##~## |
கடந்த ஆட்சியில் அதிகாரம் செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மீது நடத்தப்பட்ட ரெய்டு நடவடிக்கை, இப்போது கடந்த ஆட்சியின்போது கவர்னராக இருந்த பர்னாலா மகன் அலுவலகம் வரைக்கும் சென்று உள்ளது!
முன்னாள் கவர்னர் பர்னாலாவின் மகன் ஜஸ்ஜித் சிங் பர்னாலாவுக்குச் சொந்தமான பர்னாஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பல முறைகேடுகளைச் செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்ததாக, 8.2.2012 தேதியிட்ட ஜூ.வி. இதழில் விரிவாக எழுதி இருந்தோம். இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி, பர்னாஸ் இன்டர்நேஷனல் அலுவலகம், அந்த நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி நஜிமுதீன் வீடு,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தியது லஞ்ச ஒழிப்புத் துறை.
இந்தச் சோதனை குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் பேசினோம். ''கடந்த 2007 முதல் 2010 வரை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சி.சி.டி.வி. கேமரா வாங்க 14 முறை டெண்டர் விட்டனர். ஒவ்வொரு முறையும் பர்னாஸ் நிறுவனமே டெண்டரில் ஜெயித்து, பொருட்களை சப்ளை செய்துள்ளது. இது எப்படி சாத்தியம் என்று ஆராய்ந்தபோது, வெவ்வெறு பெயர்களில் போலியாக சில நிறுவனங்களை உருவாக்கி, குறைந்த விலைக்கு டெண்டர் சமர்ப்பித்து, பர்னாஸ் நிறுவனம் ஆதாயம் பெற்றுள்ளது தெரியவந்தது. பர்னாஸ் நிறுவனத்தில் நடத்திய சோதனையில், பல்வேறு போலி நிறுவனங்களை உருவாக்கியதற்கான ஆதாரங்களைக் கைப்பற்றி உள்ளோம்.

நஜிமுதீனின் வீட்டுக்கு எங்கள் படை சோதனைக்குச் சென்றபோது, அவர் டெல்லியில் இருந்தார். வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினர், 'உள்ளே வந்தால் தீக்குளிப்பேன்’ என்று ரகளை செய்ய... பெரும்பாடுபட்டு அவர்களை சமாதானப்படுத்திய பிறகே, எங்களால் உள்ளே நுழைய முடிந்தது. டெண்டர் முறைகேடு மட்டுமின்றி, பர்னாஸ் நிறுவனம் சப்ளை செய்த பொருட்களின் தரம் குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்போகிறோம்'' என்று சொன்னார்கள்.
இந்த திடீர் ரெய்டின் பின்னணி குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரித்தோம். ''கடந்த தி.மு.க. ஆட்சியில் பர்னாலாவும், அவரது குடும்பத்தினரும் சில முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்த அத்தனை ஃபைல்களையும் ஆட்சி மேலிடம் கேட்டு வாங் கியது. அதில், தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்கலைக்கழகத் துணைவேந்தர், சிண்டிகேட் மெம்பர் மற்றும் அட்மிஷன் விவகாரத்தில் நடந்த மொத்த முறைகேடுகளும் விலாவாரியாகக் குறிப்பிடப்பட்டு இருந்ததாம். குறிப்பாக பர்னாலாவின் மகன் ஜஸ்ஜித் சிங்கும், நஜிமுதீனும் சேர்ந்து நடத்தியவைதான் அதிகம். நடவடிக்கை எடுக்கலாம் என்று கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டதால், முதலில் லஞ்ச ஒழிப்புத் துறையைக் களத்தில் இறக்கியுள்ளனர். அடுத்தடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் அதிரடி சோதனை, முன்னாள், இந்நாள் துணைவேந்தர்கள் கைது போன்ற காட்சிகளை அரங்கேற்றிவிட்டு, இறுதியாக பர்னாலாவையும் அவரது மகனையும் வளைத்து விடுவோம்'' என்று அதிர்ச்சித் தகவல்களை அடுக்கினார்கள்.


ரெய்டு குறித்து விளக்கம் கேட்க நஜிமுதீனைத் தொடர்புகொண்டபோது, ''எங்கள் நிறுவனம் சட்டத்துக்கு உட்பட்டே அனைத்துப் பணிகளையும் செய்தது. மற்றபடி நான் வேறு எதுவும் கூற விரும் பவில்லை'' என்று சொன்னார்.
முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதனோ, ''நான் பதவியில் இருந்த காலத்தில், மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்தேன். அப்படிப்பட்ட என்னைத் தவறாக நினைத்து சோதனை நடத்தி இருப்பது, எனக்கு மிகுந்த மனஉளைச்சலைத் தந்துள் ளது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை'' என்று தழுதழுத்தார்.
இந்தப் பல்கலைக்கழக முறைகேட்டை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகத் தோண்டி எடுத்தவர் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன். இதுகுறித்து அவரிடம் பேசியபோது, ''லேட் என்றாலும் ரெய்டு நடவடிக்கையை வரவேற்கிறேன். பர்னாஸ் நிறுவனத்திடம் இருந்து பொருட்கள் வாங்கிய அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்த வேண்டும். இது தொடர்பான 500 பக்க ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன. முறையான விசாரணை இல்லை என்றால், சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்குத் தொடுப்பேன்'' என்றார்.
அடுத்த நடவடிக்கையைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
- தி.கோபிவிஜய், எஸ்.ஷக்தி
படங்கள்: கே.கார்த்திகேயன்,
சொ.பாலசுப்ரமணியன், வி.ராஜேஷ்