Published:Updated:

இலங்கைக்கு ஒரு நியாயம்? இத்தாலிக்கு ஒரு நியாயமா?

முக்கியக் கட்டத்தில் முப்படைப் பாதுகாப்பு வழக்கு!

இலங்கைக்கு ஒரு நியாயம்? இத்தாலிக்கு ஒரு நியாயமா?

முக்கியக் கட்டத்தில் முப்படைப் பாதுகாப்பு வழக்கு!

Published:Updated:
##~##

மிழக மீனவர்களுக்கு முப்படைப் பாதுகாப்பு வழங்கக் கோரும் பொதுநல வழக்கு முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது. மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், கடந்த அக் டோபரில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், 'தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை’ என்று, சப்பைக்கட்டு மனுவைத் தாக்கல் செய்தது மத்திய அரசு. 'இது உண்மை இல்லை, இந்தியக் கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டதற்குக் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டதால், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு போட்டது நீதிமன்றம். இதை அடுத்து, பிப்ரவரி 15-ல், தமிழகத் தலைமைச் செயலாளருக்காக மீன்வளத்துறை கூடுதல் செயலாளர் தாக்கல் செய்த மனுவில், ''இலங்கைக்  கடற்படையில் உள்ள சமூக விரோதிகளால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைக்கு உட்பட்ட பகுதி  களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடக்கின்றன. 1996-ம் ஆண்டு முதல் இலங்கைக் கடற்படையின் சமூக விரோதிகள் (Rogues) நடத்திய 167 தாக்குதல் சம்பவங்களில் 85 மீனவர்கள் இறந்திருக்கிறார்கள், 180 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். 1974-ல் தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல், கச்சத்தீவு, இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. அதுகுறித்து அரசியலமைப்பு சட்டத் திருத்தம் செய்யப்படாததால், அந்த ஒப்பந்தம் எப்போதோ காலாவதி ஆகிவிட்டது. இன்றைய தேதி வரை, கச்சத்தீவு தமிழக வருவாய் துறையின் சொத்தாகத்தான் இருக்கிறது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தவும் அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்கவும் ஒரே வழி, கச்சத்தீவை திரும்பப் பெறுவது மட்டுமே'' என்று மத்திய அரசுக்கு நெத்தியடி கொடுத்தது தமிழக அரசு. 

இலங்கைக்கு ஒரு நியாயம்? இத்தாலிக்கு ஒரு நியாயமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மறுவிசாரணை கடந்த 23-ம் தேதி வந்தபோது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன் ஆஜரானார். ''தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிப் போவதாலும் அதி நவீனப் படகுகள் மற்றும் வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதாலும், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்கள் அச்சப்படுகிறார்கள். அவர்கள்தான், எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களைத்

இலங்கைக்கு ஒரு நியாயம்? இத்தாலிக்கு ஒரு நியாயமா?

தாக்குகிறார்கள். தமிழக மீனவர்களின் படகுகளில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்தியக் கடல் எல்லைக்குள் அவர்கள் தாக்கப்பட்டால், ஜி.பி.எஸ். மூலம் இந்தியக் கடற்படைக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கிடைத்த 10-வது நிமிடம் இந்திய கடற்படை அந்த இடத்துக்குச் சென்றுவிட முடியும். இந்தியக் கடல் எல்லைக்கு அப்பால் தாக்குதல் நடப்ப தால்தான், இந்தத் தகவல்கள் இந்தியக் கடற்படைக்குத் தெரியாமல் போகின்றன'' என்று வா​தாடினார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், ''இலங்கைக் கடற்படையினர் அத்துமீறி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது வருத்தம் அளிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பெற்றுத் தரவும் கச்சத் தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது தமிழக அரசு'' என்றார்.

ஸ்டாலினின் வழக்கறிஞரான பீட்டர் ரமேஷ் குமார், ''மத்திய அரசு அரபிக்கடலுக்கு ஒரு நிலைப்பாட்டையும், பாக் ஜலசந்திக்கு ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கிறது. கேரளாவில் இத்தாலியக் கப்பற்படை வீரர்கள் இரண்டு மீனவர்களை சுட்டுக் கொன்றார்கள். அந்த சம்பவத்தில் மத்திய அரசு தாமதிக்காமல் தலையிட்டு இரண்டு பேரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டாலும் கொல்லப்பட்டாலும் மௌனத்தைக் கடைப்பிடித்து மாற்றாந் தாய் மனப்போக்குடனேயே செயல்படுகிறது'' என்று வாதிட்டார். மூன்று மணி நேரம் நடந்த விசாரணையின் முடிவில், ''தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு எத்தனை தாக்குதல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதில் பாதிக்கப் பட்டவர்களின் விவரங்களை, தமிழக அரசு இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்கள் நீதிபதிகள்.

கோர்ட்டுக்கு வெளியே நம்மிடம் பேசிய மனுதாரர் ஸ்டாலின், ''தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு 10 நாட்களுக்குள் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 14-ம் தேதி கோர்ட் உத்தரவிட்ட பிறகும், இதுவரை 28 தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இதுதொடர்பாக தமிழகக் கடலோரக் காவல்படையும் க்யூ பிரிவும் வழக்குகளைப் பதிவு செய்திருக்கின்றன. இவற்றை நீதி மன்றத்தில் தமிழக அரசு கட்டாயம் தாக்கல் செய்யும். அப்படிச் செய்தால், மத்திய கேபினெட் செயலர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புச் செயலர், கடலோரக் காவல்படை துணை இயக்குநர், வெளியுறவுத் துறை செயலர் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்புக்காக கோர்ட் தண்டிக்க வாய்ப்பு இருக்கிறது'' என்றார் உறுதியுடன்.

இனியாவது நியாயம் கிடைக்கட்டும்!                                                  

- குள.சண்முகசுந்தரம்

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி                                                                    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism