Published:Updated:

`டார்ச் லைட்டைக்கூட விட்டுவைக்கவில்லை!'- இது சிவகங்கை கொள்ளையர்களின் அட்டகாசம்

தடயங்கள் சிக்கிவிடக் கூடாது என்று காலில் எண்ணெய் தடவி வந்து 175 பவுன் நகையைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட அறை
கொள்ளையடிக்கப்பட்ட அறை ( சாய்தர்மராஜ் )

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில், கடந்த 2-ம் தேதி அதிகாலை நடைபெற்ற கொள்ளைச் சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட வீடு
கொள்ளையடிக்கப்பட்ட வீடு

நகைக்கடையின் சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தங்களின் அடையாளம் தெரியாமல் இருக்க மிக்கி மவுஸ் முகமூடி, கையுறை மற்றும் ஜெர்க்கின் அணிந்தபடி கைவரிசை காட்டியுள்ளனர். இந்த வழக்கில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. இந்த நிலையில், காரைக்குடி அருகே ஓய்வுபெற்ற தபால் துறை அதிகாரி வீட்டில் 175 பவுன் நகைகள் கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதி ரஸ்தா காந்திநகரில் ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் ஜெயராஜ் (61) வசித்துவருகிறார். குன்றக்குடி பகுதியில் பணி செய்து ஓய்வு பெற்ற இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் வெவ்வேறு ஊர்களில் பணி செய்துவருகின்றனர்.

கொள்ளை
கொள்ளை

ஜெயராஜ் தன் மனைவி மேரியுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆசிரியராக வேலை பார்த்துவரும் மருமகள் வீட்டுக்குச் சென்றார். அங்குள்ள தங்கள் பேரக்குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள 10 நாள்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு சாவியையும் எடுத்துச் சென்றுள்ளனர். வீடு பல நாள்கள் பூட்டிக் கிடந்ததை அறிந்த திருடர்கள் தங்களது கைவரிசை காட்டியுள்ளனர். 

வீட்டிலிருந்த மூன்று அறைகளையும் உடைத்த கொள்ளையர்கள், ஜெயராஜ் குடும்பத்துக்குச் சொந்தமான 65 பவுன் நகைகளையும். இரண்டாவது மருமகள் அறையில் இருந்த 85 பவுன் நகைகளையும் மற்றொரு மகன் அறையில் இருந்த 25 பவுன் நகைகள் என மொத்தம் 175 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளை
கொள்ளை

மேலும் விலை உயர்ந்த ஒரு வாட்ச், ஒரு டார்ச் லைட் உள்ளிட்டவைகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். பணம் வங்கிக் கணக்கில் இருந்ததால் அந்த பாஸ்புக்கை கீழே வீசி எறிந்துள்ளனர். கொள்ளையர்கள் தாங்கள் சிக்கிக்கொள்ள கூடாதென்று, காலில் எண்ணெய் தடவிக் கொண்டு வந்து இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். தடயங்கள் கிடைத்துவிடக் கூடாதென்று பல்வேறு வழி முறைகளை திருடர்கள் கையாண்டுள்ளனர். எளிதில் திறக்க முடியாத பீரோக்களை நவீன இயந்திரங்கள் பயன்படுத்தி திறந்துள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காரைக்குடி குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சோதனை செய்துவருகின்றனர்.