Published:Updated:

பெங்களூருவில் துள்ளிய சசிகலா

இன்னும் அதிக வித்தியாசத்துல ஜெயிப்போம்னு நினைச்சேனே!

##~##

''பெங்களூருவை மையமாக வைத்துப் பிரிந்த‌ ஜெ. - சசி 'நட்பூ’,  மீண்டும் பெங்களூருவிலேயே மலர ஆரம்பித்துவிட்டது'' என்பதைச் சொல்லாமல் சொல்கிறது படு உற்சாகமாய் காணப்படும் சசிகலா முகம். பெங்களூருவில் அடுத்தடுத்து அரங்கேறும் சசிகலாவின் துள்ளல் நடவடிக்கைக‌ளே, அதற்கு மௌன சாட்சிகள். கடந்த 21 மற்றும் 22 தேதிகளில் பெங்களூரு கோர்ட்டில் ஆஜரான சசிகலா காட்சிகள் இனி லைவ் ரிலே.   

விரக்தியான முகம், ஆழமான‌ அமைதி, கண்களில் கசியும் கண்ணீரு டன் சோகத்தின் சொரூபமாக நொந்துப்போய் இதுவரைக்கும் காணப்பட்ட சசிகலாவிடம், இந்த முறை ஏகப்பட்ட மாற்றங்கள். 'டை’ அடித்த தலை, ஜெயலலிதா ஸ்டைலில் சிகை அலங்காரம், உற்சாகமாகச்‌ சிரித்த முகம், ஜொலிக் கும் புது வைரக் கம்மலுடன் படு ஃப்ரஷ்.  வழக்கமாக கோர்ட்டுக்குள் சரியான நேரத்தில் நுழையும் சசிகலா, இந்த முறை ஒரு மணி நேரத்துக்கு முன்பே ஆஜராகி விட்டார். அதைவிட ஆச்சர்யம் வக்கீல்கள்,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பெங்களூருவில் துள்ளிய சசிகலா

பத்திரிகையாளர்கள் முதல் கோர்ட் குமாஸ்தா பையன் வரை அனைவருக்கும் வணக்கம் சொல்லி புன்முறுவல் பூத்ததுதான். சசிகலாவின் திடீர் மாற்றத்தால் சுதாகரன், இளவரசி ஆகியோருடன் அவரது வக்கீல் அணியும் ஆச்சர் யத்தில் இருக்கிறது.

20-ம் தேதி மாலையே இளவரசியுடன் பெங்களூருக்கு வந்த சசிகலாவுக்கு கேபிடல் ஹோட்டலில் ரூம் தயாராக இருந் தது. கடந்த முறை ரூமை விட்டு வெளியே வராத சசிகலா, இந்த முறை இரண்டு நாட்களும் காலை யில் இளவரசியோடு வாக்கிங் போனாராம்.

புது டெக்னிக்கில் காப்பி அடித்த சசிகலா!

புதுப் பொலிவுடன் வந்த சசிக லாவை அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்து கொண்டிருக்க, நீதிபதி மல்லிகார்ஜுனையா தன்னுடைய பாணியில் விறுவிறுவென கேள்விகளைத் தொடுத்தார். ஏற்கெனவே பிட் அடித்து நீதிபதியிடம் மாட்டிக் கொண்டதால், இம்முறை நோட் புக் எதையும் கொண்டு வரவில்லை. இளவரசியின் மருமகன் ராஜராஜன் கொண்டு வந்திருந்த வெள்ளைத் தாள்களை குறிப்பு எடுக்க வாங்கிக் கொண்டார். அந்தத்  தாளில் யார் கண்ணுக்கும் தெரியாத வகையில், மார்ஜின் பகுதியில் மைக்ரோ டிப் பென்சிலால் அவரது வக்கீல்கள் எழுதிக் கொடுத்து இருந்ததைக் கைகளை வைத்து மறைத்தவாறு பதில் அளித்தார். யாரும் இதனைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக, மொழிபெயர்ப்பாளர் ஹரிஷ் மொழிபெயர்த்தவற்றை தாளின் இன்னொரு பக்கத்தில் எழுதிக் கொண்டார். சசிகலாவின் புது டெக்னிக்கை மீடியாக்கள் கண்டுபிடித்துவிடக் கூடாது என்ற பதைபதைப்பில் வக்கீல்கள் இருந்ததை, அவர்களின் முகங்களே காட்டிக் கொடுத்தன. குறிப்புகள் இருந்ததாலோ, என்னவோ இந்த முறை புயல் வேகத்தில் பதில் அளித்தார்.

வக்கீல் அவதாரம்!

'பதில்கள் ரொம்பவும்‌ நீளமாக இருப்பதால் கொஞ்சம் சுருக்கிச் சத்தமாகச்‌ சொல்லுங்கள்’ என்று நீதிபதி சொல்லியதும், அடுத்து வந்த அத்தனை கேள்விகளுக்கும் சுருக்கமாக விறுவிறுவென பதில் அளித்தார். இதனால் கேள்விகளின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. சில இடங்களில் சசிகலா தடுமாறிய‌ போது, அவரது வக்கீல் மணிசங்கரும், செந்திலும் சொல்லிக் கொடுத்தனர்.

'36-ம் எண் போயஸ் கார்டன் வீட்டில் 643 ஜோடி தங்க, வைர ஆபரணங்கள் கைப்பற்றியது’ குறித்துக் கேட்டபோது, 'போலீசார் 36-ம் எண் போயஸ் கார்டன் வீட்டில் மட்டுமே சோதனை செய்ய நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி இருந்தார்கள். ஆனால் 31-ஏ எண் போயஸ் கார்டன் வீட்டிலும் உரிமையாளர் இல்லாதபோது அத்துமீறி நுழைந்து, ஊழியர்களை கார் ஷெட்டில் அடைத்து வைத்து விட்டு சோதனை நடத்தினார்கள். அப்போது 448 ஜோடி ஆபரணங்களை மட்டுமே எடுத்துச் சென்றனர். ஆனால் சொத்தின் மதிப்பை அதிகமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக போலீஸார் திட்டமிட்டே பொய்யாக 643 ஜோடி என்று கூறியுள்ளனர். இதில் இருந்தே இந்த வழக்கு எப்படிப் பொய்யாக ஜோடிக்கப் பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது'' என்று ஒரு தெளிந்த வழக்கறிஞர் போன்று பதில் சொன்னார்.

உடனே நீதிபதி, 'கேள்விக்குத் தேவையான பதிலை மட்டும் சொல்லுங்கள்’ என்று கூறினார். ஆனால் சசிகலா கொஞ்சமும் தயக்கம் இன்றி, 'இதெல்லாம் இந்தக் கேள்விக்கு கட்டாயம் தேவை’ என்று மீண்டும் அழுத்திச் சொன்னார். 'நீங்களே வக்கீல் மாதிரி பேசுகிறீர்கள். நீங்கள் இப்போது பேசுவதை எல்லாம் உங்கள் வக்கீல் இறுதி விவாதத் தின் போது பேசுவார்’ என்று நீதிபதி சொன்னதும் எழுந்த சசிகலாவின் வக்கீல் மணி சங்கர், 'அம்மா என் வேலையை குறைக்கிறாங்க’ என்று  சிரித்தார். அப்போது சசிகலாவிடம் முகம் கொள்ளாத சிரிப்பு!

கருணாநிதி ராமாயணம்

போயஸ்கார்டனில் ஊழல் தடுப்புத் துறையினர் சோதனையிட்ட போது நகைகள், விலை மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுபற்றிய கேள்விக்கு, ''வீட்டு உரிமையாளர் இல்லாத போது வீட்டில் சோதனை நடத்தியதே சட்டப்படி குற்றம். அதுவும் 7.12.1996 முதல் 12.12.1996 வரை ஐந்து நாட்கள் ஊழல் தடுப்புத் துறை போலீஸார் ஜெய லலிதா வீட்டில் சோதனை நடத்தியபோது எடுத்த வீடியோவை, கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான சன் டி.வி.யில் தொடர்ந்து ஒளிபரப்பினர். இது ஜெயலலிதாவின் புகழைத் திட்டமிட்டுக் கெடுக்க கருணாநிதி, சன் டி.வி. மற்றும் போலீஸார் செய்த சதி. இந்த நாட்களில் எடுக்கப்பட்ட பொருட்களை 21.12.1996 அன்று எடுத்ததாக போலீஸ் பொய் சாட்சியம் சொல்லி இருக்கிறார்கள்'' என்று சசிகலா சூடாக பதில் அளித்தார்.

ஜெயலலிதாவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 88 லட்சத்து 22 ஆயிரத்து 420 ரூபாய் மதிப்புள்ள புடவைகள் குறித்த கேள்விக்கு, ''ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை அதிகமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக காவல் துறையே வெளியே இருந்து புதிதாக வாங்கிவந்த புடவைகளை வீட்டில் வைத்துள்ளனர். இதை கார் ஷெட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டு சமையல்கார பெண்மணி ராஜம்மாள் மற்றும் டிரைவர் கண்ணனும் பார்த்துள்ளனர். போலீஸ் கொண்டு வந்த புடவை களையும், வீட்டில் இருந்த புடவைகளையும் சேர்த்து மதிப்பிட்டு உள்ளனர்'' என்று அழுத்தமாகவே பதிலளித்தார். 9 லட்சத்து 300 ரூபாய் மதிப்புள்ள பல ஜோடி வாட்சுகளைக் கைப்பற்றியது தொடர்பான கேள்விக்கு, ''20.12.96 அன்று வீட்டில் 2-வது முறையாக சோதனை இட்டதாகச்  சொல்லப்படுகிறது. நீதிமன்றத்தில் வைத்து மதிப்பிடாமல் போலீஸாரே தங்களுக்கு வேண்டியவர்களை வைத்து அதிகமாக மதிப்பிட்டு உள்ளனர். அதே போன்று வீட்டில் இருந்த பழைய காலணிகளையும் புதியது போல கணக்கிட்டு உள்ளனர்'' என்று சசிகலா கடுமையாக ஆட்சேபித்தார்.

அடுத்தது 29-ம் தேதி!

சசிகலா பார்ட்னராக இருந்த ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், ரிவர்வே பிரைவேட் லிமிடெட், மெடோ ஆன்ட்ரோ பிரைவேட் லிமிடெட், நெக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தொடர்பான 53 கேள்விகளுக்கும், 'தெரியாது’ என்று ஒற்றை வார்த்தையில் சசிகலா பதில் அளித்தார். அதே போல நவஷக்தி பில்டர்ஸ், நமச்சிவாய பில்டர்ஸ், ஜெ.எஸ்.பில்டர்ஸ், ஜெ. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சார்பில் வாங்கப்பட்ட நிலங்கள் தொடர்பான 21 கேள்விகளுக்கும், 'ஆம். உண்மை’ என்று பதில் கொடுத்தார்.  22-ம் தேதி மாலை 5 மணி வரை மொத்தம் 504 கேள்விகளுக்குப் பதில் அளித்த சசிகலாவை, வெள்ளிக் கிழமை யுகாதி என்பதால் சனிக்கிழமை ஆஜராகுமாறு நீதிபதி கேட்டுக்கொண்டார். உடனே, ''நாங்கள் சென்னைக்குப் போய்விட்டு வருவது கஷ்டம். செவ்வாய் மற்றும் புதன் அன்று சசிகலாவுக்கு கண் டாக்டரிடம் பரிசோதனை செய்ய வேண்டியிருப்பதால் வர இயலாது'' என்று அவரின் வக்கீல் மணிசங்கர் வாதிட்டார். அரசுத் தரப்பில் எந்த ஆட்சேபணையும் இல்லாததால், 29-ம் தேதியைக் கேட்டு வாங்கிய மகிழ்ச்சியில் அன்று இரவே சென்னைக்குப் பறந்துவிட்டார்.          

மீண்டும் ஜெ. - சசி நட்பூ!

சசிகலாவின் உற்சாகம் குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம். ''சின்னம்மா மீது அம்மாவின் கோபம் குறைந்து இருப்பதாகவே தகவல் வருகிறது.  அம்மாவுக் கும், சின்னம்மாவுக்கும் மீண்டும் உறவு பூக்கக் காரணமே இந்திய அளவில் ஜோதிடத்தில் புகழ் பெற்ற மங்களூர் மஞ்சுநாத சுவாமி ஜோசியர்தான். இப்போதைக்கு அம்மா அந்த மங்களூர் ஜோதிடர் சொல்வதைத்தான் ஃபாலோ பண்றாங்க. சங்கரன்கோவில் தொகுதியில் 60 ஆயிரம் லீடீங்கில் வெற்றி என்று சொன்னதும் சின்னம்மா, 'ஹய்யோ..சூப்பர்’ என்று வியந்து சொன்னார். 'இன்னும் கூடுதலா  ஓட்டு வரும்னு நான் எதிர்பார்த்தேன்’ என்றும் சொன்னார். அம்மாவும் சின்னம்மாவும் மீண்டும் வெளிப்படையாகவே இணைந்துவிடுவார்கள்'' என்று சொன்னார்கள். சசிகலாவின் சந்தோஷத்தைப் பார்த்தால் நிஜமோ என்று நம்பத் தோன்றுகிறது!

யார் யாருக்கு எல்லாம் வயிற்றில் புளியைக் கரைக் கிறதோ?

- இரா.வினோத், படம்: சு.குமரேசன்