Published:Updated:

தவறு செய்தாரா? சிக்கவைக்கப்பட்டாரா?

ராஜனின் ஜாதக ரிப்போர்ட்

தவறு செய்தாரா? சிக்கவைக்கப்பட்டாரா?

ராஜனின் ஜாதக ரிப்போர்ட்

Published:Updated:
##~##

'நாட்டுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்’ - சென்னை தி.நகரில் இருக்கும் மத்திய வருவாய்ப் புலனாய்வு அலுவலகத்துக்குச் சென்றால், மேற்கண்ட வாசகம்தான் நம்மை வரவேற்கும். வருவாய்ப் புலனாய்வுத் துறையின் கூடுதல் இயக்குநரான ராஜனும், அவரது டிரைவர் முருகேசனும் லஞ்சப் புகாரில் சி.பி.ஐ-யிடம் சிக்கியதைத் தொடர்ந்து, இத்தனை நாளும் இவர்கள் எதற்காக ஒன்றிணைந்து உழைத்தார்கள் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. 

வெளிநாட்டில் இருந்து செல் போன்களை இறக்குமதி செய்யும், 'சூப்பர் கிங் மியாட் சின்’ என்ற நிறுவனத்தின் மீது மத்திய வரு வாய்ப் புலனாய்வு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, அதன் குடோன்களுக்கு சீல் வைத்து இருந்தனர். அந்த நிறுவனத்தின் வங்கிக்கணக்கும் முடக்கப்பட்டது. அந்த

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தவறு செய்தாரா? சிக்கவைக்கப்பட்டாரா?

சீலை அகற்றவும், வங்கிக் கணக்கை ரிலீஸ் செய்யவும் நடத்தப்பட்ட பேரத்தில் இரண்டு லட்ச ரூபாய் வாங்கியதாக ராஜன் சிக்கி உள்ளார்.

அடிக்கடி ரெய்டு நடத்தி கடத்தல் பொருட்களைக் கைப்பற்றுபவர்... கண்டிப்பான, நேர்மையான அதிகாரி... மீடியா பிரியர் என்பதுதான் இதுவரை ராஜன் மீதான இமேஜ். 'செம்மரக் கடத்தலுக்கு முட்டுக்கட்டை போட்டதால், திட்டம் போட்டு இவரை சிக்க வைத்து விட்டார்கள்’ என்று சிலரும், 'இல்லை... தவறான நபர்களை நிறையவே வளர்த்து விட்டார்’ என்று சிலரும் சொல்கிறார்கள். அவரை நன்கு அறிந்தவர்களிடம் பேசினால், இன்னும் நிறைய விஷயங்களைக் கொட்டுகிறார்கள். இவை எல்லாம் உண்மையா என்பதை சி.பி.ஐ. அதிகாரிகள்தான் நிரூபிக்க வேண்டும்.

கிளியரன்ஸ் கிடுக்கி!

தமிழகத்தில் இருந்து கடல் மற்றும் வான் வழியாக எந்தப் பொருள் வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தாலும், அங்கு இருந்து வருவதாக இருந்தாலும் அது, ராஜனின் கண்களுக்குத் தப்பாது. அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் துறை என்பதால், காஃபிபோசா போன்ற சட்டங்கள் கடுமையாக இருக்கும். அதைத் தனக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டாராம் ராஜன்.

உதாரணமாக, ஒரு சம்பவத்தைச் சொல்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் சென்னை எழும்பூரில் இருக்கும் ஒரு நிறுவனம் வெளிநாட்டில் இருந்து சில பொருட்களை இறக்குமதி செய்தது. பொருட்களின் விலை மதிப்பைக் குறைத்துக் காட்டி இருப்பதாகக் கூறி, ஒரு டீல் போட்டாராம் ராஜன். அந்த நிறுவனம் சம்மதிக்க மறுக்க... கிளியரன்ஸ் கிடைக்கவே இல்லை. சரக்கு வைப்பகத்துக்கு நிறுவனம் செலுத்த வேண்டிய வாடகை நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே சென்றது. அந்த சரக்கு வெளியில் வராவிட்டால், நிறுவனத்தை இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை. இறுதியில் ராஜன் சொன்னபடி செய்துவிட்டு சரக்கை எடுத்து வந்தார்களாம்.

சட்ட விரோதமாகக் கொண்டுசெல்லும் 10 பொருட்களை விட்டுவிட்டு, ஒன்றை மட்டும் மடக்கி மீடியாவில் தன்னை நேர்மையான அதிகாரி போல் காட்டிக்கொள்வது ராஜனின் ஸ்டைல் என்கிறார்கள் கஸ்டம்ஸ் வட்டாரத்தில். சென்னை புறநகரில் இருக்கிறது ஒரு பிரபல கார் நிறுவனம். இந்தக் கார் நிறுவனத்துக்கு தேவையான உதிரி பாகங்கள் வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி ஆகிறது. இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக 400 கோடி அளவுக்கு சுங்கவரி ஏய்ப்பு செய்தது. இது ராஜனுக்குத் தெரிந்தும் கண்டுகொள்ளவில்லையாம். இந்த விவகாரம் அரசல்புரசலாக சி.பி.ஐ. காதுக்குப் போக... அதன்பிறகே, வேறு வழி இல்லாமல் அந்த நிறுவனத்துக்கு ராஜன் நோட்டீஸ் அனுப்பினார் என்கிறார்கள்!

செம்மரம் சீக்ரெட்ஸ்!

செம்மரத்தொழில் நடத்தி வரும் மூன்று எழுத்து தாதா ஒருவருக்கு சென்னை புறநகரில் குடோன் இருக்கிறது. 500 டன் இருப்பு வைத்துக்கொள்ள மட்டும்தான் அவருக்கு அனுமதி. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரே நேரத்தில் அந்த குடோனில் 3,000 டன் இருப்பு இருந்தது. இந்த விவகாரத்தை ஒரு ஸ்பை, ராஜனிடம் போட்டுக்கொடுக்க... போட்டுக் கொடுத்தவரைப் புரட்டி எடுத்தார் தாதா. 'அங்க சொன்னது இங்க எப்படித் தெரியும்?’ என்று அந்த ஆசாமி யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, மொத்தக் கட்டைகளும் கடல் கடந்து போய்க்கொண்டு இருந்தன.

விசாகப்பட்டினம் துறைமுகமும் ராஜனின் கட்டிப்பாட்டில்தான் இருக்கிறது. அந்த ரூட்டில் தாதா சாதித்துக்கொண்டது அதிகம். அதனால், அந்த துறைமுகம் வழியாக அந்த தாதா எப்போது என்னென்ன செய்தார் என்று சி.பி.ஐ. கிளறினாலே, ராஜனின் பாதி ஜாதகத்தை எடுத்துவிடலாம் என்கிறார்கள். ராயபுரத்தில் இருக்கும் ஒரு கதர்ப் புள்ளியின் அண்ணனும் செம்மரத் தொழிலில் கில்லி. தமிழகத்தில் எந்த மூலையில் என்ன சிக்கல் என்றாலும் உடனடியாக இவர் ராஜனுக்குத்தான் போனை சுழற்றுவாராம்!  

துபாய் ஃபிரெண்ட்ஷிப்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுக​நேரிதான் ராஜனின் சொந்த ஊர். வெளிநாட்டுப் பொருட்களை விற்கும் சிலர், ''குருவிகள் வட்டா​ரத்தில் மூன்றெழுத்து நபரின் பெயர் பிரபலம். உலகின் எந்த மூலையில் இருந்து என்ன பொருள் வேண்டுமானாலும் ஒரே நாளில் கொண்டுவந்து கொடுக்கும் நெட்வொர்க் திறமை அவருக்கு உண்டு. ராஜன் தூத்துக்குடி கஸ்டம்ஸ் கமிஷனராக இருந்தபோது, அவருடன் நெருக்கம் ஆனார். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் காஃபிபோசா பிரிவில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இப்போது துபாயில் தலைமறைவாக வாழ்ந்து வரும் அந்த நபரின் இன்றைய சொத்து மதிப்பு 500 கோடிக்கும் மேல் என்கிறார்கள். சி.பி.ஐ. அதிகாரிகள் விலாவாரியாக விசாரணை நடத்தி னால், தூத்துக்குடியில் ஆரம்பித்து துபாய் வரை பல கோடிகளைத் துருவலாம்...'' என்று அதிர வைத்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்தும் லஞ்சப் புகாரில் சிக்கியது குறித்தும் கைதான அன்று ராஜனிடம் விளக்கம் கேட்டோம். ''என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை கிடையாது. 'உங்க நண்பர் உபைதுல்லா ஸ்வீட் கொடுத்தார் சார்’னு என் டிரைவர் அந்த பாக்ஸைக் கொண்டு வந்து வீட்ல வெச்சார். அது மட்டும்தான் எனக்குத் தெரியும். மத்தபடி அதுல என்ன இருந்ததுன்னு தெரியாது. திடீர்னு சி.பி.ஐ. அதிகாரிகள் வந்து அரெஸ்ட் பண்றோம்னு சொல்லிட்டாங்க. என்னோட கண்டிப்பான அணுகுமுறையால் பாதிக்கப்பட்ட கடத்தல் கும்பல்தான் என் பேரைக் கெடுக்கிறதுக்காக சதி பண்ணி என்னை சிக்கவெச்சிருக்காங்க. காலம் முழுவதும் நேர்மையா வேலையைப் பார்த்த ஒரு அரசு ஊழியனுக்கு இந்தக் கதியா?'' என்று தழுதழுத்தார்.

உண்மை எது என்பதை சி.பி.ஐ. அதிகாரிகள்​தான் நிரூபிக்க வேண்டும்!

- தி.கோபிவிஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism