Published:Updated:

தருண் ரவியைக் காப்பாற்ற தமிழரால் முடியும்!

இயக்குநர் வசந்தபாலன்

##~##

விளையாட்டுத்தனமாகச் செய்த ஒரு காரியம், பெரும் வினை ஆகி ஒரு தமிழ் இளைஞ னின் எதிர்காலத்தையே கேள்விக் குறி ஆக்கி உள்ளது. இந்த விபரீ தத்தில் சிக்கி இருப்பவரை, தமிழர்கள் மனதுவைத்தால் காப்பாற்ற முடியும் என்ற ஒரே ஆறுதலுடன் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. 

கம்ப்யூட்டர் நிபுணரான ரவி பழனி என்பவர், கடந்த 15 ஆண்டு களுக்கு முன், அவரது மனைவி சபீதா மற்றும் மகன் தருண் ரவியுடன் வேலை நிமித்தமாக அமெரிக்காவில் குடியேறினார். 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 18 வயது நிரம்பிய தருண் ரவி, கல்லூரிப் படிப்புக்காக நியூ ஜெர்ஸியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தது தற் செயலான நிகழ்வு. ஆனால், அது ஒரு பிரச்னைக்கான பிள்ளையார் சுழியாகவும் அமைந்துவிட்டது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தருண் ரவியைக் காப்பாற்ற தமிழரால் முடியும்!

ரட்கர்ஸ் பல்கலைக் கழகக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த தருண் ரவிக்கு ரூம்மேட்டாக வந்தவர், அமெரிக்கரான டைலர் கிலிமென்ட்டி. தற்செயலாக நெட்டில் மேய்ந்துகொண்டு இருந்த வேளையில், டைலர் ஓரினச் சேர்க்கையாளர் என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார் தருண். அதோடு, கல்லூரியில் சேருவதற்கு முன்பே, டைலர் தன் பெற்றோரி டம் இந்த உண்மையைச் சொல்லி இருப்பதையும் அறிந்தார். இதனை டைலரின் தந்தை ஏற்றுக் கொண்டாலும் தாய் ஏற்கவில்லை என்ற உண்மைகளும் ரவிக்குத் தெரிய வந்தன.

கல்லூரி ஆரம்பித்த மூன்றாம் வாரத்தின் இறுதியில் டைலர் தயக்கத்துடன் வந்து தருணிடம், '2010, செப்டம்பர் 19-ம் தேதி ஞாயிறு இரவு 9 மணி முதல் 12 மணி வரை, இந்த அறை எனக்கு பெர்சனலாக வேண்டும். நீங்கள் அந்த நேரத்தில் வெளியில் தங்கி இருங்கள்’ என்று கேட்டு இருக்கிறார். தருண் சம்மதம் சொல்லி, எதிரில் இருந்த தனது தோழி மோலியின் அறைக்குப் போய்விட்டார்.

அப்போது டைலரைத் தேடிக்கொண்டு சுமார் 30 வயது மதிக்கத்தக்க, தாடி வைத்த ஒரு நபர் வந்ததும் அறை மூடப்பட்டுள்ளது. புதிய நபர் மீதான சந்தேகம் மற்றும் வயதுக்கே உரிய குறுகுறுப்பு காரணமாக, தோழி மோலியின் கம்ப்யூட்டர் மூலமாக, தன் ரூமில் உள்ள கம்ப்யூட்டர் வெப் கேமராவை இயக்கி, டைலர் அறைக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்திருக்கிறார் தருண். டைலரும் அறைக்கு வந்த புதிய நபரும் முத்தமிட்டுக்கொள்ளத் தொடங்கியதும், உடனே வெப்கேமை அணைத்து விடுகிறார் தருண். போலீஸ் சொல்லும் தகவல்படி, தருண் இரண்டு வினாடிகள் மட்டுமே வெப்கேம் மூலம் அறைக்குள் நடந்ததைப் பார்த்திருக்கிறார்.

அடுத்து ட்விட்டரில் நுழைந்த தருண், சற்றுமுன் பார்த்த சங்கதி யைப் போகிறபோக்கில் ட்விட் செய்துவிட்டு, அந்த விவகாரத்தை அப்படியே மறந்து விட்டார். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, 'மீண்டும் இன்று இரவு எனக்கு அறை வேண்டும்’ என்று டைலர் கேட்க தருண் சம்மதித்து இருக்கிறார்.

உடனே விளையாட்டுப் புத்தியில், 'இன்று இரவு 'அது’ மீண்டும் நடக்கிறது. அதனால் நண்பர்கள் என் வெப்கேமை ஆன் செய்து நடப் பதைப் பார்த்துக்கொள்ளலாம்’ என்று ட்விட்டரில் தருண் செய்தி அனுப்பி இருக்கிறார். ஆனால், பிறர் அந்தரங்கத்தில் விளையாடுவது தவறு என்று மனம் உறுத்தவே, ரூமை விட்டு வெளியேறும்போதே, அவரது வெப்கேமை ஆஃப் செய்து விட்டார்.

இது நடந்து இரண்டு நாட்களில், நியூயார்க்கின் ஜார்ஜ் வாஷிங்டன் பிரிட்ஜில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் டைலர் . இதைத் தொடர்ந்து, 'தன் ரூம்மேட் டைலரின் தனிமைக்குப் பங்கம் விளைவித்தார்’ என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தருண் மீது குற்றம் சுமத்தி போலீஸ் கைது செய்தது. உடனே அமெரிக்காவின் அத்தனை ஊடகங்களும், 'தன் அறை நண்பன் டைலரின் ஹோமோசெக்ஸுவல் காட்சிகளை ரகசியமாகப் படம் எடுத்து யூ டியூப்பில் உலவவிட்டார் தருண்’

தருண் ரவியைக் காப்பாற்ற தமிழரால் முடியும்!

என்று பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. அமெ ரிக்காவின் பல முக்கியப் பிரமுகர்களும், ஹோமோ குழுமத்தவர்களும் இதனைக் கடுமையாகத் தாக்கி அறிக்கை விட்டார்கள். அதிகப்பட்சத் தண்டனை வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள்.

அதனால், டைலர் தற்கொலைக்குக் காரணம் என்று தருண் மீது 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதில் மிக ஆபத்தானது, சிறுபான்மையினர் மீதான தாக்குதலைத் தடுக்கும் சட்டப்படி குற்றம் சுமத்தப்பட்டதுதான். (நிறம் காரணமாகவோ, மொழி, மதம், இனம் காரணமாகவோ, வேற்று செக்ஸ் பிரிவினர் என்பதன் காரணமாகவோ, குறிவைத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று பதிவு செய்யும் சட்டப்பிரிவு) தருண் மீது சுமத்தப்பட்டுள்ள சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிக பட்சத் தண்டனையாக 10 வருட சிறைத் தண்டனை ரவிக்கு விதிக்கப்படலாம்.

இந்த வழக்கு குறித்துப் பேசும் தருண் தரப்பினர், ''தருண் ரவியின் முதல் ட்விட்டர் செய்தியை மறுநாளே டைலர் பார்த்திருக்கிறார். ஆனாலும், பெரிதாக அலட்டிக்கொள்ளாமல்தான் அடுத்த முறையும் ரூம் கேட்டு இருக்கிறார். இவரது இரண்டாவது ட்விட்டர் செய்தியைப் பார்த்து விட்டு, அறையில் இருந்த கம்ப்யூட்டரை அணைத்து விட்டார் டைலர். ஆனால், அதற்கு முன்பே தருண் குற்ற உணர்ச்சியால் வெப்கேமை அணைத்து விட்டுத்தான் வெளியேறினார். அதனால் இவர் மீது எந்தக் குற்றமும் கிடையாது.

இந்த வழக்கின் முன் விசாரணையின்போது, 'அனைத்துக் குற்றங்களையும் செய்ததாக ஒப்புக் கொண்டால், செய்த தவறுக்கு ஐந்து வருடம் சமூகப் பணி மட்டுமே தண்டனையாக வழங்கப்படும், சிறைத் தண்டனை கிடையாது’ என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டதை ஏற்க தருண் மறுத்துவிட்டார். 'தான், ஹோமோ குழுமத்தவருக்கு எதிரி இல்லை. அவர்களைப் பற்றி எப்போதும் தவறாகப் பேசியது இல்லை. நான் இரண்டு ட்விட்டர் செய்திகளை வேடிக்கைக்காகப் பதிவு செய்தேனே தவிர, வேறு எந்தத் தவறும் செய்யவில்லை’ என்று உறுதியுடன் சொல்லி இருக்கிறார்.

டைலர் தற்கொலை செய்வதற்கு முன், ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். போலீஸ் அதைக் கைப்பற்றி இருந்தாலும், 'தற்கொலைக்கும் அந்தக் கடிதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று, அந்தக் கடிதத்தை வெளியிட மறுத்து விட்டது. டைலருடன் உறவில் ஈடுபட்ட நபரின் புகைப்படம், பெயர், அவருடன் நடந்த விசாரணையில் கிடைத்த தகவல் எதையும் அரசுத் தரப்பு வெளியிட மறுப்பது ஏன் என்றும் தெரியவில்லை'' என்கிறார்கள்.

தருண் ரவியின் பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களும், 'தருண் எப்போதும் ஹோமோ நபர்களுக்கு எதிரானவர் இல்லை. ஒருபோதும் டைலரைக் கிண் டல் செய்தோ, வெறுத்தோ, தவறாகவோ எந்த உரை யாடலும் நிகழ்த்தவில்லை’ என்று, கோர்ட்டில் சாட்சியம் அளித்திருக்கிறார்கள்.

ஆனாலும், தருண் விளையாட்டாய் அனுப்பிய இரண்டு ட்விட்டர் செய்திகளைக் காரணம் காட்டி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை பொதுமக்களில் இருந்து தேர்ந்து எடு க்கப்பட்ட 12 பேர் கொண்ட குழுவின் முன்பு வந்தது. பத்திரிகை மற்றும் ஊடகங்களிலும் இந்தச்செய்தி பெரிதுபடுத்தப்பட்டதால் தாக்கம் அடைந்த குழுவினர், ' தருண் மீதான 15 குற்றச்சாட்டுகளின் படியும் குற்றம் செய்தார்’ என்று, கடந்த மார்ச் மாதம் அறிக்கை தந்து விட்டார்கள். இந்த அறிக்கை யைப் படித்து வரும் மே 21-ம் தேதி தீர்ப்பு வழங்க இருக்கிறார் நீதிபதி.

''இந்த அறிக்கையின்படி தீர்ப்பு என்றால், 10 வருடங்கள் சிறைத் தண் டனை கிடைக்கலாம். இந்த அளவுக்கான தண்டனை... சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம் செய்பவர் களுக்கும், பயங்கரக் கொலை செய்தவர்களுக்கும் மட்டுமே தரப்படுவது. ஒரு நிரபராதி தண்டிக்கப்படுவதை, நம் தமிழர்கள் நினைத்தால் தடுக்க முடியும்'' என்று வேண்டுகோள் வைக் கிறார்கள் தருண் ரவியின் நண்பர்கள்.

ஆம், இந்தத் தண்டனையில் இருந்து தருண் தப்பிக்க ஒரே ஒரு வழி இருக்கிறது. வெள்ளை மாளிகை தலையிட்டு அவரது வயது, படிப்பு, எதிர்காலத்தை மனதில்கொண்டு நல்ல தீர்ப்பை வழங்க முடியும். இதற்கு வெள்ளை மாளிகைக்கு அதிகமான நபர்கள் மனு அனுப்ப வேண்டும். இப்போது தருண் குடும்பத்தினரும் நண்பர்களும், பொதுமக்களும் 'இந்தச் சட்டம் தருண் மீது தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது’ என்று www.wh.gov/NM1 சைட்டுக்குச் சென்று மனுவைச் சமர்ப்பித்து இருக்கிறார்கள். இன்னும் 20 தினங்களுக்குள் குறைந்தது 25,000 நபர்கள் இந்த சைட்டுக்குச் சென்று மனுவைப் பரிசீலனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்தால், வெள்ளை மாளிகை நிச்சயம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும்.

  'கொலவெறி’ப் பாடலை ஒரு சில நாட்களில் உலகம் முழுவதும் பரப்பிய தமிழர்கள், தருண் ரவிக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முறியடிக்கவும் ஒன்று சேர்வார்கள் என்றே நம்புவோம்.