Published:Updated:

''சட்டத்துக்கு உட்பட்டு நடப்பவர்கள் அச்சப்படத் தேவை இல்லை''

தைரியம் ஊட்டும் மலேசிய மந்திரி!

''சட்டத்துக்கு உட்பட்டு நடப்பவர்கள் அச்சப்படத் தேவை இல்லை''

தைரியம் ஊட்டும் மலேசிய மந்திரி!

Published:Updated:
##~##

வேலூரில் நடந்த ஓர் இலக்கிய விழா​வில், 'மத்திய அமைச்சர் தொடக்க உரை நிகழ்த்துகிறார்’ என்று விளம்பரப்படுத்தி இருந்தார்கள். அமைச்சரை வரவேற்க, சால்வை மற்றும் மாலைகளுடன் நகர எல்லை​யில் நிகழ்ச்சிப் பொறுப்​பாளர்கள் காத்தி​ருந்தனர். வாடகை கார் ஒன்றில் வந்த அமைச்​சர், வணக்கம்சொல்லிக்​கொண்டே இறங்​கினார். போலீஸ் பாதுகாப்புடன் சுழலும் சிவப்பு விளக்கு காரில் வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் திகைத்து ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று விட்டனர். பிறகு, அவர்தான் அமைச்சர் என்பதைக் கண்டுபிடித்து சுதாரித்துக் கொண்டு மாலை அணிவித்து வரவேற்றனர். 

அந்த மத்திய அமைச்சர் பதவி வகிப்பது இங்கு அல்ல... மலேசியாவில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மலேசிய நாட்டு அமைச்சர் டத்தோ சரவணன்!

 ''சட்டத்துக்கு உட்பட்டு நடப்பவர்கள் அச்சப்படத் தேவை இல்லை''

வெளிநாட்டு அமைச்சர்கள் நம் நாட்டுக்கு வரும்போது, உயரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்​படும். ஆனால், சரவணன், ('டத்தோ’ என்பது மலேசியாவில் வழங்கப்படும் விருது - இந்தியாவின் 'தாமரை’ விருது போன்றது) எந்த நாட்டுக்குச் சென்றாலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுத்து விடுகிறார். 43 வயதான டத்தோ சரவணன், மலேசிய நாட்டின் கூட்டுறவுப்பிரதேசம் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத் துறைத் துணை அமைச்சர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு, சரவணனிடம் பேசினோம்.

''மலேசியாவில் அந்த நாட்டுக்  குடிமகன்களுக்குச் சமமாகத் தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப்​படுகிறதா? கல்வி, வேலை, சுயதொழில் ஆகியவற்றில் தமிழர்களுக்குக் கட்டுப்பாடு ஏதும் விதிக்கப்பட்டு உள்ளதா?''

''முன்பு, விகிதாச்சார அடிப்படையில் இந்தியர்​களுக்கு வசதி, வாய்ப்பு வழங்கப்பட்டது. இல்லாவிட்டால், ஏதேனும் ஒரு சமூகம் பாதிக்கப்படும் என்ற காரணத்தால், அப்படி அமைக்கப்பட்டு இருந்தது. எனவே, 5 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ள தமிழர்களுக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. இப்போது உள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப், இந்தியர்களுக்கும் இன்னும் நிறைய செய்திருக்க வேண்டும் என்ற கருத்து உடையவர். அதனால், இப்போது நிலைமை மாறி வருகின்றது. கல்வி நிலையங்களில் முன்பைவிட, இந்தியர்களுக்கு இப்போது வாய்ப்பு அதிகமாகி உள்ளது. இந்திய மாணவர்களுக்கான கல்வி உபகாரச் சம்பளம் உயர்த்தப்பட்டு உள்ளது. அரசு வேலையில் சேரு​வதற்​கோ அல்லது பதவி உயர்வு பெறுவதற்கோ, இந்தியர்​களுக்கு முன்பு வாய்ப்புக்கள் குறைக்கப்​பட்டு இருந்தது. அல்லது மறுக்கப்பட்டது. இப்போது அந்த வாய்ப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பல நடைமுறைச் சிக்கல் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அது, இந்தியர்களுக்கு அதிருப்​தியாகத்தான் இருக்கிறது.   அதைக் களைய தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். இந்திய சிறு வர்த்தகர்களுக்கு, 'தெக்குன் நிதி’ என்னும் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குகிறோம். இதன் கீழ், வட்டியில்லாக் கடன் இந்தியர்களுக்குத் தொடர் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது.''

''இந்தியத் தமிழர்கள் பலர் அங்கு வேலைக்கு வருகின்றார்கள். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்..? எந்த மாதிரி வேலைகளுக்கு இந்தியத் தமிழர்கள் வருகிறார்கள்?''

''சுற்றுலாப் பயணிகளாக ஏராளமான இந்தியர், மலேசி​யாவுக்கு வருகின்றனர். இங்குள்ள பத்துமலைக் கோயிலை, முருகனின் ஏழாவது படை வீடாக நாங்கள் கருதுகிறோம். தமிழர்கள் பெரும்பாலும் உடல் உழைப்புத் தொழிலாளர்​களாகத்தான் இங்கு வந்துகொண்டு இருந்தனர். இப்போது, தகவல் தொழில்நுட்பத் துறையிலும் கால் பதித்து வருகின்றனர். இந்தியா, பங்களாதேஷ், மியான்மர், நேபாளம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்தும், ஏராளமானோர் இங்கு வேலைக்கு வருகின்றனர். இங்கு வேலை வாய்ப்புகள் போதுமான அளவுக்கு இருப்பதால், எங்கள் இளைஞர்களுக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை.''

''மலேசியாவில் தமிழ் இளைஞர்கள், பல விதங்களில் ஏமாற்றப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. எதனால் அந்த நிலை? வேலைக்கு வர விரும்பும் தமிழ் இளைஞர்களுக்கு உங்களுடைய வழிகாட்டுதல் என்ன?''

''உண்மையான நோக்கத்துடன், சரியான வழிகாட்டுதல்​களுடன் வேலைக்கு வருபவர்கள் எந்தச் சிக்கலும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் மலேசியாவில் வாழ்கின்றனர். அவர்களை, இந்த நாட்டின் சட்டங்கள் பாதுகாக்கின்றன. ஒரு சிலரே தவறான வழிகாட்டுதலாலும், சில ஏமாற்றுப் பேர்வழிகளாலும் பாதிக்கப்படுகின்றனர். எந்த நாட்டுக்குப் போகும்போதும் இந்தச் சிக்கல் ஏற்படுவது உண்டு. எனவே, வேலை வாய்ப்பு இருக்கிறது என்று யார் மூலமாவது கேள்விப்பட்ட உடனேயே கிளம்பிவிடாமல், அதன் உண்மைத்தன்மையை நன்றாக விசாரித்துத் தெரிந்துகொண்டு, திட்டமிட்டுக் கிளம்பி வருவதுதான் பாதுகாப்பானது.

தெரிந்தோ அல்லது தெரியாமலோ சட்டத்துக்குப் புறம்பாக நடந்தால், எந்த நாடும் அவர்களைக் கண்டிப்பாக கைது செய்யும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான தமிழர்கள் மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணிகளாகவோ, வேலைகளுக்கோ வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவே வந்து செல்கின்றனர். சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் யாரும் பயப்படத் தேவை இல்லை. ஒருவேளை, கைது செய்யப்பட்டவர் அப்பாவி என்று தெரிந்தால், அரசு மூலமாக அவரை உடனே விடுவிக்க நாங்கள் உதவி செய்கிறோம்.'' 

- கோபால்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism