Published:Updated:

பீகாரியும் ஒடிசாவாசியும் இந்தியர் இல்லையா?

கவலை தரும் 'வடக்கு' வெறுப்பு

பீகாரியும் ஒடிசாவாசியும் இந்தியர் இல்லையா?

கவலை தரும் 'வடக்கு' வெறுப்பு

Published:Updated:
##~##

காராஷ்டிரா, கர்நாடகா போலவே இனத்​தைக் காரணம் காட்டி சகமனிதனைத் துரத்தும் துரதிர்ஷ்ட நிலை தமிழகத்திலும் ஏற்பட்டுவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. மும்பையில் சிவசேனா, நவ நிர்மாண் கட்சிகளும், கர்நாடகாவில் கன்னட சலுவளி, கர்நாடக ரக்ஷண வேதிகே கட்சிகளும் இதைத்தான் செய்து பிழைப்பு நடத்துகின்றன. அந்த வட்டத்தில் நம் தமிழகத்தைச் சேர்ந்த சில அமைப்புகளும் கட்சி களும் இணைந்து​ விடும் அபாய சூழல் நிலவுகிறது. 

தமிழகத்தில் அபரிமிதமான மனிதஉழைப்பு தேவைப்படுகிற 90 சதவிகிதப் பணிகளைச் செய்வது பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்​கள்தான். சென்னையில் நடந்த தலைமைச் செயலகக் கட்டுமானப் பணி, தற்போது நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள்,  பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுமானப் பணி கள், இரும்புத் தொழிற்​சாலைகள், உள்ளூர் ஹோட்டல்கள் என எல்லா​வற்றிலும் உழைப்பைக் கொடுக்கிறார்கள். சென்னையில் நடந்த என்கவுன்டர், திருப்பூர் நகைக்கடைக்கொள்ளை உள்ளிட்ட சில குற்றச்சம்பவங்​களுக்குப்பிறகு தமிழகம் முழுவதும் வட இந்தியர்களின் நிலைமை படுமோசம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பீகாரியும் ஒடிசாவாசியும் இந்தியர் இல்லையா?

'உள்ளூர்க்காரனின் வேலைவாய்ப்புகளை தட்டிப்பறித்துவிட்டார்கள்’ என்று குற்றம் சொல்லும் சிலர், மேற்கண்ட பணிகளைச் செய்ய எத்தனை உள்ளூர்வாசிகள் தயார் என்பதையும் யோசிக்க வேண்டும். விவசாயப் பணிகளைச் செய்யக்கூட இங்கு ஆட்கள் இல்லை. மாநிலஅரசு கொடுக்கும் இலவச அரிசியும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டமுமே உள்ளூர்வாசிக்குப் போதுமானதாக இருக்கிறது!

பீகாரியும் ஒடிசாவாசியும் இந்தியர் இல்லையா?

இப்போது, போலீஸார் வட மாநிலத்தினர் தங்கி இருக்​கும் வீடுகளைச் சோதனை செய்​கிறார்கள். வீட்டில் தங்கி இருக்கும் வட மாநிலத்தவரின் புகைப்​படம் மற்றும் விரல்ரேகை பதிவு செய்யப்​படுகிறது. போலீஸ் புகுந்து விசாரித்தாலே, வட மாநிலத்தவரைக் காலி செய்​யச் சொல்கிறார்கள் வீட்டின் உரிமை​யாளர்கள். காலி செய்த​வருக்கு உடனடியாக வேறு வீடு தர யாரும் முன்வருவது இல்லை.

பள்ளிக்கரணையில் பாஷை தெரியாமல் சுற்றித் திரிந்த ஆந்திர வாலிபரை வட மாநிலத்தவன் என்று நினைத்து சிலர் சந்தேகத்தின் பேரில் தாக்கி இருக்கிறார்கள். சென்னையில் வங்கி ஒன்றில் பணம் செலுத்தச் சென்ற உத்தரப் பிரதேச மாநில நபரை ஒருநாள் முழுக்கவும் போலீஸ் நிலையத்தில் வைத்து, கடைசியில் குற்றமற்றவர் என்று விடுவித்துள்ளார்கள்.

சென்னையில் 1946-ம் ஆண்டு குடியேறியவர் பீகாரைச் சேர்ந்த ஷோபா காந்தாஸ். முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் தொடங்கி எம்.ஜி.ஆர்., கருணாநிதி வரை அரசியல்வாதிகளுடன் நெருங்கிப் பழகிய சுதந்திரப் போராட்டத் தியாகி. பீகார் அசோசியேஷன் என்ற அமைப்புக்குத் தலைவராக இருப்பவர். ''தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு கோஷம் ஒலித்த காலகட்டத்தில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை எதிரியாகப் பார்க்கும் மனோநிலை ஏற்பட்டது. ஆனால், அப்போதைய முதல்வர் அண்ணா, 'இந்தி மொழி எதிர்ப்புதான் நமது கொள்கை. ஆனால், இந்தி பேசுபவர்கள் நமது சகோதரர்களே’ என்று சொல்லி நிலைமையை சகஜம் ஆக்கினார். நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தது தான் சமூகம். குற்றம் செய்பவனைப் பிடித்து சட்டப் படி தண்டனை வாங்கிக் கொடுப்பதுதான் காவல் துறையின் கடமை.

மீடியாக்கள், 'வட இந்தியக் கொள்ளைக்காரர்கள்’ என்று குறிப்பிட்டுச் சொல்வதே தவறு. இப்போது இரவு 7 மணிக்கு மேல் பீகாரிகளும், ஒடிசாவைச் சேர்ந்தவர்களும் வெளியே செல்ல முடியவில்லை. ஒவ்வொரு தெருமுனையிலும் சோதனை செய்யப்​படுகிறார்கள். அவமானப்படுத்தப்​படுகிறார்கள். தமிழகத்தில் இருக்கும் இரும்புத் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பது பீகாரிகளே. உலையில் கொதிக்கும் இரும்புக் குழம்பை, அள்ளி ஊற்றும் வேலையைச் செய்ய வேறு யாரும் முன்வருவது இல்லை. படிக்க முடியாத காரணத்தால் கூலி வேலை செய்யும் அப்பாவியாக இருக்கும் பீகார்வாசிகள் உண்மையில் அமைதியானவர்கள். பயந்த சுபாவம்​கொண்டவர்கள்.

இங்கு கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் உள்ளூர்வாசிக்கு ஒருநாள் சம்பளமாக 400 முதல் 500 ரூபாய் வரை தருகிறார்கள். ஆனால், வட மாநிலத்துக்காரர் என்றால்  180 முதல் 300 வரை மட்டுமே தருகிறார்கள். அரசு முதல் தனியார் வரை அத்தனை வளர்ச்சிப் பணிகளிலும் உயிரைக் கொடுத்து வேலை செய்கிறார்கள். இந்தக் கடுமையான உழைப்பாளிகள் இல்லை என்றால் கட்டுமானப் பணிகள் என்ன ஆவது? தொழிற்சாலைகள் ஸ்தம்பித்துப்போகாதா?

இந்தியாவில் யாரும் எங்கும் போக​லாம்... வேலை பார்க்கலாம்... பிழைக்கலாம். கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால், தமிழகத்தில் தெருவுக்கு ஒருவர் நிறுத்தி சோதனை செய்கிறார்... கேள்வி கேட்கிறார். இதுதான் வேற்றுமையில் ஒற்றுமையா?'' கோபத்தில் வெடிக்கிறார் ஷோபா காந்தாஸ்.

குற்றவாளிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தண்டிக்கலாம் தவறு இல்லை. ஆனால், அப்பாவிகளை இனம், மொழி, மாநில பாகுபாடு காட்டிச் சந்தேகப்படுதல் பாவம்!

- டி.எல்.சஞ்சீவிகுமார்

படம்: பொன்.காசிராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism