Published:Updated:

ஐ.நா. போலீஸிடம் வாங்கிக்கட்டிய இலங்கைக் குழுவினர்!

ஜெனீவா நேரடி ரிப்போர்ட்

##~##

மெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு உள்நாட்டில் பெரும் கண்டனத்தை எழுப்பிய இலங்கை அரசுத் தரப்பினர், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் அத்துமீறி நடந்து கொண்டு, அசிங்கப்பட்டுத் திரும்பி இருக்கிறார்கள். 

ஜெனீவா நகரில், பிப். 27-ம் தேதி தொடங்கிய ஆணையத்தின் 19-வது கூட்டத் தொடர், மார்ச் 23-ம் தேதி முடிவு அடைந் தது. இதில், இலங்கை அரசுத் தரப்பினர் நடந்து கொண்ட விதம், உலக நாடுகளின் பிரதிநிதி களை முகம் சுளிக்க வைத்தது. இந்த நிகழ்வுகள் நடந்தபோது நேரில் பார்த்த சாட்சிகளில் ஒருவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன். இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியர். அந்த அடிப்படையில் ஜெனீவா சென்ற அவர் நம்மிடம் விவரிக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''இலங்கையில் இருந்து வந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், உயிரைப் பாதுகாக்க வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைப் பத்திரிகையாளர்களும் போர் குற்றம் பற்றி உலக நாடுகளின் பிரதிநிதிகளுக்கு எடுத்துக் கூறினார்கள். இவர்கள் எங்கு சென்றாலும் இலங்கை அரசின் நிழற்படை பின்தொடர்ந்தபடியே இருந்தனர். இல ங்கை அரசின் குற்றங்களை எடுத்துச்சொன்ன இவர்களை, வெறித்துப் பார்த்தபடி, தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தது ஒரு கும்பல். அதுமட்டுமின்றி, செயற்பாட்டாளர்களைப் புகைப்படம் எடுத்தார்கள். இந்தப் படங்களை வைத்து, இலங்கைப் பத்திரிகைகளில், இவர்களைத் தேசத்துரோகிகள் என்று செய்தி வெளியிட்டனர். இதற்காகவே, இலங்கையில் இருந்து அரசுத் தரப்பில் 72 பேரை அழைத்து வந்தனர். ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளின் நிகழ்வுகளில் இதுவரை எந்த நாடும் இந்த அளவுக்கு அநாகரிகமாக நடந்து கொண்டது இல்லை.

ஐ.நா. போலீஸிடம் வாங்கிக்கட்டிய இலங்கைக் குழுவினர்!

இலங்கை அரசுத் தரப்பை நியாயப்படுத்துவதற்காக, அவர்கள் தரப்பில் இரு துணை மாநாடுகள் நடத்தப்பட்டன. இரு மாநாடுகளிலும் இலங்கை அரசுக்கு எதிராகப் பல தரப்புகளிலும் கடுமையான கேள்விக்கணைகள். '77 முதல் இனக் கலவரங்களைப் பற்றி விசாரித்த ஆணைக் குழுக்களின் அறிக்கைகளை முழுமையாக வெளியிடவும் இல்லை. வெளியிட்ட தையும் செயல்படுத்தவும் இல்லை. 87-ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட, வட-கிழக்கு மாகாண இணைப்பையும் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் மூலம் ரத்து செய்து விட்டீர்கள். இறுதிப்போர் தொடர்பான நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை எப்படிச் செயல்படுத்துவீர்கள்?’ என்று பல நாடுகளும் கிடுக்கிப்பிடியாகக் கேட்டபோதும், அவர்களிடம் இருந்து முறையான பதில் இல்லை.

ஐ.நா-வில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற சட்ட வல்லுநரான விலி, 'இலங்கையில் சுதந்திரம் வந்து இத்தனைக் காலம் ஆகியும் ஜனநாயக மாற்றம் கொண்டு வருவதற்கான அடையாளமே தெரியவில்லை. இப்போது மட்டும் எப்படிச் செயல் படுத்துவீர்கள் என்பதைச் சொல்லுங்கள்?’ என்று கேட்டார். லண்டனில் இருந்து வந்திருந்த ஒரு மனிதஉரிமை செயற்பாட்டாளர், 'தீர்மானத்தின்படி நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரையைச் செயல்படுத்தாவிட்டால், இலங்கை அரசின் மீது நட வடிக்கை எடுக்க முடியுமா?’ என்று கேட்டார். எந்த கேள்விக்கும் நேரடியான பதில் கிடைக்கவில்லை.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் ஆகிய சர்வதேச மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் இலங்கை அரசுத் தரப்புக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. 'அப்பாவி மக்களை வெள்ளை வேனில் கடத்தும் இலங்கை அரசின் குணத்தை ஐ.நா. ஆணை யத்திலும் காட்டுகிறீர்களா?’ என்று சர்வதேச மனித உரிமை அமைப்பினர் கடுமையாகக் கண்டித்தனர். இதனால், அங்கு அமளி ஏற்பட்டது.

லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள 'இலங்கையில் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்கள்’ அமைப் பின் சுனந்த தேசப்ரிய மீது சிங்கள இனவெறியர்கள் தாக்கும் அளவுக்கு நிலைமை படுமோசமானது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை பங்கேற்ற கூட்டத்திலேயே இலங்கை அரசுத் தரப்பினர் எல்லை மீறினார்கள்.

ஐ.நா. போலீஸ் வந்து, அவர்களைக் கடுமையாக எச்சரித்து, வெளியேற்றினார்கள்'' என்று சொன்னவர், ''ஈழத் தமிழினத்தின் நீதிக்கான போராட்டத்தில் இப்போதைய தீர்மானம், முதல் வெற்றிப்படி'' என்று நம்பிக்கையுடன் சொன்னார்.  

ஈழத் தமிழினத்துக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதுதானே எல்லாத் தமிழர்களின் எதிர் பார்ப்பும்!

- இரா. தமிழ்க்கனல்

''வெற்றிக்குக் காரணம் தமிழ்நாடு!''

 ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமர்வில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா சமர்ப்பித்ததும், ராஜதந்திரப் போர் தொடங்கியது. இந்த தீர்மானம் ஆழமாக எந்த ஒரு விஷயத்தையும் ஆராயாவிட்டாலும், இது இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலின் ஆரம்பப்படி. இந்தக் கட்டத்தை எட்டுவதற்கு தமிழ்நாடுதான் ஊக்கமாக அமைந்தது என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பேச்சுக்கள் எழுந்துள்ளன!

இப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்கா முடிவு எடுத்தபோது, இலங்கையில் இருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பி-க்கள் மற்றும் தலைவர்களையே முதலில் அழைத்துப் பேசி இருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

வாஷிங்டனில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பேச்சு வார்த்தை  நடத்தியது. தங்களின் இந்தத் தீர்மானம் தொடர்பான வரைவுகளைத் தயாரித்தபோது, தமிழ் எம்.பி-யான  சுமந்திரனை இரண்டாவது தடவையாக அமெரிக்காவுக்கு அழைத்தது. 'ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்துகொண்டு தீர்வு எட்டுவதுதான் சரியானதாக இருக்கும். முதல்கட்டமாக இலங்கை அரசாங்கம் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கையை வைத்தே விசாரணையைத் தொடங்கலாம்’ என்று அமெரிக்கா சொன்னது.

அமெரிக்கா இந்த முயற்சி எடுப்பதை இலங்கை அரசு தெரிந்து கொண்டு, தன்னுடைய பிரதிநிதிகளை அனைத்து நாடுகளுக்கும் அனுப்பியது. இது அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. பெரும்பான்மை நாடுகளின் ஆதரவை தீர்மானத்துக்கு ஆதரவாக வாங்குவது கடினம் என்று அமெரிக்கா நினைத்தது.

இலங்கையைப் போலவே, தன்னுடைய நாட்டுப் பிரதி நிதிகள் 50 பேரை அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா அனுப்பி வைத்து ஆதரவு திரட்டும் காரியத்தில் இறங்கியது. இந்த முயற்சி அனைத்தையும் ஹிலாரி கிளிண்டன்செய்தார்.

இதில் பெரும்பான்மை நாடுகள், 'இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரித்தால் மட்டும்தான் நாங்களும் ஆதரிப்போம். இல்லை என்றால் நடுநிலை வகிப்போம்’ என்று சொன்னது இது, அமெரிக்காவுக்குப் புதிய சிக்கலை உருவாக்கியது. இந்த சூழ்நிலையில், தமிழக அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலரையும் அமெரிக்கத் தூதரகத்துக்கு வரவழைத்துப் பேசி னார்கள். தமிழகக் கட்சிகள், அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்தன. மக்கள், போராட்டங்கள் நடத்தினர். தமிழக முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதினார். காங்கிரஸின் பிரதானக் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வும் இந்த தீர்மானத்தை ஆதரித்தது. இதனால், தீர்மானத்தை ஆதரிக்கும் நிலைப் பாட்டுக்கு இந்தியா வந்தது.

''தமிழகம் மட்டும் இந்த நிலைக்கு ஆதரவான போராட்டத்தை நடத்தி இருக்கா விட்டால், இந்தியா இந்த முடிவுக்கு வந்திருக்காது. உலக நாடுகளும் தீர்மானத்தை ஆதரித்திருக்காது.'' என்பது புலம் பெயர்ந்த தமிழர்களின் எண்ணமாக உள்ளது!

- கனடாவில் இருந்து சுரேஸ் தர்மா