Published:Updated:

எங்கே ரித்தீஷ்?

வேகம் எடுக்கும் கடத்தல் வழக்கு

எங்கே ரித்தீஷ்?

வேகம் எடுக்கும் கடத்தல் வழக்கு

Published:Updated:
##~##

டிகரும் தி.மு.க-வின் எம்.பி-யுமான ரித்தீஷை வலைவீசித் தேடுகிறது மதுரை போலீஸ். 'ஆள் கடத்தல் வழக்கில் முதல் குற்றவாளியாக முன்னிறுத்​தவே இந்த சேஸிங்’ என்கிறது போலீஸ் வட்டாரம். 

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுப.தங்கவேலனுக்கு எதிராக அணி திரட்டினார் ரித்தீஷ். மாவட்டச் செயலாளர் பதவிதான் அவரது திட்டம். இதற்காக போகலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளரான கதிரவன் என்பவரையும் தங்கள் பக்கம் இழுக்க நினைத்தார். அவர் அதற்கு மசியவில்லை. இந்த நிலையில்தான் பிப்ரவரி 12-ம் தேதி திருப்புவனம் அருகே மர்ம கும்ப​லால் கண்ணைக் கட்டிக் கடத்தப்பட்ட கதிரவன், கடும் மிரட்டலுக்குப் பிறகு திருப்பி அனுப்பப்​​பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்கே ரித்தீஷ்?

மதுரை புறநகர் எஸ்.பி-யான ஆஸ்ரா கர்க்கிடம் கதிரவன் புகார் கொடுத்ததை அடுத்து, ரித்தீ​ஷ§க்கு நெருக்கமான பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தைத் தேடியது போலீஸ். மார்ச் 12-ம் தேதி வரிச்சியூர் செல்வத்தையும் அவனது கூட்டாளி​களையும் திண்டுக்கல் லாட்ஜில் சுற்றி வளைத்த போதுதான், கேரளாவைச் சேர்ந்த சினோஜ் என்பவன் என்கவுன்டரில் கொல்லப்பட்டான். அப்போது வரிச்சியூர் செல்வம், கேரளாவைச் சேர்ந்த வர்கீஸ், அஜித் ஆகியோர் போலீஸிடம் சிக்கினார்​கள்.

''கதிரவன் கடத்தல் புகார் கொடுத்த​போதே, ரித்தீஷை வரவழைத்து விசாரணை நடத்தினார் ஆஸ்ரா கர்க். அப்போது, தனக்கும் கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சத்தியம் செய்தாராம் ரித்தீஷ். 'தேவைப்பட்டால் திரும்பவும் விசாரணைக்கு அழைப்போம்’ என்ற நிபந்தனையோடு அப்போது விடுவிக்கப்பட்டார். என்கவுன்டர் சம்பவத்தை அடுத்து வரிச்சியூர் செல்வம் கடகடவென உண்மைகளைக் கக்கவே, மீண்டும் ரித்தீஷை விசாரணைக்கு அழைத்தது போலீஸ். சங்கரன்கோவில் இடைத்தேர்தலைக் காரணம்காட்டி

எங்கே ரித்தீஷ்?

ஆஜராவதை இழுத்தடித்தார். அதோடு, 'விசாரணை என்ற பெயரில் தேவை இல்லாமல் போலீஸ் என்னைத் தொந்தரவு செய்கிறது’ என்று முன்ஜாமீன் மனுவும் போட்டார். அதற்கு முன்னதாகவே அவரது செல்போன்கள் சுவிட்ச் ஆஃப் ஆகி விட்டன'' என்கின்றனர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சுற்றி வரும் விவரமானவர்கள்.  

டெல்லி வரை சென்று ரித்தீஷை தேடியது போலீஸ். கடந்த 16-ம் தேதி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ரித்தீஷ் சம்பந்தப்பட்ட ஆறு இடங்களில் விசாரணை நடத்தினார்கள். அன்றைய தினமே வரிச்சியூர் செல்வத்தின் தம்பி செந்தில், மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். அடுத்து, வரிச்சியூர் செல்வம் உள்ளிட்டவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மனு போட்டிருக்கிறது போலீஸ்.

கடத்தப்பட்ட கதிரவனிடம் பேசினோம். ''சி.பி.ஐ. அதிகாரி​கள்னு அறிமுகம் செய்துகொண்ட சிலர் என்னை விசாரணை செய்ய வேண்டும் என்று, அழைத்துச் சென்றார்கள். மதுரை ஏர்போர்ட்டைத் தாண்டியதும், என் கைகளையும் கண்களையும் கட்டினார்கள். அப்போதுதான் கடத்தல் கோஷ்டியிடம் மாட்டிக் கொண்டதை உணர்ந்தேன். கொடைக்கானல் மலைக்குப் போன பிறகே கட்டை அவிழ்த்தார்கள். என் எதிரில் அப்போது 20 பேருக்கும் மேல் இருந்தாங்க. யாருக்குமே தமிழ் பேச வரலை. மலையாளமும் ஹிந்தியும் பேசினாங்க. அவங்ககிட்ட லேட்டஸ்ட் துப்பாக்கிகள் இருந்துச்சு.

என் கண்ணைக் கட்டி இருந்தப்போ, 'கதிரவா, எதுக்கு எல்லாரையும் பகைச்சுக்கிறே... மாவட்டம் உன்னைக் காப்பாத்திருவானா? உன்னை முடிக்கிற​துக்கு ஒரு கோடி ரூபா கொடுத்துருக்காங்க. நீ ரெண்டு கோடி கொடு... விட்டுர்றோம்’னு ஒருத்தன் சொன்னான். அநேகமா அது வரிச்சியூர் செல்வ மாத்தான் இருக்​கணும். அந்தக் கும்பல் செஞ்ச டார்ச்சர்ல, செத்துடலாம் போல இருந்துச்சு. கடைசியா, 'எம்.பி-கிட்ட பேசு, அவர் சொன்னா உன் னை விட்டுர்​றோம்’னு அவனுங்களே ரித்தீஷ§க்கு போன் போட்டாங்க. 'தம்பி... என்னைவிடச் சொல்​லுங்க, இல்லாட்டி ஷூட் பண்ணச் சொல்லுங்க; வேதனை தாங்க முடியலை’ன்னு கதறினேன். அப்புறமாத்தான் காருல ஏத்திக் கொண்டாந்து, அவனியாபுரத்துல விட்டாங்க.

அப்பவே ரித்தீஷ§க்குப் போன் போட்டு, 'தம்பி... என்னைக் கடத்தினதுல உங்களுக்கு சம்பந்தம் இருந்தாச் சொல்லுங்க. நான் போலீஸுக்குப் போகலை’ன்னு சொன்னேன். அதுக்கு அவர், 'நான் உங்களைக் கடத்தச் சொல்லலை. நீங்க கண்டிப்பாப் புகார் குடுங்க’ன்னு சொன்னார். அப்புறமாதான் எஸ்.பி-கிட்ட புகார் கொடுத்தேன். அப்படிச் சொன்னவர், இப்ப எதுக்குத் தலைமறைவா இருக்கணும்?'' என்று கேள்வி எழுப்பினார்.  

ரித்தீஷ் தரப்புக்காக ஆஜராகும் வழக்கறிஞர் ஆனந்திடம் பேசியபோது, ''மதுரையில் ரித்தீஷ் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நான்தான் ஆஜராவேன். ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை எனக்கு எந்தத் தகவலும் இல்லை. அவருக்கு சென்னையிலும் வக்கீல்கள் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் ஆஜராகலாம்'' என்று ஒதுங்கிக் கொண்டார்.

எஸ்.பி-யான ஆஸ்ரா கர்க்கிடம் கேட்டதற்கு, ''வழக்கின் விசாரணை பாதிக்கும் என்பதால் சில விஷயங்​களை வெளிப்படையாகப் பேச முடியாது. விசாரணை சரியான பாதையில் போய்க்கொண்டு இருக்கிறது'' என்றார்.

ரித்தீஷ் முன்வந்துதான் உண்மையைத் தெளிவு​படுத்த வேண்டும். ரித்தீஷ் பதில் அளித்தால் வெளி​யிடத் தயாராக இருக்கிறோம்.

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism