Published:Updated:

ஓட்டுக்கு 1,000.... கல்வெட்டில் வெற்றிச் செய்தி!...

குஷியில் சங்கரன்கோவில் அ.தி.மு.க.

ஓட்டுக்கு 1,000.... கல்வெட்டில் வெற்றிச் செய்தி!...

குஷியில் சங்கரன்கோவில் அ.தி.மு.க.

Published:Updated:
##~##

'சங்கரன்கோவில் தொகுதியில் இருக்கும் 242 வாக்குச் சாவடி​களும் பதற்றம் நிறைந்த​வை​தான்’ என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சொல்லி இருந்தார். அதற்குக் காரணம்... 32 அமைச்சர்கள், 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள், ஏராளமான முன்னாள் அமைச்​சர்கள் அங்கே முகாமிட்டு இருந்ததுதான். 'வாக்குப் பதிவின் போது வன்முறை வெடிக்கக்கூடும்’ என்று உளவுத் துறையினர் எச்சரித்து இருந்த காரணத்தால், மத்திய ரிசர்வ் படை, மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை, பல மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் என்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது தேர்தல் ஆணையம். 

ஓட்டுக்கு 1,000.... கல்வெட்டில் வெற்றிச் செய்தி!...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நல்ல வேளையாக, கடந்த 18-ம் தேதி நடந்த வாக்குப்பதிவின்​போது சிறு சலசலப்புகளைத் தவிர வன்முறை எதுவும் நடக்கவில்லை. மக்கள் கூட்டத்​தைச் சேரவிடாமல் தடுப்பதற்காக, தேநீர்க் கடைகளைக்கூட போலீஸார் திறக்கவிடவில்லை. அதனால், மக்கள் அச்சம் இன்றி கூட்டமாக வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

''அ.தி.மு.க தரப்பில் ஓட்டுக்கு 1,000 ரூபாய் கொடுத்தாங்க. தி.மு.க-வினர் 300 ரூபாய் தந்தாங்க. தே.மு.தி.க-வும் 200 ரூபாய் அடிச்சாங்க. வாங்குன பணத்துக்கு வஞ்சகம் இல்லாம ஓட்டுப் போடணும் இல்லியா..? அதான் காலையிலயே வந்து வரிசையில் நின்னுட்டேன்'' என்றார் ஒரு பெரியவர். காந்தி நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில், பூத் சிலிப் வழங்கும் இடத்தில் ம.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., சார்பில் ஓரிருவரே நின்றார்கள். ஆனால், அ.தி.மு.க. மகளிர் அணியினர் கூட்டமாய் நின்று வாக்குக் கேட்டார்கள்.  

ஓட்டுக்கு 1,000.... கல்வெட்டில் வெற்றிச் செய்தி!...

இதை, மாற்றுக் கட்சியினர் புகாராகத் தெரிவித்ததும், சப்இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் மற்றும் சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் வந்து விரட்டினார்கள். உடனே, 'ரொம்ப மிரட்டாதீங்க சார்... அமைச்சர்கிட்ட பேசு றீங்களா?’ என்று, அமைச்சர் ஒருவருக்குப் போன் செய்தார்கள். என்னவென்று புரியாமல் துணை ராணுவத்தினர் கோபமாய் விழிக்க, அவர்களை சமாதானப்படுத்திய எஸ்.ஐ., 'ஒண்ணுமில்ல சார்.. போயிருவாங்களாம். வாங்க கிளம்புவோம்’ என்று தள்ளிக்கொண்டு போனார்.

வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் வாக்களித்தார். ''எங்களுடைய வேட்பாளர் சதன்

ஓட்டுக்கு 1,000.... கல்வெட்டில் வெற்றிச் செய்தி!...

திருமலைக்குமாருக்கு வாக்களிக்கும் மனநிலையில் மக்கள் இருந்தார்கள். ஆனால், பாலில் நஞ்சைக் கலப்பதைப் போன்று அ.தி.மு.க-வினர் வாக்காளர்​களுக்குப் பணத்தைக் கொடுத்து விட்டார்கள். இதனால் வாங்கிய பணத்துக்கு நியாயமாக நடக்க வேண்டுமே என்கிற குழப்பத்தில் முடிவெடுக்க முடியாமல் மக்கள் தடுமாறி விட்டார்கள்'' என்று வருத்தத்துடன் சொன்னார் வைகோ.  

சங்கர்நகர் 1, 2, 3-வது தெருக்களுக்கு சேனைத் தலைவர் பள்ளியில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டி​ருந்தது. மற்ற வாக்குச் சாவடிகளில் எல்லாம் கூட்டம் அலை மோதியபோதும், இங்கு மட்டும் வெறிச்சோடிக்கிடந்தது. 'பாதி வீட்டுக்கு மட்டும்தான் பணம் கொடுத்தாங்க. எங்களுக்கும் பணம் வந்தால்​தான் ஓட்டுப் போடுவோம்’ என்று மக்கள் முறுக்கிக்கொள்ளவும், மிரண்டுபோன ரத்தத்தின் ரத்தங்கள் 'எப்படியோ’ அவர்களை சமாதானப்படுத்தி மாலையில் வாக்களிக்க அழைத்து வந்தார்கள்.

பக்கத்துத் தொகுதியான புளியங்குடியில் இருந்து தங்கம்மாள் என்ற பெண், வணிக வைசிய சங்கத் தொடக்கப் பள்ளி பூத்துக்கு வாக்களிக்க வந்தார். போலீஸார் அவரைத் தடுத்து, 'உங்களுக்கு இந்தத் தொகுதியே கிடையாது. அதனால் ஓட்டுப் போட முடியாது’ என்றார்கள். ஆனால் அதைக் கண்டுகொள்ளாத தங்கம்மாள், 'எங்கிட்ட அடையாள அட்டை இருக்கு. இங்கே ஓட்டுக்கு 1,000 ரூபாய் கொடுக்கறதா சொன்னாங்க. அதான் வந்தேன். ரூபாய் வாங்கிக் கொடுங்க. நானும் ஓட்டுப் போடுறேன்’ என்று உரிமையுடன் அடம் பிடித்தார். ஒரு கட்டத்தில் தரையில் படுத்து அழுது புரண்ட அந்த மூதாட்டி, 'உங்களால எனக்கு 50 ரூபா நஷ்டம். பஸ்ஸுக்கு யார் காசு குடுப்பாங்க? நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க..’ என்று சாபம் விட்டார். அவரை சமாதானப்படுத்திய பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், பையில் இருந்து 50 ரூபாய் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தார்.

சங்கரன்கோவில் தொகுதிக்குள் தொழில் வாய்ப்பு எதுவும் இல்லாததால், பெரும்பாலான கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கேரளாவில் கூலி வேலைக்கு செல்கிறார்கள். அவர்களுக்குப் பிரத்யேகமாக வேன் ஏற்பாடு செய்து அ.தி.மு.க-வினர் அழைத்து வந்தார்கள். இப்படி சகலரையும் திருப்திப்படுத்தி அழைத்து வந்ததால், 77.5 சதவிகிதமாக வாக்குப் பதிவு இருந்தது.

தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து அ.தி.மு.க-வினர் எந்த அளவுக்குத் தெளிவாக இருக்கிறார்கள்தெரியுமா?

இந்தத் தொகுதியில் உள்ள கே.ரெட்டியபட்டி கிராமத்தில் வருகிற 21-ம் தேதி அ.தி.மு.க. கொடியேற்று விழா நடக்க இருக்கிறது. அங்கு வைப்பதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ள கல்வெட்டில் 'சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் - முத்துச்செல்வி’ என்று இப்போதே பொறித்து விட்டார்கள்.

அப்படிப் போடு!

- ஆண்டனிராஜ்,

கே.கே.மகேஷ், சரவணப்பெருமாள்

படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம், பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism