Published:Updated:

க்ளைமாக்ஸ் நெருங்கும் கூடங்குளம்!

அணு உலை ஆதரவும் எதிர்ப்பு

க்ளைமாக்ஸ் நெருங்கும் கூடங்குளம்!

அணு உலை ஆதரவும் எதிர்ப்பு

Published:Updated:

கூடங்குளம் அணு உலையைத் திறக்க வாரங்கள், மாதங்கள் என்று கெடு சொல்லிவந்த மத்திய அரசு, '15 நாட்களில் கூடங்குளம் அணு உலைப் பணிகள் தொடங்கப்படும்’ என்று அறிவித்து, பரபரப்பைக் கூட்டியுள்ளது. 

க்ளைமாக்ஸ் நெருங்கும் கூடங்குளம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கிடையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மின் வெட்டு அதிகரிக்கவே, மக்கள் கொதித்து எழுந்து விட்டார்கள். கோவை, திருப்பூர் போன்ற தொழில் பகுதிகளில் மின்வெட்டைக் கண்டிப்பதுடன், 'அணு உலையைத் திறக்க வண்டும்’ என்றும் முழங்கத் தொடங்கிவிட்டார்கள். அணுஉலை எதிர்ப்பாளர்கள் கன்னியாகுமரியில் உண்ணாவிரதம் நடத்த... அணுஉலை ஆதரவாளர்கள் உண்ணும்விரதம் நடத்துகிறார்கள். இந்து முன்னணியினர் கூடங்குளம் திறக்கப்பட வேண்டும் என்ற பிரசாரத்தை முடுக்கிவிட்டு உள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் தனது கோரிக்கையை வலுவாகப் பேசி  வருகிறது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா நடத்திய பாதயாத்திரை தென் மாவட்டங்களில் நடந்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசு அமைத்துள்ள வல்லுநர் குழு, திருநெல்வேலி வந்து தன்னுடைய விசாரணையை முடித்து விட்டுக் கிளம்பிவிட்டது. அவர்கள் அறிக்கை, 'கூடங்குளம் அணுஉலையைத் திறக்க வேண்டும்’ என்பதாகத்தான் அமையும் என்று பலரும் சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். இந்த நிலையில், அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக பரவலான குற்றச்சாட்டுக்களை மத்திய அமைச்சர் நாராயணசாமி முன்வைத்துள்ளார். இதை பிரதமரும் வழி மொழிந்துள்ளார். பிரதமர் மற்றும் அமைச்சரின் பேச்சுக்களை ரஷ்ய தூதர் வரவேற்றுள்ளார். அமைக்கப்பட்ட அணு உலையைத் திறக்காமல் வைத்திருப்பதன் மூலம் எத்தனை 1,000 கோடி நஷ்டம் என்ற கணக்கை ரஷ்ய தூதர் வெளியிட்டு வருகிறார். இத்தகைய சூழ்நிலையில், கூடங்குளம் திறக்கப்பட இன்னும் சில நாட்களே உள்ளன என்ற நிலை உருவாகிவிட்டது.  இது, அணுஉலை எதிர்ப்பாளர்களைக் கோபம் அடைய வைத்துள்ளது. கடந்த வாரம் சென்னையில், 'அணுஉலையைத் திறக்கக் கூடாது’ என்பதை வலியுறுத்தி, அடுத்தடுத்து மூன்று நாட்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

க்ளைமாக்ஸ் நெருங்கும் கூடங்குளம்!

24-ம் தேதி, உயர் நீதிமன்றத்துக்கு எதிரில் வழக்கறிஞர்கள் திரளாகக் கலந்துகொண்ட கருத்தரங்கில்

க்ளைமாக்ஸ் நெருங்கும் கூடங்குளம்!

கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கி ணைப்பாளர் உதயகுமார் பேசினார். அடுத்த நாள் கலைஞர் கருணாநிதி நகர், எம்.ஜி.ஆர். நகரில் ம.க.இ.க., மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டன. இதில், கவிதை வாசித்த துரை. சண்முகத்தின் வார்த்தைகளில் அணு உலையைப் போன்ற வெப்பம் தகித்தது.  ''முன்கழுத்து வீங்கி, முழங்கால் பருத்து, கருப்பை புற்று வைத்து கை, கால் தோலுரிந்து நெற்றி புடைத்து நுரையீரல் அடைத்து...'' என்று அணுக் கழிவின் ஆபத்தைச் சொன்னபோது கூட்டம் பதைபதைத்தது.

ம.க.இ.க. பொதுச்செயலாளரும் எழுத் தாளருமான மருதையன், ''வீடு, நட்பு வட்டாரம், அலுவலகம், தொழிற்சாலைகளில் பிரச்னை ஏற்பட்டால் அதைப் பேசித் தீர்க்காமல், டாஸ்மாக்கில் 'குவார்ட்டர்’ விட்டுட்டு வந்தால் பிரச்னை தீர்ந்துடும்னு நினைக்கிறார்கள். அதுபோலத்தான், இப்போ எங்கே மின்வெட்டு என்றாலும் 'கூடங்குளத்தைத் திற’ என்கிறார்கள். தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர ஆதரித்த சேதுக்கால்வாய் திட்டத்துக்கு சில ஆயிரம் கோடி செலவழித்த பிறகு, ஜெயலலிதாவும் சு.சாமியும் வழக்குத் தொடுத்து உச்ச நீதிமன்றம் தடுத்துவிட்டது. மத்திய அரசும் அதை கிடப்பில் போட்டுவிட்டது. ஆனால், இப்போது 14,500 கோடி ரூபாய் செலவு ஆகிவிட்டது என்று காரணம் சொல்லி, கூடங்குளம் உலையைத் திறக்க மன்மோகன் ஒற்றைக்காலில் நிற்கிறார். காரணம், கூடங்குளத்தை அடுத்து, 17 லட்சம் கோடி மதிப்புள்ள அந்நிய தனியார் அணுஉலைகள் இந்தியாவில் வந்து இறங்கப்போகின்றன. கூடங்குளத்தில் அணுஉலையை தொடங்காவிட்டால், அடுத்தடுத்து எந்த உலையையும் கொண்டுவர முடியாது என்பதுதான் அவர்களின் பெரும்கவலை. அதற்காகத்தான், சகல வழிகளிலும் இறங்கி, மத்திய அரசு காரியம் சாதிக்கத் துடிக்கிறது'' என்று பகீர் தகவல்களைக் கொட்டினார்.

கடந்த 26-ம் தேதி, அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில், அண்ணா அரங்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. கூடங்குளம், இடிந்தகரை கிராம மக்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு அரசியல் அமைப்பினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வந்திருந்தார்கள். மாலை 4 மணிக்கு, எழும்பூரில் நடைபெற்ற பேரணியில் 5,000 பேர் திரண்டு வந்து, அணு உலைக்கு எதிர்ப்பைக் காட்டினர். மாலை 7 மணிக்கு தியாகராயர் நகர் முத்துரங்கன் சாலையில் தொடங்கிய கூட்டம் இரவு மணி 11.15 மணிக்குத்தான் முடிந்தது.

ஆதரவாளர்களும் அணி திரண்டுள்ளார்கள். எதிர்ப்பாளர்களும் திரண்டு வருகிறார்கள். இருவரது போராட்டங்களையும் பார்க்கும் போது கூடங்குளம் விவகாரத்தில் க்ளைமாக்ஸ் நெருங்குகிறது என்றே தெரிகிறது!

              - இரா. தமிழ்க்கனல்

      படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism