனைச் சட்டம் 46 தெளிவாகச் சொல்கிறது. போலீஸ் சொல்லும் கதைப்படி பார்த்தால், அன்றைய நிலையில் அவர்கள் சந்தேகத்துக்குரிய நபர்களே. இதுகுறித்து கமிஷனர் திரிபாதியிடம் கேட்டால், 'எங்கள் உயிருக்கு ஆபத்து வந்தால், தற்காத்துக் கொள்ள எங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது’ என்று கோபப்படுகிறார். நாங்கள் என்கவுன்டர் நடந்த பகுதிக்குச் சென்றபோது, முதலில் அந்தப் பகுதி மக்கள் எங்களிடம் எவ்வித தயக்கமும் இன்றி பேசினார்கள். ஆனால், திடீரென அங்கு வந்த சிலர் போலீஸை வானளாவப் புகழ்ந்து பேசி, எங்களை விரட்டி அடிப்பதில் குறியாக இருந்தனர். என்கவுன்டர் கொலையைப் பாராட்டி ஆங்காங்கே திடீர் போஸ்டர்கள் முளைத்துள்ளன. இவை அனைத்தும் போலீஸின் கண்ணசைவுப்படியே நடக்கின்றன'' என்று சீறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism