ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மன்மோகனை மயக்கிய மஞ்சள் பிசாசு!

மன்மோகனை மயக்கிய மஞ்சள் பிசாசு!

##~##

ன்மோகன் இப்போது சந்தோஷமாக இருக்கிறார். அதற்குக் காரணம் 'தங்கம்’! 

அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் நோட்டம் பார்க்கத்தான் முந்தைய பிரதமர்கள், உளவுத்துறையை அதிகமாகப் பயன் படுத்தினார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளை ஒழிப்பதற்கு உளவுத் துறையைப் பயன்

படுத்தாமல் ஆக்க​பூர்வ மாக பயன்படுத்துகிறார், பிரதமர் மன்மோகன் சிங்.

இன்றைய தினம், கத்திரிக்காயின் விலை என்ன? வெங்காயம் மார்க்கெட்டுக்கு சரியாக வருகிறதா? உருளைக் கிழங்கு என்ன விலைக்கு விற்கப்படுகிறது? என்று அறிவதற்கும் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலை குறித்து தனக்கு அறிக்கை கொடுக்கவும் ஐ.பி. போன்ற உளவுத்துறைகளுக்கு உத்தரவு போட்டுள்ளார் பிரதமர். ஒவ்வொரு மாதமும் பிரதமருக்கு இவர்கள்தான் விரிவான அறிக்கை கொடுக்கிறார்கள்.  

மன்மோகனை மயக்கிய மஞ்சள் பிசாசு!

இந்த அறிக்கைகளில் ஒன்றுதான் பிரதமரைக் குஷிப்படுத்தியுள்ளது. 'இந்தியா வசம் 300 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு கரன்ஸி கையிருப்பு இருக்கிறது. ரிசர்வ் வங்கி வசம் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கையிருப்பு உள்ளது. இது ரிசர்வ் வங்கியின் சாதனை’

மன்மோகனை மயக்கிய மஞ்சள் பிசாசு!

என்று ஐ.பி. தனது அறிக்கையைக் கொடுத்து உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி சுமார் 200 டன் தங்கத்தை வாஷிங்டனில் உள்ள ஐ.எம்.எஃப். நிறுவனத்தில் வாங்கியது. 28.34 கிராம் கொண்ட ஓர் அவுன்ஸ் தங்கத்தை சுமார் 1,045 டாலருக்கு வாங்கியது. இப்போது ஓர் அவுன்ஸின் விலை 1,781 என்று உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி வாங்கிக் குவித்த தங்கக் கட்டிகள் மூலம் இந்தியா வசம் சுமார் 558 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. இதன் மதிப்புதான் ஒரு லட்சம் கோடி​யைத் தாண்டி உள்ளது என்று ஐ.பி. அறிக்கை கொடுத்துள்ளது.

''தங்கத்தின் கையிருப்பு அதிகரித்து இருப்பதால், நாட்டின் பொருளாதாரம் வளமாக இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் மகிழ்ச்சியில் திளைக்கிறார்'' என்கிறது அவருடைய பத்திரிகைத் தொடர்பு அலுவலகம்.    

உளவுத்துறையும் பிரதமரும் மகிழ்ச்சி கொள்ளும் அளவுக்கு, இது உண்மையிலேயே நல்ல செய்திதானா? பொருளாதார வல்லுநர்கள் இது மகிழ்ச்சிக்குரிய செய்தி என்றே சொல்கிறார்கள்.

''1991-ம் ஆண்டு அரசு கஜானாவும் அன்னியச் செலாவணிக் கையிருப்பும் முற்றிலும் சரிந்துபோன சமயத்தில், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ், நிதி அமைச்சகத்தை மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்தார். அப்போது மன்மோகனுக்கு உதவியது 'தங்கம்’தான். அன்று நம் வசம் 67 டன் தங்கம் இருந்தது. அதை விமானத்தில் ஏற்றிச்சென்று, லண்டனில் உள்ள இங்கிலாந்து வங்கியிலும் சுவிஸ் வங்கியிலும் அடகு வைத்து கடன் வாங்கியது இந்தியா. இதனால், நாடு அவமானத்துக்கு உள்ளானது என்றாலும், சில வருடங்களில் அந்தக் கடனை அடைத்து தங்கத்தை மீட்டோம். 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே நிதிஅமைச்சர் இப்போது பிரதமராக இருக்கிறார். தங்கத்தின் கையிருப்பு இந்தியாவின் அவமானத்தை போக்கியதுடன், வளத்தையும் பறைசாட்டும் வகையில் இருக்கிறது'' என்று குதூகலிக்கின்றனர் பிரதமர் அலுவலகத்தினர்.

தங்கத்தை 'மஞ்சள் பிசாசு’ என்று வர்ணிப்பார்கள் இடதுசாரிகள். அவர்கள் இந்தச் செய்தியை விமர்சிக்​கிறார்கள். ''தங்கத்தை மத்திய அரசு கையிருப்பில் வைத்துக்கொள்ள முடியும். ஆனால், இதைப் பொது மக்களுக்கு விற்கவோ, கொடுக்கவோ முடியாது. ஒரு நெருக்கடியோ அல்லது கடன் வாங்கும் சூழ்நிலை வந்தால் மட்டுமே, இந்தத் தங்கம் கைகொடுக்கும். ஆனால், வளர்ச்சிப் பணிகளுக்கும் திட்டங்களுக்கும் இது எந்த வகையிலும் பயன்படாது. ஒரு நாடு தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதித்தால், அது சிக்கலில்தான் முடியும்'' என்று எச்சரிக்​கிறார்கள்.

தங்கம் குறித்து பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தலைவர் டாக்டர் ரெங்கராஜனும் இதே கருத்தை முன்வைக்கிறார். ''தேசிய வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளுக்கு வட்டி குறைந்துவிட்டது. பங்குச் சந்தை தடுமாறுகிறது. அதனால், மக்கள் தங்கள் பாதுகாப்புக்காக தங்கத்தில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். அதனால்தான் தங்கம் இறக்குமதி கூடுகிறது. 100 மில்லியன் டாலருக்கும் மேல் எண்ணெய் இறக்குமதி செய்கின்றோம். அதில் பாதி அளவுக்குத் தங்கத்தையும் இறக்குமதி செய்கின்றோம். நாட்டின் வளர்ச்சியில் பங்கு வகிக்கும் எண்ணெய் இறக்குமதி செய்வதைப் போன்றே, தங்கத்தையும் இறக்குமதி செய்வது சரியல்ல'' என்கிறார்.  

இதுகுறித்து, பொருளாதாரக் கமிட்டி தரப்பில் சில வாதங்கள் வைக்கப்படுகின்றன. ''மத்திய அரசின் நிதிநிலையில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்று ஒன்று உண்டு. ஒரு நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அளவை வைத்து இது கணக்கிடப்படும். வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் பணம் மற்றும் சரக்குகள், பொருட்களின் மதிப்பின் அளவையும் மற்றொரு பக்கம் நமது நாட்டில் இருந்து வெளிநாட்டுக்குக் கொடுக்கப்படும் பொருளின் மதிப்பு மற்றும் அனுப்பப்படும் பணத்தின் வேறுபாடுகளையும் வைத்துக் கணக்கிடுவார்கள். இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு அதிகபட்சம் இரண்டரை சதவிகிதம் வரையே இருக்க வேண்டும். ஆனால், தங்கம் அதிக அளவில் இறக்குமதி ஆனதன் விளைவாக, இந்தப் பற்றாக்குறை, நான்கு சதவிகிதத்தைத் தொடுகிறது. தங்கம் இறக்குமதி செய்வதற்கு வரி விதித்த பிறகும், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வராமல் இருப்பது ஆபத்துதான்'' என்று எச்சரிக்கை செய்கிறார்கள், பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினர்கள். பிரதமரே தங்கத்தின் மீது தீராத ஆசையில் இருக்கிறார் என்றால், பொதுமக்களும் அப்படித்தானே இருப்பார்கள்!

- சரோஜ் கண்பத்