Published:Updated:

கால்வாயா? காலன் வாயா?

பிஞ்சுக் குழந்தைகளை விழுங்கிய கம்மம்!

##~##

''ஸ்கூலுக்குப் போயிட்டு வர்றேம்மா!'' என்று காலையில் டாட்டா காட்டிவிட்டுப் பள்ளிக்குச் சென்ற குழந்தையை மாலையில் சடலமாகப் பார்ப்போம் என்று, பெற்ற மனங்களுக்கு அப்போது தெரியாது. ஒரே நேரத்தில் 15 குழந்தைகளை விழுங்கிப் பதற வைத்திருக்கிறது ஆந்திர மாநிலத்து கம்மம் பகுதியில் இருக்கும் துக்காராம் கால்வாய். 

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது எல்.வி. ராமநாதரெட்டி நினைவு நர்சரி பள்ளி. அங்கு சுமார் 500 மாணவர்கள் படிக்​கிறார்கள். பள்ளிக் குழந்தைகளை அழைத்துவர, ஐந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விபத்து நடந்த 20-ம் தேதி அன்று பள்ளி முடிந்ததும் எப்போதும் போல உற்சாகமாகச் சிரிப்புடன் பேருந்தில் ஏறி இருக்கிறார்கள் குழந்தைகள். ராகுவாபுரத்தின் சுஜாதா நகர் அருகில் துக்காராம் கால்வாய் பாலத்தில் வரும்போதுதான் பிள்ளைகளின் கடைசிச் சிரிப்பு நின்று போனது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கால்வாயா? காலன் வாயா?

பாலத்தில் இரண்டு பக்கங்களிலும் தடுப்புச் சுவர் இல்லை. பேருந்தை ஓட்டி வந்த சீனு, எதிரே மாட்டு வண்டி வருவதைக் கவனிக்கவில்லை. திடீரென, எதிரே வண்டி வருவதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் பிரேக் போட, நிலை தடுமாறிய பேருந்து துக்காராம் கால்வாய்க்குள் பாய்ந்தது. பஸ்ஸில் இருந்த குழந்தைகளின் மரண ஓலம் கேட்டு, அருகில் இருந்த விவசாயிகள் கால்வாய்க்குள் குதித்து குழந்தைகளைக் காப்பாற்றுவதில் மும்முரம் ஆனார்​கள். கால்வாயில் புத்தகச் சிதறல்களோடு மாணவர்​களும் மிதந்துகொண்டு இருந்தனர். சில மாணவர்கள் பஸ்ஸின் உள்ளே சிக்கி வெளியே வர இயலாமல் தங்களின் கடைசி மூச்சுக்காற்றை அங்கே​யே விட்டு இருக்கிறார்கள். பஸ்ஸில் பயணித்த 50 மாணவ- மாணவிகளில் 15 பிஞ்சுகள் இன்னுயிரைஅங்கே துறந்து​விட்​டார்கள். பலத்த காயம் அடைந்த பலர் அருகில் உள்ள ஒத்தக்கூடம் மருத்துவமனைக்கு அனுப்பி​ வைக் கப்​​பட்டார்கள்.

சம்பவத்தைப் பார்த்த விவசாயி ஒருவர், ''டிரைவர் லீவுல இருந்ததால, கிளீனரான சீனுதான் பஸ்ஸை ஓட்டி இருக்கான். பஸ் கால்வாய்க்குள்ள விழுந்ததும் நாங்க முடிஞ்ச அளவுக்குக் குழந்தை​களைக் காப்பாத்த முயற்சி பண்ணினோம். 15 குழந்தைங்க இங்கேயே இறந்து போயிடுச்சுங்க. எல்லாக் குழந்தைகளையும் ஆம்​புலன்ஸ்ல போட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்​டோம். அடிபட்டுக் கிடந்த சீனுவையும் ஆஸ்பத்திரியில சேர்த்தோம்.

ஆனா, பெத்த மனசுக்கு குழந்தைங்க போனதை தாங்க முடியுமா? பத்து பேருக்கு மேல வந்து, சீனுவை ஆஸ்பத்​திரிக்கு வெளியே இழுத்துப் போட்டு அடிக்க ஆரம்பிச்சாங்க. போலீஸும் தடுத்துப் பார்த்தாங்க. ஆனா பெத்தவங்க ஆத்திரம் அடங்கல. ஒரு கட்டத்தில கூட்டத்தில ஒருத்தர் கத்தியை எடுத்து சீனுவோட கழுத்தை அறுத்துட்டாரு. அவன் கத்தியபடியே மயக்கமாயிட்டான். அப்புறம், போலீஸ் ஓடி வந்து எல்லோரையும் விலக்கி அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டாங்க. இப்ப அவன் குணமாயிட்டு வர்றான்னு சொல்றாங்க'' என்றார் கலங்கியபடி.

ஆந்திர போக்குவரத்துத் துறை அமைச்சர் போச்சா சத்தியநாராயணா, ''ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளின் பேரு ந்துகளின் தரச் சான்றிதழ்களையும் 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பேருந்துகள் தரமான​தாக இருக்கிறதா என்று சோதனை நடந்தப்​படும். இது போன்ற விபத்துகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்'' என்று அறிவித்து உள்ளார்.

தடுப்புச் சுவர் இல்லாத பாலங்கள், கிணறுகள் போன்றவற்றைச் சீர்படுத்துவதும் அவசியம். தமிழக அரசும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்!

-கே.ஏ.சசிகுமார்,

படங்கள் : ச.வெங்கடேசன்