Published:Updated:

ராணுவ ஊழலுக்கு 'சூத்ரதாரி' யார்?

வயது விவகாரத்தில் வெளியே வரும் மோசடி!

'எனக்கு 14 கோடி ரூபாய் லஞ்சம் தர முயற்சிக்கப்பட்டது’ - இது இந்திய நாட்டின் கண்ணியத்துக்கு உரிய உயர்ந்த பதவியில் இருக்கும் ராணுவத் தளபதி சொல்லி இருக்கும் புகார்!

ராணுவ ஊழலுக்கு 'சூத்ரதாரி' யார்?

கடந்த ஒரு வருடமாக, தனது பிறந்த தேதி குறித்த போராட்டத்தில் இருந்த தரைப்படை தளபதி மேஜர் ஜெனரல் வி.கே.சிங் என்கிற விஜய் குமார் சிங் கூறியிருக்கும் புகார் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஸ்தம்பித்து நிற்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஊழல் விவகாரத்தில் என்ன நடந்ததாம்?

##~##

டாட்ரா வேட்ரா என்ற நிறுவனம் சப்ளை செய்திருக்கும் ராணுவ வாகனத் தொகுப்பு குறித்த விவகாரம்தான் இது. இந்த நிறுவனம் ஏற்கெனவே ராணுவத்துக்கு சுமார் 7,000 வாகனங்களை அதிக விலைக்கு சப்ளை செய்துள்ளது. அந்த வாகனங்களுக்கு பராமரிப்பும், சர்வீஸ் வசதிகளும் இல்லை. இதே நிறுவனம் மேலும் 600 வாகனங்களைச் சப்ளை செய்ய முயற்சித்து உள்ளது. இந்த வாகனங்களின் தரம் மோசமாக இருக்கவே, இந்த ஆர்டருக்கு சிங் ஒப்புதல் கொடுக்கவில்லை.

இவரிடம் ஒப்புதல் வாங்குவதற்காக, இந்த நிறுவனம் சம்பந்தப்பட்​டவர்கள் சிபாரிசுக்கு வந்துள்ளனர். இதற்காக சில ராணுவ அதிகாரிகளும் தைரியமாக வந்து மேஜர் ஜெனரலிடம் லாபி செய்து இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்தவர், உடனடியாக ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் புகார் கொடுத்துள்ளார். ஓய்வு பெற்ற ஒரு ராணுவ அதிகாரி ஒருவர் லாபி செய்ததைப் புகாராகச் சொல்லிவிட்டு, 'இப்போது சொல்லுங்கள். நான் இந்தப் பணிக்கு லாயக்கில்லை என்றால் வெளியே போகத் தயார்’ என்றும் அமைச்சரிடம் சொல்லி இருக்கிறார். புகார் சொன்னவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், தன்னை பேட்டி எடுக்கவந்த பத்திரிகையாளரிடம் இந்த விவ காரத்தைக் கொட்டித் தீர்த்து விட்டார்.

பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட பல ஊழல்களைக் கிளறி பல மேல்மட்ட அரசியல்​

வாதிகளுக்கு மட்டுமின்றி, பல ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கும் அடிபணியாமல் நிமிர்ந்து நின்று பணியாற்றி வருபவர் வி.கே.சிங். அவர் மேலும் ஓர் ஆண்டுகள் பணியில் இருக்க முடியும். ஆனால், இவரது நேர்மையைக் கண்டு பயந்த முன்னாள் ராணுவ ஜெனரல்கள், திட்டமிட்டு அவர் பிறந்த தேதி விவகாரத்தில் குளறுபடிகளைச் செய்த காரணத்தால் வரும் மே மாதம் ஓய்வு பெற இருக்கிறார். இப்போது ஆவேசமாகி இருக்கும் சிங், 'யார் அந்த சூத்ரதாரி என்பதை விரைவில் சொல்வேன்’ என்று அறிவித்து இருப்பதால் நாடெங்கும் பற்றி எரிகிறது.

ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஏராள​மான ஊழல் வழக்குகள் சி.பி.ஐ. வசம் இருக்கின்றன. இது சம்பந்தமான புலனாய்வுகளில் பெரிய அதிகாரிகளோ, அரசியல் புள்ளிகளோ சிக்குவது இல்லை. சின்ன மீன்கள் மட்டும் வலையில் விழுந்து கிடக்கிறது. இதுதவிர, இரண்டு மிகப்பெரிய ராணுவ ஊழல்கள் விசாரணையில் இருக்கிறது. அதில் ஒன்று, மேற்கு வங்காளத்தில் டார்ஜிலிங் அருகே உள்ள சுக்னா ராணுவத்தளம் நில பேர ஊழல். இந்த ஊழல், தீபக் கபூர் பொறுப்புக்கு வந்த சமயத்தில் வெளியானது. அதிலும் இந்த சமயத்தில் கிழக்குப்பகுதி ஜெனரலாக இருந்த வி.கே.சிங் மூலம் கிளறப்பட்டது. இதில், தீபக் கபூரும் அவருக்கு முன் பதவியில் இருந்த ஜே.ஜே.சிங்கும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.  

இந்த விவகாரத்தில் கபூருக்கும் ஜே.ஜே.சிங்குக்கும், வி.கே.சிங் ஒத்துழைக்காமல் போனதின் விளைவால்தான், பிறந்த தேதி விவகாரம் கிளறப்பட்டது என்கிறார்கள். கார்கில் விதவைகளுக்கான ஆதர்ஷ் சொசைட்டி வீடுகள் விவகார விசாரணையையும் வி.கே. சிங் சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்து, பலரை அடையாளம் காண வைத்தார். இதனாலும் இவரை விரைவில் கிளப்ப முடிவெடுத்து, அதில் வெற்றியும் கண்டு விட்டார்கள்.

இப்போது ஊழல் விவகாரம் பெரிய அளவில் வெடித்து இருக்கும் நிலையிலாவது, நேர்மைக்கு மரியாதை கிடைக்குமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

- சரோஜ் கண்பத்