ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

பாடமே துணை!

பரீட்சை எழுதும் பேரறிவாளன், முருகன்

##~##

தூக்குக் கயிறுக்கு 'ரிசல்ட்’ தெரியாத நிலையிலும், சலனமே இல்லாமல் மீண்டும் ஒரு முறை பரீட்சை எழுத இருக்கிறார் பேரறிவாளன்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி, கடந்த 20 வருடங்களாக கைதியாக, தூக்குத் தண்டனையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர் பேரறிவாளன். சிறையில் இருந்த படியே படித்துப் பட்டம் வாங்கி இருந்தாலும், இப்போது, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத ஆயத்தமாகி உள்ளார்.

ஜோலார்பேட்டையில் உள்ள பேரறி வாளனின் தந்தை ஞானசேகரன் என்கிற குயில்தாசனை சந்தித்தோம். ''சிறு வயது முதலே படிப்பின் பெருமைகளை அவனுக்குச் சொல்லி வளர்த் தோம். ஜோலார்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1987-ம் ஆண்டு 10-ம் வகுப்பை முடித்தான். பிறகு கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்தான். பிறகு நடந்த சோகத்தைத்தான் எல்லோரும் அறிவார்களே...

பாடமே துணை!

அவனுக்கு சின்ன வயதில் அம்புலிமாமா, பூந்தளிர் போன்ற புத்தகங்களை வாங்கிக் கொடுப்போம். அதன்பிறகு, புத்தகங்களை அவனே வாங்கிவந்து படிக்க ஆரம்பித்தான். எனது பரிசாக அவனுக்கு, மகாத்மா காந்திஜி யின் சத்தியசோதனை புத்தகத்தைக் கொடுத் தேன். அந்தப் புத்தகத்தை ஒரே நாளில் படித்து விட்டு, என்னிடம் விரிவாக விளக்கிச் சொன் னது இன்றும் என் காதில் கேட்கிறது.

சிறையில் பி.சி.ஏ. மற்றும் எம்.பி.ஏ. புராஜெக்ட் முடித்து விட்டான்.  தட்டச்சில் லோயர், ஹையர் முடித்து சான்றிதழும் பெற்றுவிட்டான். கடந்த மாதம் அவனைப் பார்த்தபோது, 'எனக்கு 12-ம் வகுப்புத் தேர்வு எழுதாதது ஒரு குறையாகவே இருக்கிறது. அதனால், நானும் முருகனும் இந்த வருடம் மார்ச் மாதம் தேர்வு எழுதப் போகிறோம்’ என்று சொன்னான். கண் கலங்கினேன். வெளி உலகத்தைப் பொறுத்தவரை என் மகன் சிறையில் இருக்கிறான். ஆனால், எங்களைப் பொறுத்தவரை சிறைச்சாலையைக் கூட அவன் பாட சாலையாக மாற்றிவிட்டான்!'' என்று உணர்ச்சி வசப்பட்டார்.

வேலூர் மத்தியச் சிறைச்சாலைக் கண்காணிப் பாளர் அறிவுடைநம்பியிடம்  பேசினோம். ''முருகனும் பேரறிவாளனும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை வரும் மார்ச் 8-ம் தேதி முதல் வேலூர் சிறையிலேயே எழுதுகிறார்கள். அவர்கள் எடுத்துள்ள பிரிவில் கணக்குப் பதிவியல், வணிகவியல் போன்ற பாடங்கள் உள்ளன. வாரம் ஒருமுறை ஆசிரியர்கள் சிறைக்கு வந்து அவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். சிறையில் உள்ள எம்.காம். பட்டதாரிகளும் பேரறிவாளன், முருகனுக்கு ஆர்வத்துடன் சொல்லித் தருகிறார்கள். இருவருமே நல்ல மாணவர்கள்'' என்றார்.

நல்ல 'ரிசல்ட்’ கிடைக்கட்டும்!

- கே.ஏ.சசிகுமார்