Published:Updated:

லாரியை இரண்டு கைகளால் மறித்த சதீஷ்குமார்..

உயிர் குடிக்கும் மணல் மாஃபியாக்கள்!

லாரியை இரண்டு கைகளால் மறித்த சதீஷ்குமார்..

உயிர் குடிக்கும் மணல் மாஃபியாக்கள்!

Published:Updated:
##~##

ணல் கொள்ளை மாஃபியாக்கள், எந்த அளவுக்கு மோசமானவர்கள் என்பதற்கு அதிர்ச்சிகரமான ஓர் எடுத்துக்காட்டு, நம்பியாறு சம்பவம். இந்த ஆட்சியிலும் மணல் கொள்ளை, ஆட்சியாளர்களின் கட்டுப்​பாட்டை மீறி அமோகமாக நடக்கிறது என்பதையும் இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது. 

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நம்பியாற்றில் கடந்த பல வருடங்களாகவே மணல் கொள்ளை நடக்கிறது. இங்கே இருந்து மணலைத் திருடி, கேரளாவுக்கு கடத்திச் சென்று கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். ஆற்றில் மணல் அள்ளப்படுவதால் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நிலத்​தடி நீர் வற்றி, விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்​பட்டு​​ விட்டது. அத்துடன், குடிநீர் ஆதாரமும் பாதிப்புக்கு உள்​ளாகியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லாரியை இரண்டு கைகளால் மறித்த சதீஷ்குமார்..

இதனால் மிட்டாதார்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக் கள் தாங்களாகவே ஒரு குழு அமைத்து ஆற்றுப் பகுதிகளைக் கண்காணித்து வந்தனர். திருட்டுத்தனமாக வாகனங்களில் வந்து மணல் அள்ளப்படும்போது, அதுபற்றி வருவாய்த் துறையினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிப்​பார்கள். ஆனாலும், திருட்டுத்தனமாக மணல் கொள்ளை போய்க்கொண்டுதான்இருந்தது.

இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு நம்பியாற்று படுகையில் லாரியில் சிலர் மணல் அள்ளியதை மிட்டாதார்குளத்தைச் சேர்ந்த கண்காணிப்புக் குழுவினர் கண்டுபிடித்தனர். அதி காரிகளுக்குத் தகவல் தெரிவித்த பின்னர், அந்த லாரியை மடக்க முயற்சி செய்தார்கள். ஆனால் லாரி நிற்கவில்லை என்றதும், சதீஷ்குமார் என்ற இளைஞர் லாரியின் முன்னால் வந்து தடுத்து நிறுத்த முயன்றார். தனது இரண்டு கையாலும் மறித்து நின்றார். அதற்குப்பின் நடந்ததுதான் விபரீதம். சதீஷ்குமார் நிற்பதைப் பற்றி கவலையேபடாமல் அவர்மீது லாரியை ஏற்றினார் டிரைவர். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சதீஷ்குமார் மிதந்தார். கொதித்துப்போன கிராம மக்கள், நாகர்கோவில் - திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ராதாபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ-வான மைக்கேல் ராயப்பன், தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.

லாரியை இரண்டு கைகளால் மறித்த சதீஷ்குமார்..

இந்த சம்பவம் நடந்தபோது சதீஷ்குமாரின் தந்தை எஸ்டாக் வின்சென்ட் உடன் இருந்திருக்கிறார். தன் கண் முன்னே மகன் மீது லாரி ஏறியதைக் கண்ட அதிர்ச்சியில் இருந்து அவரால் மீளவே முடியாமல் இருக்கிறார். தாய் சரோஜாவும் பேசும் நிலையில் இல்லை. அதனால், உறவினரான ராஜ மிக்கேல் ராஜிடம் பேசினோம். ''சதீஷ்குமாருக்கு நாலு தம்பிகளும் ஒரு தங்கச்சியும் இருக்காங்க. மூத்தவனான இந்தப் பையன் டிப்ளமோ படிச்சிருக்கான். குடும்பத்தைக் காப்பாத்துவான்னு நம்பிட்டு இருந்த பையனைப் பறிகொடுத்துட்டு இந்தக் குடும்பமே கலங்கி நிக்குது. மணல் கடத்திய லாரி, நாங்குநேரி ஒன்றிய அ.தி.மு.க கவுன்சிலர் டென்சிங் என்பவருக்குச் சொந்தமானது. இந்த சம்பவத்துக்குக் காரணமான நபர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கணும். பாதிக்கப்பட்ட சதீஷ்குமார் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் கொடுக்கணும்'' என்றார் ஆவேசமாக.

நம்மிடம் பேசிய ஊர்த்தலைவரான அகஸ்டின், ''நம்பியாற்றின் தண்ணீரைக் கொண்டுதான் எங்க விவசாயம் நடக்குது. அதனால், மணல் திருட்டைத் தடுக்கிறதுக்காக ஊரில் குழு அமைச்சோம். சம்பவம் நடந்த அன்னிக்கு ஒன்பது பேர் கொண்ட குழு கண்காணிப்புப் பணியில் இருந்தாங்க.

லாரியை இரண்டு கைகளால் மறித்த சதீஷ்குமார்..

அதிகாலையில் ஒரு லாரியில் மணல் அள்ளுவதைப் பார்த்திருக்​காங்க. உடனே அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லி இருக்காங்க. சதீஷ்குமார் டார்ச் லைட்டை அடித்து லாரியை நிறுத்தச் சொல்லி இருக்கார். அந்த லாரி நிற்பது போல வந்து அவரை இடிச்சுத் தள்ளியிருக்கு. கீழே விழுந்த அவரது தலையில் லாரியை ஏத்திட்டாங்க. அந்த இடத்திலேயே துடிதுடிச்சு இறந்துட்டார்'' என்று வேதனைப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய ராதாபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ-வான மைக்கேல் ராயப்பன்,  ''இந்த ஆற்றுப்படுகையை பல பகுதிகளாக ஆளும் கட்சியினர் பிரித்து மணல் திருடுறாங்க. இதை நானே நாலைந்து மாதங்களுக்கு முன்பு அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கலை. இப்போது சப்-கலெக்டர் பாஜி பகாரே ரோகினி ராம்தாஸ் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு, 'இனிமேல் இந்த ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடுக்க நான்கு செக்-போஸ்ட்கள் அமைப்போம். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’னு உறுதி கொடுத்திருக்கிறார். இனிமேலும் மணல் கொள்ளை நடக்குமானால் நானே மக்களைத் திரட்டி, தடுக்கும் முயற்சியில் இறங்குவேன்'' என்றார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், நாங்குனேரி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் டென்சிங், லாரி டிரைவரான அவரது தம்பி கிங்ஸ்டன் உள்ளிட்ட 12 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் லாரி டிரைவர் கிங்ஸ்டன், கிளீனர் அருள் ஆகியோர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  

சதீஷ்குமாரின் உயிருக்கு என்ன பதில் சொல்லப்​போகிறது தமிழக அரசு?

- ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism