Published:Updated:

போலி மதுபான ஆலையில் அமைச்சருக்குத் தொடர்பா?

கதிகலங்கும் கரூர்

போலி மதுபான ஆலையில் அமைச்சருக்குத் தொடர்பா?

கதிகலங்கும் கரூர்

Published:Updated:
##~##

திருப்பூர் காவல் நிலையத்துக்கு எதிரே இருந்த நகைக் கடையைக் கொள்ளை அடித்தது பழைய கதை. கரூரில் எஸ்.பி. ஆபீஸுக்குப் பக்கத்திலேயே போலி மதுபானத் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது புதுசு. இந்தத் தொழிற்சாலை விவகாரத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் அடிபடவே, போதை ஏறிய குடிமகன் போன்று கிறுகிறுத்துக் கிடக்கிறது போலீஸ். 

சென்னையில் இருக்கும் மத்திய அமலாக்கப் பிரிவுக்கு ரகசியத் தகவல் ஒன்று வந்து சேர, கரூருக்குப் புறப்பட்டது ஒரு போலீஸ் டீம். மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகப் பகுதியில் இருந்த ஒரு வீட்டைக் கண் காணிக்க ஆரம்பித்தது அந்த போலீஸ் டீம். ஒரு கட்டத்தில் தகவல் உண்மை என்று தெரியவரவே, கிரேப்ஸ் கார்டன் என்ற பகுதியில் இருந்த அந்த வீட்டுக்குள் போலீஸ் அதிரடியாக நுழைந்தது. அந்த வீட்டுக்குள் ஏராளமான மது பாட்டில்களும், மது தயாரிக்கும் உபகரணங்களும் இருந்திருக்கின்றன. அனுமதி இல்லாத ஒரு ரகசிய மதுபான தொழிற்சாலையே அங்கு இயங்குவதைக் கண்டு மிரண்டு போயிருக்கிறது போலீஸ். அப்போது அந்த வீட்டுக்குள் இருந்த ராமச்சந்திரன் என் பவரைக் கைது செய்து இருக்கிறார்கள். அவருடன் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த பாஸ்கரன், அங்குச்சாமி, மணப்பாறை கருணாநிதி, சென்னை வெங்கடேஷ் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தேடப்பட்டு வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போலி மதுபான ஆலையில் அமைச்சருக்குத் தொடர்பா?
போலி மதுபான ஆலையில் அமைச்சருக்குத் தொடர்பா?

இந்தப் புகார் குறித்துப் பேசும் பி.ஜே.பி. கட்சியின் மாநிலத் தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன், ''எஸ்.பி. ஆபீஸுக்குப் பக்கத்திலேயே மதுபானத் தொழிற்சாலை நடக்கிறது என்றால், கண்டிப்பாக இதில் பெரிய ஆட்கள்தான் சம்பந்தப்பட்டு இருப் பார்கள். நான் விசாரித்தவரை கரூரைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தெரிந்துதான் இந்தத் தொழிற்சாலை நடந்திருக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள். யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக, இந்தப் புகாரைப் புறந்தள்ளிவிட முடியாது. அதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியி​டமும் விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்றார் அதிரடியாக.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இந்தக் குற்றச்சாட்டு பற்றிக் கேட்டோம். ''இது முழுக்க முழுக்கப் பொய்யான குற்றச்சாட்டு. அம்மாவோட ஆட்சியில் காவல்துறை மிகவும் நேர்மையாகச் செயல்பட்டு, தவறு செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. போலி மதுபானத் தொழிற்சாலை பிடிபட்டதற்குக் காரணமே காவல்

போலி மதுபான ஆலையில் அமைச்சருக்குத் தொடர்பா?

துறையின் நேர்மையானநடவடிக்கைதான். பிடிபட்டவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்'' என்று சொன்னார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசும் கரூர் மாவட்ட அ.தி.மு.க-வினரோ, ''போலி மது பானத் தொழிற்சாலை நடத்திய​தாகக் கைது செய்யப்பட்டிருக்கும் ராமச்சந்தி​ரனுக்குச் சொந்த ஊர் தேவகோட்டை. கரூர் தி.மு.க-வில் இருக்கும் முக்கியப் புள்ளி ஒருவருக்கும் தேவகோட்டைதான் சொந்த ஊர். கடந்த தி.மு.க. ஆட்சியில் அந்த முக்கியப் புள்ளி நடத்தி வந்த பார் நிர்வாகத்தைக் கவனித்தது இந்த ராமச்சந்திரன்தான். இப்போது கைது செய்யப்பட்ட நேரத்தில்கூட, அவரது செல்போன் டிஸ்பிளேவில் ஸ்டாலின் படத்தைத்தான் வைத்திருந்தார். அதில் இருந்தே அவர் தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. போலி மதுபானம் தயாரித்தவர்கள் தி.மு.க. புள்ளிகளுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். இதை போலீஸ் தீவிரமாக விசாரித்தால் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்'' என்று சொல்கிறார்கள்.

கரூர் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ்​குமார் என்ன சொல்கிறார்?

''மணப்பாறையில்தான் போலி மதுபானம் தயாரிச்சிருக்காங்க. அங்கே இருந்தால் பிடிபட்டு​விடுவோம் என்ற பயத்தில் கரூரில் வீடு பார்த்து வந்திருக்காங்க. வந்த சில நாட்களிலேயே சிக்கிட்டாங்க. எங்கள் அலுவலகத்துக்கு அருகே உள்ள வீட்டில் பதுக்​கித்தான் வெச்​சிருந்தாங்க. அங்கே மதுபானம்  தயாரிக்கப்​பட​வில்லை. கண்டிப்பா இதை ஒரு சிலரால் மட்டும் செஞ்சிருக்க முடியாது. அந்தக் கும்பலோடு தொடர்பு உடை யவர்கள் யார் என்பதை விசாரிச்​சிட்டு இருக்கோம். கூடிய சீக்கிரம் பிடிச்சிடுவோம். அரசியலைக் காரணம் காட்டி யாரும் ஆதாயம் தேடவோ, தப்பிக்கவோ முடியாது'' என்றார் அழுத்தம் திருத்தமாக.

நெருப்பு இல்லாமல் புகையுமா?

- ம.சபரி                                       

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism