Published:Updated:

அடியாட்களுடன் வந்த இலங்கை அரசு!

ஜெனீவா நிகழ்வுகளை விவரிக்கும் ஹென்றி டிஃபேன்

அடியாட்களுடன் வந்த இலங்கை அரசு!

ஜெனீவா நிகழ்வுகளை விவரிக்கும் ஹென்றி டிஃபேன்

Published:Updated:
##~##

ஜெனீவா மாநாட்டில், இந்தி​யாவில் இருந்து மனித உரிமை ஆர்வலர்கள் எட்டுப்பேர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்தார்கள். அதில் தமிழகத்​தில் இருந்து அழைக்கப்பட்ட ஒரே ஒருவர், 'பீப்பிள்ஸ் வாட்ச்’ அமைப்பின் செயல் இயக்குநர் ஹென்றி டிஃபேன். மார்ச் 5 முதல் 9-ம் தேதி வரை பல்வேறு அமர்வுகளில் பங்கேற்றவர், அதுகுறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

''இலங்கைப் பிரச்னை மற்றும் கூடங்குளம் விவகாரத்தில் என்.ஜி.ஓ-க்​களுக்கு ஏற்பட்டு இருக்கும் நெருக்​கடிகள் குறித்து மாநாட்டில் பேசினோம். இந்தியாவில் பத்திரிகையாளர்களும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் தளத்தில் பணி செய்கிறார்கள். எனவே, அவர்களையும் மனித உரிமைக் காப்பாளர்களாக அங்கீகரிக்க வேண்டும். நாட்டின் சில பகுதிகளில் இந்திய ராணுவம் நினைத்தால், யாரையும் கைது செய்யலாம்; சுட்டுத் தள்ளலாம் என்று சட்டம் இருக்கிறது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பொதுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் சட்ட விரோதச் செயல்பாடுகளுக்கு எதிரான சட்டம் ஆகிய மூன்று சட்டங்களையும் பயன்படுத்தி, மனித உரிமைக் காப்பாளர்கள் மீது பொய் வழக்குகள் போடுகிறது இந்திய அரசாங்கம். இந்தச் சட்டங்களை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடியாட்களுடன் வந்த இலங்கை அரசு!

இந்தியாவில் மனித உரிமைக் காப்பாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், அவர்களைப் பாதுகாப்​பதற்கு வலுவான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். காவல்துறை மற்றும் ராணுவத்தில் பணி யாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளை, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாகவும் விசாரணை அதிகாரிகளாகவும் நியமிக்கிறார்கள். இவர்கள் எப்படி தாங்கள் பணியாற்றிய துறை சார்ந்த அதிகாரிகள் மீதான புகார்களை நியாயமாக விசாரி ப்பார்கள்? எனவே, மனித உரிமைக் காப்பாளர்களை இந்தப் பொறுப்புகளில் அமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்...'' என்றவர் ஈழப் பிரச்னை குறித்துத் தொடர்ந்தார்.

''இலங்கை விவகாரத்தைப் பேசுவ தற்காக ஒரு தனிஅமர்வு இருந்தது. இலங்கையில் இருந்து வந்திருந்த மனித உரிமையாளர்கள் சுனிலா, நிமல்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசினார்கள். அமர்வுக்கு நேரில் வரமுடியாத சரவணமுத்து என்பவர் 'ஸ்கைப்’ மூலமாகப் பேசினார். அதேசமயம், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக்கோரி ஐரோப் பாவைச் சார்ந்த தமிழ்ச் சமுதாயத்தினர் சுமார் 5,000 பேர் மாநாட்டு அரங்குக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இலங்கை அரசும் அங்கே தனியாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இதற்காக, இலங்கையில் இருந்து 126 பேரை அவர்களே அழைத்து வந்து இருந்தார்கள். இவர்கள்தவிர, அடியாட்களையும் அனுப்பி இருந்தது இலங்கை அரசு. கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த தமிழ் ஆர்வலர்கள், அந்த அடியாட்களால் தடுத்து விரட்டப்பட்ட சம்பவங்களும் நடந்தன. இலங்கைக்கான ஜெனீவா தூதர் தலையிட்ட பிறகே, தாக்குதல் நிறுத்தப்பட்டது. அமர்வு தொடங்கியதுமே ஐ.நா-வுக்கான மனித உரிமை கவுன்சிலின் தலைவர், 'நேற்று நடந்த சம்பவங்கள் ஐ.நா. மன்றத்தையே அவமதிக்கக்கூடியது. அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். இனிமேல் இதுபோன்று நடக்காது’ என்று வருத்தம் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தில் இலங்கைக்கு தலைபோகிற விஷயம் எதுவும் இல்லை. அதில், விடுதலைப்புலிகளின் தவறுகளையும் சுட்டிக் காட்டி இருக்கிறது அமெரிக்கா. உலக சமுதாயத்தை ஏமாற்றக் கொண்டு​வரப்பட்ட தீர்மானம் இது என் பதுதான் எங்களைப் போன்​றவர்களின் கருத்து. ஆனாலும், குறைந்தபட்சம் இதையாவது ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்யவேண்டும் என்று எதிர் பார்க்கிறோம்.

அமெரிக்கத் தீர்மானத்தைத் தோற்கடிக்க பாகிஸ்​தான் ஒரு பக்கமும் சீனா ஒரு பக்கமும் மெனக்கெடுகின்றன. ஆனால், தனது சொந்த நாட்டுக்கு அருகில் தன்நாடு சார்ந்த ஓர் இனத்துக்கு எதிராக நடந்த கொடு மைகளைக் கண்டிக்க இந்தியாவுக்குத் தயக்கம். இதையே செய்ய முடியாதபோது, சர்வதேச அரங்கில் தலைமை ஏற்றுச் செல்லும் நாடாக இந்தியா எப்படி வர முடியும்?

'போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நீங்களே உங்கள் நாட்டிலேயே பாரபட்சமற்ற ஒரு விசாரணையை நடத்துங்கள். அந்த விசாரணையை எப்போது நடத்தி முடிப்பீர்கள் என்ற கால அட்டவணையை ஐ.நா-வின் மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்யுங்கள்’ - இதுதான் இலங்கைக்கு இறுதியாக நாங்கள் வைத்த நிபந்தனை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, நடந்த தவறுகளை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசுக்கு மனம் இல்லை என்றால், அந்தத் தவறுகளால் ரணமாகிக்கிடக்கும் தமிழ்ச் சமுதாயம் மட்டும் தனது வலிகளை எப்படி மறக்கும்; மன்னிக்கும்?'' என்றார் அழுத்தமாக!

இறுதியில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்ப்போம்!

- குள.சண்முகசுந்தரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism