Published:Updated:

மிரட்டும் புதையல் வேட்டை... நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள்..!- கர்நாடகாவில் அதிர்ச்சி

ந.பொன்குமரகுருபரன்

கர்நாடகாவில் மத்வ பீடாதிபதிகளின் பிருந்தாவனத்தைப் பெயர்த்து, மர்ம நபர்கள் சிதைத்துள்ளது அம்மாநில மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இது புதையல் வேட்டை முயற்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சிதைக்கப்பட்ட துறவி வியாசராஜாவின் சமாதி
சிதைக்கப்பட்ட துறவி வியாசராஜாவின் சமாதி

கர்நாடகா மாநிலம், கோப்பல் மாவட்டம் அனேகண்டியில் உள்ளது, பிரசித்திபெற்ற நவ பிருந்தாவனம். துங்கபத்ரா நதிக்கரையோரம் அமைந்துள்ள இத்தீவு பகுதியில், மத்வ ஆசார்யர்களின் ஒன்பது பேரின் பிருந்தாவனங்கள் அமைந்துள்ளன. இதில்தான் கடந்த ஜூலை 17-ம் தேதி நள்ளிரவு வியாசராஜா என்கிற மகானின் சமாதியைப் பெயர்த்து எடுத்துள்ளனர் மர்ம நபர்கள். அவரின் சமாதிக்கு அருகே மர்ம நபர்கள் பயன்படுத்திய பூஜைப் பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் என்ன தேடினார்கள்? தேடியது கிடைத்ததா? என்பதும் மர்மமாகவே உள்ளது.

த்வைதம் துறவி வியாசராஜா
த்வைதம் துறவி வியாசராஜா

இதுகுறித்துப் பேசிய நவ பிருந்தாவனம் பகுதியைச் சேர்ந்தவர்கள், “ராகவேந்திரரின் முற்பிறவியாக அறியப்படுவர் விஜயராஜர். விஜயநகரப் பேரரசு முடிவுறும் தறுவாயில், அதன் தலைநகரமான ஹம்பியிலிருந்து தங்கக் கட்டிகள், வைர வைடூரியங்கள் ஆகியவற்றை மாட்டு வண்டிகளில் பல்வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக ஹம்பி பகுதி மக்களால் இன்றும் நம்பப்படுகிறது. இப்புதையல்கள் மகான்களின் பிருந்தாவனங்களில் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதி, அவற்றைக் கொள்ளையடிக்கும் முயற்சி கடந்த 400 ஆண்டுகளாகத் தொடர்கிறது.

அப்படிப் புதையல் தேடி வந்தவர்கள்தான், மகான் வியாசராஜரின் சமாதியை உடைத்துத் தேடியுள்ளனர். அதுவும் குரு பூர்ணிமா அன்று, சமாதிக்கு நள்ளிரவு பூஜைகளைச் செய்துவிட்டு உடைத்துள்ளனர். அவர்கள் என்ன எடுத்தார்கள், எங்கே சென்றார்கள் என்பதெல்லாம் மர்மமாகவே உள்ளது. உத்திராதி, ராகவேந்திர மடங்களுக்கு இடையே இந்த நவபிருந்தாவனத்திற்கு உரிமை கோரும் வழக்கு நடைபெற்றுவருகிறது. இதனால், பாதுகாக்க ஆள் இல்லாமல் நவபிருந்தாவனம் அந்தரத்தில் நிற்கிறது” என்றனர்.

சிதைக்கப்பட்ட துறவி வியாசராஜாவின் சமாதி
சிதைக்கப்பட்ட துறவி வியாசராஜாவின் சமாதி
மிரட்டும் புதையல் வேட்டை... நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள்..!- கர்நாடகாவில் அதிர்ச்சி

சம்பவம் குறித்து பேசியுள்ள கோப்பல் மாவட்டக் காவல் துறை எஸ்.பி.ரேணுகா சுகுமார், “துறவிகளின் சமாதி அமைந்துள்ள பகுதிக்கு, படகில் மட்டுமே செல்ல முடியும். மாலை 4:30 மணியுடன் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், முன்னதாகவே நவபிருந்தாவனம் சென்றுள்ள மர்ம நபர்கள், அங்கேயே இரவு தங்கியுள்ளனர். நள்ளிரவு தாண்டியவுடன் வியாசராஜாரின் சமாதிக்குப் பூஜைகளைச் செய்து, சமாதியை இரண்டு முதல் மூன்று அடிவரையில் தோண்டியுள்ளனர். இப்பகுதியில் சி.சி.டி.வி. கேமராவோ, பாதுகாவலர்களோ இல்லாததால், அவர்கள் யார்? என்ன பொருளைத் தேடி வந்தார்கள், எதையாவது எடுத்தார்களா போன்ற விவரங்கள் தெரியவில்லை. கங்காவதி காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

நவபிருந்தாவனம் மாத்வ சமூகத்தினரின் புனித இடமாகக் கருதப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கு அச்சமூகத்தினரும், இந்து மத மடங்களின் தலைவர்களும் கடும் கண்டத்தை எழுப்பியுள்ளனர்.

மிரட்டும் புதையல் வேட்டை... நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள்..!- கர்நாடகாவில் அதிர்ச்சி
மிரட்டும் புதையல் வேட்டை... நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள்..!- கர்நாடகாவில் அதிர்ச்சி

பிருந்தாவன் சிதைக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட பல்வேறு மடாதிபதிகள், ஆர்வலர்களைக் கொண்டு 15 மணிநேரத்திலேயே அதை மீண்டும் நிர்மாணித்துள்ளனர். ஏற்கெனவே பி.ஜே.பி-யால் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் குமாரசாமி அரசு, இச்சம்பவத்தால் மேலும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.