Published:Updated:

மண் குதிரையை மிதித்த 'யாக'க் குதிரை!

மகாதேவன் வளைப்புப் பின்னணி?

##~##

போயஸ் தோட்டத்தில் இருந்து சசிகலா பிரிந்த பிறகு, அ.தி.மு.க-வில் அதிகாரம் செய்து ​வந்த மன்னார்குடி குடும்பத்தினர் வரிசையாக வளைக்கப்பட்டு வந்தார்கள். இந்தப் பட்டியலில் புதிய வரவு தஞ்சாவூர் மகாதேவன்! 

சசிகலாவின் அண்ணன் வினோத​கனின் மகனான மகாதேவன், தஞ்சாவூரில் உள்ள அருளானந்தம் நகரில் வசித்து வருகிறார். டெல்டா பகுதி​யில் திவாகரனுக்கு அடுத்த பவர் சென் டராக செயல்பட்டு வந்தவர் இவர். முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், போயஸ் கார்டனுக்குள் சில காலம் செல்லப் பிள்ளையாக வலம் வந்தார் மகாதேவன். உடல் இளைப்பதற்காக குதிரை வாங்கியது, தன்னைப் பார்க்க வருபவர்கள் முன் துப்பாக்கியுடன் பேசுவது என மகாதேவனின் தடா​லடிக் குணாதிசயத்தைப் பார்த்து மிரளா​தவர்கள் யாரும் இல்லை. அதனாலேயே அப்போது கட்சியில் இருந்து மகாதேவன் நீக்கப்பட்டார். 'அவருடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று ஜெயலலிதா உத்தரவு போட்டார். ஆனால், 'மன்னார்குடி’ மந்திர வித்தையால் அடுத்த சில ஆண்டு​களிலேயே கட்சியில் இணைந்து, ஜெ. பேரவைக்கு மாநிலச் செயலாளராக மாறினார். அடுத்த சில நாட்களில் அந்தப் பதவியில் இருந்தும் கழற்றிவிடப்​பட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மண் குதிரையை மிதித்த 'யாக'க் குதிரை!

இந்த நிலையில், அ.தி.மு.க. பெரும்பான்மைப் பலத்துடன் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஆனாலும், தடாலடி எதுவும் செய்யாமல் அமைதியாகவே இருந்தார். அதனால்தான், முதன்முதலில் கட்சி யைவிட்டு நீக்கப்பட்டோர் பட்டியலில் மகாதேவன் பெயர் இல்லை. அடுத்த பட்டியலில் இவர் பெயரும் இணைக் கப்பட்டது.

ராவணன், திவாகரன், நடராஜன் என, அடுத்தடுத்து மன்னார்​குடிப் பிரமுகர்கள் கைது செய்யப்பட்ட போதும், மகாதேவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போது, திடீரென மகாதேவன் மீது சில நில அபகரிப்பு வழக் குகளைப் போட்டு தீவிரமாகத் தேடி வருகிறது காவல் துறை. இந்தத் திடீர் தீவிரத்துக்குக் காரணம் என்ன என்பதை, அவருக்கு வேண் டப்பட்ட வட்டாரத்தில் விசாரித்தோம்.

'சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும், கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள பூம்பாறை என்ற இடத்தில் குதிரை யாகம் நடத்தினார் மகாதேவன். உயிருள்ள குதிரையை வைத்து, மண் ணால் செய்யப்பட்ட குதிரையை உதைத்து அழிப்பதுதான் அந்த யாகம். இதுவரை, அ.தி.மு.க-வை உயிரோடு வைத்திருந்த நிஜக் குதிரைகளான மன்னார்குடி குடும்பங்கள், 'மண் குதிரையை’ பதவி இழக்கச் செய்வதே இந்த யாகத்தின் சூட்சுமம். இது, உளவுத்துறை மூலம் ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போகவே, கொதித்து விட்டாராம். அந்தக் கோபம்தான் மகாதேவன் மீது பாய்ந்து இருக்கும் வழக்கு' என்று சொன்​னார்கள்.

தஞ்சாவூரில் கட்டப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தைச் சுற்றித்தான் நடராஜன் மீது வழக்குகள் போடப் பட்டன. மகாதேவன் மீது போடப்பட்ட வழக்கும் அப்படியே.

சேலம் மாவட்டம் ஏற்காடு பக்​கோரா பாயின்ட் ரோட்டைச் சேர்ந்த சுதர்சனகுமாரின் மனைவி அமலபுஷ்பமேரி, தஞ்சாவூர் நிலஅபகரிப்புத் தடுப்புப் பிரிவுக் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அதில், 'தஞ்சாவூர் விளார் பைபிள் ரோடு பாப்பா நகரில் எனக்குச் சொந்தமான காலி இடம் உள்ளது. அதை இலவசமாகத் தரும்படி நடராஜன், உலகத் தமிழர் பேரமைப்பில் உறுப்பினராக உள்ள இளவழகன், மகாதேவன் உள்ளிட்ட 10-க்கும் மேற் பட்டோர் என்னை கடந்த 2011-ம் ஆண்டு ஜுலை முதல் தொடர்ந்து மிரட்டி வந்தனர். 4,800 சதுர அடி நிலத்தை முள்ளிவாய்க்கால் நினைவகம் கட்டும் பணிக்காக கடந்த ஜனவரி 3-ம் தேதி அபகரித்துக் கொண்டனர்'' என்று புகார் கூறி உள்ளார்.

மகாதேவனைக் கைது செய்ய காவல் துறையினர் அவர் வீட்டுக்குச் சென்றனர். ஆனால், அதற்குள் விஷ யம் தெரிந்து மகாதேவன் எஸ்கேப். உடனே, போலீஸார் போன் மூலம், 'சரணடைந்துவிடுவதுதான் நல்லது’ என்று மகாதேவனுக்கு அறிவுறுத்தினார்களாம். கொஞ்ச நேரம் யோசித்த மகாதேவன், 'இன்னும் இரண்டு நாட்களில் நானே நேரில் வந்துவிடுகிறேன்’ என்று சொன்னாராம். 'உங்களை உடனே கைது செய்யச் சொல்லி மேலிடம் உத்தரவு போட்டு உள்ளது. அதனால், தப்பித்துப் போய் அவர்களின் கோபத்துக்கு ஆளாகாதீர்கள்’ என்று மிரட்டல் தொனியில் பேசியும் மனிதர் அசரவில்லையாம்.

மகாதேவன் தரப்பில் இந்த விவகாரம் குறித்து கேட்டபோது, ''இது அப்பட்டமான அரசியல் வழக்கு என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் புதிதாகச் சொல்வதற்கு என்ன இருக்கிறது'' என்று ஒதுங்கிக்கொண்டனர்.

ஜெயலலிதா - சசிகலா இடையில் மீண்டும் நட்பு துளிர்க்கிறதா என்ற சந்தேகத்துக்கு, மகாதேவன் மூலம் பதில் வந்திருக்கிறது!

- சி.சுரேஷ்