Published:Updated:

''பச்சப் புள்ளையா போனவன் அரைக் கிழவனா வந்துருக்கானே''

மீட்கப்பட்ட கொத்தடிமைகளின் சோகம்

த்தனை அதிர்ச்சியாக இருந்தது அந்தக் காட்சி! 

##~##

மதுரை எஸ்.பி. அலுவலகத்தில், மகாராஷ்டிரா, ஒடிஸா, ஆக்ராவில் இருந்து மீட்கப்பட்ட 42 கொத்தடிமைகள் வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்து இருந்​தார்கள். பாதிப்பேர் சிறுவர்கள்; பணத்துக்காகக் கடத்தப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டவர்கள். மீதிப் பேர், பெற்றோரை ஏமாற்றி ஏஜென்ட்டுகளால் கவர்ந்து செல்லப்பட்டவர்கள். அழுக்கு உடைகள், ஆறாத காயங்கள், தூக்கம் அறியாத கண்களோடு கிடந்தவர்களின் அனுபவங்கள் நெஞ்சைப் பதற வைக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜெயக்கொடி என்ற சிறுவனின் உடல் முழுக்​கக் கொப்புளங்கள்... தழும்புகள். கையில் ஆழமான கத்திக் கீறல் வேறு! 'பேரையூர் பக்கம் தும்மநாயக்கன்பட்டிதான் என் ஊரு. நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டுல நின்னுக்கிட்டு இருந்தேன். சுப்பையாங்கிறவர் என்னைப் பத்தி விசாரிச்சாரு. 'அப்பா அம்மா இல்லை’ன்னேன். 'வடநாட்டு வேலைக்குக் கூட்டிட்டுப் போறேன். கை நிறையச் சம்பளம். நல்ல சாப்பாடு’னு சொன்னார். நானும் தலையாட்டி அவர்கூட போனேன். ஆக்ராவுல சுந்தர்பாராங்கிற இடத்துல இருக்கிற அவரோட பலகாரக் கடைக்குக் கூட்டிட்டுப் போனாரு. அங்க காலையில 4 மணிக்கு எந்திரிச்சா, ராத்திரி 12 மணி வரைக்கும் வேலை. சாப்பிட்டாத் தூக்கம் வரும்னு காலையில 8 மணிக்கு அப்புறம் திரும்பவும் ராத்திரி 12 மணிக்குத்தான் சாப்பாடு தருவாங்க. தண்ணீர் பட்டால் மிட்டாயும், சீனிப்பாகும் சீக்கிரம் கெட்டுப்போயிடும்னு வேலை பார்க்கிற இடத்துல தண்ணீர் இருக்காது. கக்கூஸுக்குக்கு போய்த்தான் தண்ணி குடிக்கணும்.

''பச்சப் புள்ளையா போனவன் அரைக் கிழவனா வந்துருக்கானே''

மெதுவா வேலைப் பார்த்தா, முதலாளி அடிப்பாருன்னு சீனிப்பாகை வேகமா கிண்டுனேன். பாகு, என் மேல தெரிஞ்சு, அலறித் துடிச்சதுல எண்ணைச் சட்டி கவுந்து கால் பொத்தலாகிடுச்சு. ரெண்டு நாள் மட்டும் மருந்து போட்டுட்டு, மூணாம் நாள் வேலை பார்க்கவெச்சாங்க. கொஞ்சம் கண் அசந்தாக்கூட புண்ணு மேலேயே அடிவிழும்...'' என்றான் பரிதாபமாக. தாய், தந்தையோ, உறவினர்களோ இல்லாததால், இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறான் இந்தச் சிறுவன்.

''பச்சப் புள்ளையா போனவன் அரைக் கிழவனா வந்துருக்கானே''

இன்னொரு பக்கம் காசிராஜன் என்கிற 45 வயது மனிதர் அழுதுகொண்டு இருந்தார். பிள்ளையைத் தேடி வந்தவர் அல்ல அவர். பிள்ளைப் பருவத்தில் தொலைந்து போய், முடி எல்லாம் நரைத்துப்போய் ஊர் திரும்பி இருக்கிறார். அவருடையை கையைப் பிடித்து அழுதுகொண்டு இருந்த மகேஸ்வரி அவருக்கு அக்காவாம். ''கொடைக்கானல் வெள்ளகவி எங்க ஊர். பத்தாப்பு வரைக்கும் படிச்சவன், பழனியில ஓட்டல் வேலைக்குப் போனான். திடீர்னு காணாமப் போயிட்ட்டான். நாங்க தேடாத இடம் இல்லை. ஜோசியம் பார்த்தோம். இவன் செத்துட்டான்னு சொன்னாங்க. அழுது புலம்பிட்டு விட்டுட்டோம்.

''பச்சப் புள்ளையா போனவன் அரைக் கிழவனா வந்துருக்கானே''

என்னோட அப்பா அம்மாவும் இறந்துட்டாங்க. ரெண்டு நாளைக்கு முன்னால வீட்டுக்கு வந்த போலீஸ்​காரங்க, 'கொத்தடிமையா இருந்து மீட்கப்பட்டதுல ஒருத்தன் உன் பேரைச் சொல்லுறான். வந்து பாரு’ன்னு கூட்டியாந்தாங்க. இது என் தம்பியேதான். மூக்கு, முழி, கழுத்துல பெரிய தழும்பு எல்லாம் அப்படியே இருக்கு. பச்சப் புள்ளையா போனவன், அரைக் கிழவனா வந்து இருக்கான். இனிமே இவனுக்கு யாரு பொண்ணு குடுப்பா?' என்று தேம்பி அழுகிறார் மகேஸ்வரி.

காசிராஜன் என்பவரிடம் பேசினோம். 'கொஞ்சம் படிச்சவன்கிறதால ஊருக்கு தப்பிச்சிடுவேன்னு என்னை கம்பெனியைவிட்டு வெளியேவிடவே மாட்டார் முதலாளி. வேலை சரியா செய்யலைன்னா, நைலான் கயித்தை சுருட்டி சுளீர்னு அடிப்பாரு. ரெண்டு வருஷத்துக்கு முன்னால, 'என்னால முடியலை. ஊருக்கு விட்டுருங்க’னு கெஞ்சினேன். என்னையப் பார்த்து சின்னப் பயல்களும் அழுதாங்க. கோபத்துல எல்லாரையும் அடிச்சு நொறுக்கிட்டாரு' என்றார்.

''பச்சப் புள்ளையா போனவன் அரைக் கிழவனா வந்துருக்கானே''

கொத்தடிமையாக மீட்கப்பட்டதிலேயேவயது குறைந்தவன் அழகுபாண்டி. 14 வயது. அவரை உசிலம்பட்டி கொங்கபட்டிக்கே போய், பெற்றோருக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துப் போய் இருக்கிறார்​கள் புரோக்கர்கள். 'பாருங்க சார்! இந்தக் குட்டிப்பய எவ்வளவு அழகா இருக்கான்னு. விவரம் தெரியாம இந்தப் புள்ளையப் பெத்தவங்களே அனுப்பி இருக்காங்க. ஆக்ரா போய் ஒரு மாசம்தான் ஆச்சு. இன்னும் ரெண்டு மாசம் அங்க இருந்திருந்தா, உருக்குலைஞ்சு போயிருப்பான்' என்று வேதனைப்பட்டார் ஒரு போலீஸ்காரர்.

மீட்கப்பட்ட மற்றொரு சிறுவனான தேனி அரப்படித்தேவன்பட்டியைச் சேர்ந்த அருள்பிரகாஷை அழைத்துப் போக வந்திருந்தார் அவனது தாய் செல்லம். 'வீட்டுல கோவிச்சிக்கிட்டுப்போன புள்ள, எங்கிட்டுப் போனான்னு தெரியாமத் தவியாத் தவிச்சோம். வீரபாண்டி கௌமாரிதான் எம் புள்ளையப் பத் திரமா கொண்டாந்து சேர்த்து இருக்கா. அவனைப் பார்த்ததும், 'எங்கடா போனே?’ன்னு கேட்கலை. 'அம்மைய விட்டு எங்கிட்டும் போயிறாதடா சாமி!’ன்னு கெஞ்சினேன்' என்றார் கண்ணீரோடு. வீட்டில் கோபித்துக்கொண்டு திருப்பூருக்குச் சென்ற அருள்பிரகாஷை, ராஜேஷ் மற்றும் சையது முகமது ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலம், காட்ச் ரோலியில் இருக்கும் மலைச்சாமி என்பவரின் முறுக்கு கம்பெனியில் விற்று உள்ளார்கள்!

''பச்சப் புள்ளையா போனவன் அரைக் கிழவனா வந்துருக்கானே''

வடுகப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மனநோ​யாளியாகவே மாறிவிட்டார். முகமும் கோரமாகி இருந்தது. அவரது சித்தப்பா பூசாரி வீரணன், 'என் மவன் பெருமாளையும், அண்ணன் மவன் கருப்பையாவையும் பத்துப் பதினைஞ்சி வருஷத்துக்கு முன்னால தெய்வம்கிறவரு வேலைக்குக் கூப்பிட்டார். வருஷத்துக்கு 15 ஆயிரம்னு பேச்சு. முத வருஷம் அட்வான்ஸாப் பணத்தைக் கொடுத்துக் கூட்டிட்டுப் போனாங்க. மறுவருஷம் பணமும் வரலை... புள் ளைங்களும் ஊருக்கு வரலை. கூட்டிட்டுப்போன தெய்வத்துக்குக்கிட்ட சண்டை போட்டேன். உடனே, போன்ல அவங்களைப் பேசவெச்சார். 'பயல் வளுக்கு வயசாயிடுச்சிப்பா. ஊருக்கு விடுங்க. கல் யாணம் பண்ணனும்’னு கேட்டேன். அவங்க கண்

டுக்கல. போய்க் கூட்டியாந்திடலாம்னா, அவங்க எங்கிட்டு இருக்காங்கண்ணே தெரியலை. நல்ல வேளை இப்பவாச்சும் கிடைச்சாங்களே' என்றார் ஆயாசத்துடன்!

''பச்சப் புள்ளையா போனவன் அரைக் கிழவனா வந்துருக்கானே''

போலீஸ் டி.ஐ.ஜி. பாலநாகதேவியிடம் பேசினோம். '12 வயசுலேயே மகாராஷ்டிராவுக்குக் கடத்தப்பட்டு, 10 வருஷமாக் கொத்தடிமையா இருந்த ஜோதிமுத்து என்கிற பையன் தப்பிச்சு ஊருக்கு வந்துட்டான். அவனும் அவங்க அப்பாவும் எஸ்.பி. ஆபீஸ்ல கொடுத்த புகார்தான் இத்தனை பேரை மீட்க உதவி இருக்கு. மதுரை, நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை உட்பட தமிழகம் முழுவதிலும் இருந்து இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள். கேரளா, பெங்களூருவைச் சேர்ந்த சிறுவர்களையும் மீட்டு இருக்கோம். குடிக்கத் தண்ணி, நல்ல சாப்பாடு, தங்குறதுக்கு இடம், நியாயமான சம்பளம் எதுவும் கொடுக்காம 18 மணி நேரம் வேலை வாங்கி இரு க்காங்க. இவங்க மேல சுடு தண்ணி ஊத்துறது, கரன்ட் ஷாக் கொடுக்கிறது போன்ற கொடுமைகளும் நடந்து இருக்கு. லீவு கேட்பார்ங்கிற காரணத்துக்காக,  மகள் இறந்த தகவலைக்கூட ஒரு தந்தையிடம் சொல்லாமல் வேலை வாங்கி இருக்கிறார்கள் கல் நெஞ்சக்காரர்கள். ஜன்னல் வெளிச்சத்தைத் தவிர வேற எதையும் பார்த்தது இல்லை இவங்க.

இப்படியே பத்துப் பதினைஞ்சு வருஷமா இருந்ததால், சிலருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கு. அவங்களுக்கு சிகிச்சை அளிக்கவும், மறுவாழ்வு கொடுக்கவும் நடவடிக்கை எடுப்போம். பெற்றோர்களே தயவு செஞ்சி புரோக்கர்களை நம்பி பிள்ளைங்கள வேலைக்கு அனுப்பாதீங்க. அப்படி யாராச்சும் கூப்பிட்டா, பக்கத்துல இருக்கிற போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுங்க' என்றார்.

எஸ்.பி. ஆஸ்ரா கர்க்கிடம் பேசினோம். 'ஜோதிமுத்து புகார் கொடுத்ததும், மூன்று தனிப் படைகளை மகாராஷ்டிரா, ஆக்ரா, ஒடிஸாவுக்கு அனுப்பினோம். பத்து நாட்களாகத் தேடி இவர்களைக் கண்டுபிடித்தனர் போலீஸார். முதலாளிகள் ஆறு பேர், பழனியைச் சேர்ந்த புரோக்கர் சையது முகமது உட்பட ஐந்து பேர் என 11 பேரைக் கைது செய்து உள்ளோம்.  இதேபோல இன்னும் நிறையப் பேர் பல்வேறு மாநிலங்களில் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது தெரிந்துள்ளது. அவர்களைப் பற்றிய தகவலை சேகரித்து வருகிறோம். விரைவில் அவர்களையும் மீட்போம்...'' என்றார் உறுதியுடன்!

கொத்தடிமைகளை மீட்க தமிழக அரசு தனிப்படை அமைத்து முழுமுயற்சி எடுத்தாக வேண்டும்!

- கே.கே.மகேஷ், படங்கள்: பா.காளிமுத்து