Published:Updated:

டாக்டராக ஆசைப்பட்ட கொள்ளைக்காரர்!

வேளச்சேரி என்கவுன்டரில் வெளிச்சத்துக்கு வந்த இருவர்

##~##

சென்னை போலீஸார் என்கவுன்டர் செய்த வங்கிக் கொள்ளையர்களில், மூவர் பற்றிய அடையாளம் முதலி​லேயே தெரிந்துவிட்டது. இப்​போது, மீதி இருந்த இருவரும் யார் என்பது தெரிய வந்துள்ளது. அதனால், 'நாங்கள் என்​கவுன்டர் செய்தது உண்மையான கொள்​ளையர்களைத்தான்’ என தமிழக போலீஸார் நெஞ்சை நிமிர்த்துகிறார்கள்! 

என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டவர்களில் நால்வர் பீகாரிகள் எனவும், ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர்களது அடையாள அட்டைகளை வைத்து போலீஸ் கண்டுபிடித்தது. நாமும் பீகாருக்கு நேரில் சென்று, அடையாளம் காணப்பட்ட பீகார்வாசி​கள் குறித்து விவரங்கள் திரட்டினோம். சுடப்பட்​டவர்கள் அனைவருமே கிரிமினல்கள் என்பதைக் கண்டுபிடித்து, 7.3.12 தேதியிட்ட ஜூ.வி. இதழில் எழுதினோம். அடுத்து, அடையாளம் காணாமல் இருக்கும் மீதிஉள்ள இருவரும்கூட பீகாரைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்று 11.3.12 தேதியிட்ட ஜூ.வி. இதழில் எழுதி இருந்​​தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டாக்டராக ஆசைப்பட்ட கொள்ளைக்காரர்!

அது, உண்மை என்று இப்போது நிரூபணம் ஆகியுள்ளது.

அபய்குமார் என்று ஒருவரின் பெயரை போலீஸ் சொன்னது. அவர், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவராக போலி அடையாள அட்டை வைத்திருந்தார். ஆனால், அவரின் உண்மையான பெயர் ஜெயப்பிரகாஷ் நாரா​யண் யாதவ். பீகார் மாநிலத் தலைநகரான பாட்னாவின் எல்லையில் உள்ள மோமின்பூர் கிராமத்​தைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 20. மீனா மற்றும் பிரிஜ் நந்தன் யாதவ் தம்பதியரின் இரண்டாவது மகன். ஜெயப்பிரகாஷ் குடும்பம் உள்ள பத்துவுஹா காவல் நிலையத்தில் அவர் மீது எந்த வழக்கும் பதிவாகவில்லை.

''கொள்ளையின் மாஸ்டர் மைண்டான ராஜீவ் (போலிப் பெயர் ஹரீஷ்குமார்) இந்தப் பகுதியில் உள்ள யாதவர்​களின் கபீர் மடத்தில் இருந்தபோது, அவருடன் ஜெயப்பிரகாஷ§க்கு அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் ஒருவர் வீட்டில் மற்றொருவர் தங்கும் அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இதன் காரணமாக மில்கிபர் மற்றும் மோசின்பூர்வாசிகளுக்கு ராஜீவும் ஜெயப்பிரகாஷ§ம் நன்கு அறிமுகம். இந்த நட்புதான் சென்னை வங்கிக் கொள்ளையில் ஈடுபடவைத்து, என்கவுன்டரில் முடிந்துள்ளது'' என்று மோனிம்பூர் மக்கள் தகவல் சொன்னார்கள்.

டாக்டராக ஆசைப்பட்ட கொள்ளைக்காரர்!

ஜெயப்பிரகாஷின் தந்தை பிரிஜ் நந்தனைப் பார்த்​தோம். ''என் மகன் டாக்டராக வேண்டும் என்று ஆசைப் ​பட்டான். அருகில் உள்ள ஹன்சா கபீர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் கடந்த வருடம் ப்ளஸ் டூ படித்தான். பிறகு, நுழைவுத் தேர்வுக்காக பாட்னாவில் கோச்சிங் எடுத்துக்கொண்டான். மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பம் வாங்கி வருவதாகக் கூறிச் சென்றவன், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவனது மொபைல் போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. கடந்த 9-ம் தேதி ஒரு சாலை விபத்தில் ஜெயப்பிரகாஷ் இறந்து விட்டதாகக் கேள்விப்பட்டோம். அதனால், அவனது பொம்மையை வைத்து ஈமச்சடங்குகளை முடித்து விட்டோம். ஆனால், இப்போது வங்கிக் கொள்ளையனாக அறியப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்'' என்று வருத்தப்பட்டார். இவரது மூத்த மகன் ஓம்பிரகாஷ் நாராயண் யாதவ், தம்பி உடலைப் பெறுவதற்காக சென்னைக்கு கிளம்பி உள்ளார்.

சந்திரிகா ராய் எனும் பெயரில் அடையாளம் காணப்பட்​டவரின் நிஜப்பெயர் நிரஞ்சன்குமார்.

டாக்டராக ஆசைப்பட்ட கொள்ளைக்காரர்!

பாட்னாவின் துல்ஹன்கன்ஞ் பகுதியைச் சேர்ந்தவர். பாகேஷ்வர் யாதவ் என்பவரின் மகனான நிரஞ்சனுக்கு வயது 25. இவர் பீகாரின் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள ஜெகனாபாத் மாவட்டத்தில், நான்கு வருடங்களுக்கு முன், ஒரு கொள்ளையில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை பெற்றவர். படிப்பறிவு அதிகம் இல்லாத நிரஞ்சன், தன் வீட்டில் இருந்து சிறு வயதிலேயே ஓடிவிட்டதால், எங்களுக்குப் பெரிதாக சம்பந்தம் இல்லை என்று அவரது குடும்பத்தார் அலட்டிக்கொள்ளாமல் சொல்​கிறார்கள்.

குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சென்னை போலீஸாருக்கு பெரிதும் உதவிய பாட்னாவின் மெகந்திகன்ஞ் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் சிங்கிடம் பேசினோம். ''அபய்குமார் என சொல்லப்​பட்டவரின் போட்டோவை, ராஜீவின் மில்கிபர் கிராமத்தில் காண்பித்த உடனே, அது ஜெயப்பிரகாஷ் என்று கூறிவிட்டனர். தனது சகோதரியிடம் பேசிய செல்போன் விவரங்களை வைத்து நிரஞ்சனைக் கண்டு​பிடித்தோம். ஆனால், இரண்டு குடும்பத்தாருமே உடல்களை அடையாளம் சொன்னால், சென்னை போலீஸாரால் பிரச்னை வருமோ எனப் பயந்தார்கள். அதனால்தான் வெளியில் சொல்லாமல் மறைத்து விட்டார்கள். ஆனால், இரு குடும்பத்தினரையும் தொடர்ந்து கண்காணித்​தபோது, பொம்மைகளை வைத்து ஈமக்காரியங்களைச் செய்தது தெரியவந்தது. பிறகு, அவர்களை அணுகி, சென்னை போலீஸார் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என உறுதி கூறிய பிறகே, உண்மையை ஒப்புக்கொண்டனர்'' என்று சொன்னார்.

சென்னை போலீஸ் செம உற்சாகத்தில் இருக்கிறது!

- ஆர்.ஷஃபி முன்னா

படங்கள்: சந்திரகாந்த் சிங்,

அப்தாஃப் ஆலம் சித்திக்கீ