Published:Updated:

மோரே மாஃபியா... அமெரிக்கா வைரம்!

ராஜன் கஸ்டடிக் காட்சிகள்

மோரே மாஃபியா... அமெரிக்கா வைரம்!

ராஜன் கஸ்டடிக் காட்சிகள்

Published:Updated:
##~##

ஞ்சப் புகாரில் கைதான மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையின் கூடுதல் இயக்குநர் ராஜனை, ஐந்து நாள் கஸ்டடி எடுத்து சி.பி.ஐ. விசாரித்துள்ளது. தொடக்கத்தில் விசார​ணைக்கு ஒத்துழைக்க மறுத்து, அமைதிப் போராட்டம் நடத்தி இருக்கிறார் ராஜன். அதன்பிறகு சில ரகசிய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் ராஜன் முன் அள்ளிவீசவே, அவற்றைப் பார்த்து நிலை குலைந்துபோனவர் மளமளவென பேசத் தொடங்கி விட்டாராம். 

விசாரணையில் என்னவெல்லாம்நடந்தது என்று சி.பி.ஐ வட்டாரத்தில் விசாரித்தோம். தன்னைப்பற்றிய விவரங்களை மறைத்துக்​கொண்டு பேசினார் ஓர் அதிகாரி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோரே மாஃபியா... அமெரிக்கா வைரம்!

''அதிகாரத்தில் இருந்தபோது, சில விஷயங்​களில் ராஜன் நெளிவு சுளிவாகத்தான் இருந்தார் என்பதற்கு எங்கள் கைவசம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இதில் சரிபாதி,ராஜனின் கூடாரத்தில் இருந்து, எங்களைத் தேடித் தானாகவே வந்தவை.

சென்னை மண்டல வருவாய்ப் புலனாய்வு அதிகாரியாகப் பணிஆற்றினாலும், இந்தியா​வின் அனைத்துத் துறைமுகங்களிலும் தனக்கென தனிசாம்ராஜ்யம் அமைத்திருந்தார் ராஜன். வெளிநாடுகளில் பினாமிகள் பெயரில் வாரிக் குவித்து இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடத்தல் உலகில், 'மோரே மாஃபியா’ என்ற குருப் மிகப் பிரபலம். மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு தமிழக ஆசாமிதான் இந்தக் கும்பலுக்கு பாஸ். அந்த மணிப்பூர் ஆசாமியுடன் ராஜனுக்கு நெருக்கம் அதிகம் என்றும், அதனால் அவர் அடைந்த பலன்கள் ஏராளம் என்று எங்களுக்குத் தகவல் தெரிய வந்தது. கொல்கத்தாவில் உள்ள டைமண்ட் ஹார்பர் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் புள்ளி ஒருவரும் இந்தக் கூட்டணியில் பார்ட் னராக இருக்கிறார்.

இப்போது கொல்கத்தாவில் இருந்து துபாய் நோக்கிச் சென்றுகொண்டு இருக்கும் ஒரு கப்பலில், அந்த குருப் அதிமுக்கியப் பொருள் அடங்கிய ஒரு கன்டெய்னரை ஏற்றி அனுப்பி உள்ளது. அதை உண்மையில் யார் அனுப்பியது, யாருக்கு அனுப்பினார்கள் என்று கண்டுபிடிப்பதுதான் எங்கள் முதல் பணி. மேலும் இதே கூட்டணி, துபாயில் கொடி கட்டிப் பறக்கும் கீழக்கரை பிரமுகர் ஒருவருக்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி துறைமுகத்தில் 50

மோரே மாஃபியா... அமெரிக்கா வைரம்!

கன்டெய்னர் செம்மரக் கட்டைகளை ஏற்றி அனுப்பியதாகவும் தெரிய வந்துள்ளது.

அடுத்ததாக சென்னை மண்ணடி கோரல் மெர்ச்சன்ட் தெருவில் வசித்துவந்த ஒரு முஸ்லிம் ஆசாமி மீது, இந்தியா முழுவதும் பல்வேறு கடத்தல் வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் இறந்துவிட்டதாக ஃபைலை குளோஸ் செய்து விட்டனர் கஸ்டம்ஸ் அதிகாரிகள். ஆனால், அந்த ஆசாமியோ சீனாவில் உட்கார்ந்துகொண்டு, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஜப்பான் போன்ற நாடுகளில் ராஜாங்கத்தை விரிவுபடுத்திக்கொண்டு இருக்கிறார். அந்த ஃபைல் குளோஸ் செய்யப்பட்டதன் பின்னணியில் யார் இருந்தார் என்பதும் விரைவில் தெரிந்துவிடும்.

அதே மண்ணடியில் இருக்கும் இன்னொரு ஆசாமி 'குருவி’ போன்று அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போய், ராணுவம் பயன்படுத்தும் ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள் மற்றும் சேட்டிலைட் போன்களை வாங்கிக் குவிப்பார். அவற்றை தூத்துக்குடி மார்க்கமாக மும்பை கொண்டுபோய் சேர்ப்பாராம். இவை, தீவிர வாதிகளுக்கு அல்லது நிழல் உலகத் தாதாக்களுக்கு சப்ளை ஆகி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதே ஆசாமி ராஜனின் ஆசியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயில் இருந்து 14 கன்டெய்னர் வெளிநாட்டு சிகரெட்டுகளை இறக்குமதி செய்துள்ளார் என்றும் எங்களுக்கு ஆதாரபூர்வத் தகவல் கிடைத்திருக்கிறது. 300 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான அந்தக் குருவியின் வீட்டை சோதனை நடத்தி, சில ஆவணங்களைக் கைப்பற்றி இருக்கிறோம்.

'அந்தக் குருவி விமான நிலையம் வந்தால், கிரீன் சேனல் (சோதனை இல்லாத பாதை) வழியாக அனுப்பச் சொல் வீர்களாமே?’ என்று ராஜனிடம் கேட்டோம். மௌனம் மட்டுமே அவரிடம் இருந்து பதிலாக வந்தது.

அடுத்து கடந்த 2008-ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் 1.26 கோடி மதிப்புள்ள அமெரிக்க வைரம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன? அதில் உண்மைக் குற்றவாளி வேண்டும் என்றே தப்பிக்க வைக்கப்பட்டாரா? என்றும் தோண்டி எடுக்கப் போகிறோம். வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கும் இன்ஃபார்மர்களுக்கு அந்தப் பொருள் மதிப்பில் 20% கமிஷன் கொடுப்பது வழக்கமான நடைமுறை. ஆனால், சமீபகாலமாக 5% கமிஷன் மட்டுமே அவர்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. இதுபோன்று இன்னும் பல தகவல்கள் எங்களுக்கு பல்வேறு மட்டங்களில் இருந்தும் கொட்டத் தொடங்கி உள்ளன. அதனால், சில இடங்களில் நாங்கள் அதிவிரைவில் ரெய்டு நடத்த வேண்டிய அவசியம் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை'' என்று சொல்லி அதிரவைத்தார்.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான ஐ.இ.சி லைசென்ஸ் வைத்துள்ள நபர்கள் சிலரிடம் பேசியபோது, கடத்தல் கும்பல் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சிலரின் பலே நாடகங்களை அம்பலப்படுத்தினார்கள்.

மோரே மாஃபியா... அமெரிக்கா வைரம்!

'கஸ்டம்ஸ் அதிகாரிகள் கன்டெய்​னரைச் சோதனை நடத்தும்போது, முதலில் துணி அல்லது உணவுப் பொருட்கள் போன்று ஏதாவது இருக்கும். அதிகாரிகள் சீல் வைத்த பின்பு, அந்தக் கன்டெய்னர் துறை​முகத்துக்குக் கொண்டு செல்லப்படும். வழியில், கன்டெய்னரின் கதவை அலேக்காக கழற்றி எடுத்து உள்ளிருக்கும் சரக்கை மாற்றிவிடுவார்கள். அல்லது சீலைப் பிரித்து விட்டு, மீண்டும் போலி சீல் வைத்து அனுப்பி விடுவார்கள். பழம்தின்று கொட்டைப் போட்ட கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு, இப்படி நடப்பது தெரியும். தங்களுக்கு வேண்டியவர்களையும், நல்ல​படியாகக் கவனிப்பவர்களையும் கண்டுகொள்ள மாட்டார்கள். சிறிய அளவில் கடத்தல் தொழில் செய்பவர்கள்தான் சிக்கி சின்னாபின்னமாகி விடுவார்கள்'' என்று சொன்னார்கள்.

ராஜனின் வழக்கறிஞர் பால் கனகராஜிடம் விசாரணை குறித்துப் பேசினோம். ''உயர்ந்த பதவியில் உள்ள அரசு அதிகாரிக்கு பல்வேறு மட்டங்களில் உள்ள பெரிய மனிதர்களிடம் தொடர்பு இருக்கும். அதைத் தவறாகக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. ராஜன் மிக நேர்மையான அதிகாரி. யாருக்கும் அவர் வளைந்து கொடுத்தது கிடையாது. சில மாதங்களுக்கு முன்பு, ஒரு கடத்தல் ஆசாமி மீது காபிபோசா வழக்கைப் பாய்ச்சினார் ராஜன். அப்போது தலைமறைவான அந்த ஆசாமி, பிறகு சி.பி.ஐ-யின் கைக்கூலி போல செயல்படத் தொடங்கினார். அவர்தான் வேண்டுமென்றே நாடகம் போட்டு ராஜனை மாட்டி விட்டுள்ளார். அந்த பாக்ஸில் ஸ்வீட் இருக்கிறது என்றுதான் டிரைவர் அதைக் கொண்டுபோய்க் கொடுத்து உள்ளார். இந்த விவகாரத்தில் ராஜனைக் கைது செய்ததே தவறு. உயர் பதவியில் இருக்கும் ஒரு தமிழனை சில ஆதிக்க சக்திகள் ஒன்றுகூடி வீழ்த்திவிட்டன என்ற ரீதியில்தான் இதைப் பார்க்கிறேன். ராஜன் நிரபராதி என்பதை நிரூபிப்போம்'' என்று சொன்னார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராஜன், 'நான் எத்தனை கம்பீரமாக இருந்தவன். எத்தனை பெரிய அதிகாரிகளுடன் பழகியவன். எனக்கே இந்த நிலையா?’ என்று புலம்பிக்கொண்டே இருந்தாராம். இது அவருக்கு அதிக மன அழுத்தம் கொடுத்துள்ளதாம். அதனால் சி.பி.ஐ. கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

- தி.கோபிவிஜய், படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism