Published:Updated:

`தேனியில் கெடுபிடி; ஆந்திராவில் சாகுபடி!' - கஞ்சா நெட்வொர்க் கும்பலால் மிரளும் தமிழக போலீஸ்

கைதான கஞ்சா வியாபாரிகள்
கைதான கஞ்சா வியாபாரிகள்

கஞ்சா கடத்தல் வழக்குகளில் போலீஸாரிடம் பிடிபட்டாலும் வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தாலும் மதுரை, தேனி மாவட்டங்களில் சிலர் கஞ்சா தொழிலைக் கைவிடுவதாக இல்லை.

மதுரை மாவட்டம் திருமங்கலம், உசிலம்பட்டி வட்டாரத்தில் நேற்று நடந்த சோதனையில் மட்டும் 170 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றி, பெண்கள் உட்பட 8 பேரைக் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா கடத்திய பெண்கள்
கஞ்சா கடத்திய பெண்கள்

கஞ்சா கடத்தல் வழக்குகளில் போலீஸாரிடம் பிடிபட்டாலும் வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தாலும் மதுரை, தேனி மாவட்டங்களில் சிலர் கஞ்சா தொழிலைக் கைவிடுவதாக இல்லை. ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு மாற்றிவிட்டாலே லட்சக்கணக்கில் கையில் பணம் புரளும் தொழில்(!) என்பதால் ரிஸ்க் எடுப்பதையே ரஸ்க் சாப்பிடுவதுபோல் நினைத்து சிலர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்துதான் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனைக்குச் செல்கிறது. சமீபகாலமாக இலங்கைக்கும் அதிக அளவில் கஞ்சா கடத்தப்படுகிறது. அதனால் சர்வதேச அளவில் இத்தொழில் விரிவடைந்து வருகிறது.

நீண்ட காலமாகத் தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சிலர் கஞ்சா பயிரிட்டு வந்த நிலையில், காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் கடந்த 10 வருடங்களாக இப்பகுதியைச் சேர்ந்த கஞ்சா உற்பத்தியாளர்கள் ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர்.

ஆந்திராவில் சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் உள்ள நில உடைமையாளர்களிடம் விவசாயம் செய்யவுள்ளதாகக் கூறி அதிக பணம் கொடுத்து நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயப் பயிர்களுக்கு நடுவே கஞ்சாவைப் பயிரிட்டு வருகின்றனர். தமிழகக் காவல்துறை அளவுக்கு அங்கு கெடுபிடிகள் இல்லாததால் பல ஏக்கர்களில் கஞ்சாவைப் பயிரிட்டுள்ளார்கள்.

தற்போது வெளிநாட்டு ஆர்டரும் வருவதால் இலங்கைக்கு ராமேஸ்வரம் கடல்பகுதி வழியாகக் கஞ்சா கடத்துகிறார்கள்.
போலீஸார்

கஞ்சா நன்றாக வளர்ந்த பின் அறுவடை செய்து பக்காவாக பார்சல் செய்து ரயில், பேருந்து, கார்கள் மூலம் மதுரைக்குக் கொண்டு வந்துவிடுகிறார்கள். இங்கிருக்கும் மொத்த வியாபாரிகள், எந்த ரிஸ்க்கும் இல்லாமல் பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். தற்போது வெளிநாட்டு ஆர்டரும் வருவதால் இலங்கைக்கு ராமேஸ்வரம் கடல்பகுதி வழியாகக் கடத்துகிறார்கள்.

கூலித் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் வரை கஞ்சா போதைக்கு அடிமையாகி வரும் சூழலில் அவ்வப்போது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் கஞ்சா தொழிலை முழுமையாக நிறுத்த முடியவில்லை.

`கன்டெய்னர் லாரி; முன்னும் பின்னும் கார்கள்!'- ரகசியக்  கண்காணிப்பால் சிக்கிய 700 கிலோ கஞ்சா

தற்போது மதுரை மாவட்ட எஸ்.பி மணிவண்ணனின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று உசிலம்பட்டி - பேரையூர் சாலையில் வந்த காரில் 21 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றினர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ராஜகொடி, தமிழ்ச்செல்வி ஆகிய இரண்டு பெண்களை கைது செய்தனர். செக்கானூரணி வாகன சோதனையின்போது டூ வீலரில் 27 கிலோ கஞ்சாவுடன் சென்ற செல்வம் என்ற நபரைக் கைது செய்தனர்.

`12 கிலோ கஞ்சா; மாதம் ரூ.13,000 வாடகை..!'- சர்ச்சையில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள்

திருமங்கலம் அருகே சிந்துபட்டியில் ஒரு வீட்டில் 120 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றி ஆனந்த், முருகன், பாக்கியராஜ், காசிமாயன் ஆகியோரைக் கைது செய்தனர். சேடப்பட்டியில் ராமர் என்ற பெரியவரிடம் 3 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றினர்.

``ஒருநாளில் மட்டும் உசிலம்பட்டி, திருமங்கலம் வட்டாரத்தில் 171 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது என்றால் தமிழகம் முழுவதும் புழக்கத்தில் உள்ள கஞ்சாவை நினைத்தால் அதிர்ச்சியாக உள்ளது" என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு