Published:Updated:

அடிக்கலை... ஆனா, விழுந்துட்டாங்க!

போராட்டத்தை நசுக்கிய டி.எஸ்.பி.

##~##

'உரிமைக்காகப் போராடும் மக்களை கை நீட்டி அடிக்கும் உரிமையை டி.எஸ்.பி. ஒருவருக்கு யார் கொடுத்தது? காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் என்னதான் செய்கிறார்?’ என்று தர்மபுரி மக்கள் கொந்​தளிக்கிறார்கள். 

என்னதான் நடந்தது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதிர்ச்சி சம்பவத்தை நேரில் பார்த்த ஓர் இளைஞரிடம் பேசினோம். ''மார்ச் 27-ம் தேதி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்​கப்பட்டன. கொஞ்ச நேரத்திலேயே, 'விண்ணப்பங்கள் இருப்பு இல்லை’ என்று போர்டு தொங்க​விடப்பட்டது. விண்ணப்பங்கள் வாங்க வரிசையில் நின்றுகொண்டு இருந்தவர்கள் டென்ஷனாகிப் போனார்கள். ஏனென்றால், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே சிலர் விண்ணப்பங்களை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்துகொண்டு இருந்தார்கள். அதனால் நீண்ட நெடுந் தொலைவில் இருந்து வந்து, வரிசையில் நின்று ஏமாந்துபோனவர்கள் கோபத்துடன் மறியலில் குதித்தார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து சாலை மறியலில் உட்கார்ந்தேன்.

அடிக்கலை... ஆனா, விழுந்துட்டாங்க!
அடிக்கலை... ஆனா, விழுந்துட்டாங்க!

நாங்க சாலை மறியலில் உட்கார்ந்ததும், தர்மபுரி டவுன் போலீஸ் டி.எஸ்.பி. சந்தானபாண்டியன் போலீஸ் படையோடு வந்து இறங்கினார். வந்ததுமே எங்களைப் பார்த்து மிரட்ட ஆரம்பிச்சார். 'இப்போ எல்லோரும் எழுந்து போக​லைன்​னா, நான் யாருன்னு காட்ட வேண்டி இருக்கும். எழுந்திருங்கடா’ன்னு ஒருமையில் மிரட்ட ஆரம்பிச்சார். முன் வரிசையில் உட்கார்ந்து இருந்த

அடிக்கலை... ஆனா, விழுந்துட்டாங்க!

கருணாமூர்த்தி என்பவர் எழுந்து, 'அப்ளிகேஷனை வாங்கி கள்ள மார்க்கெகெட்ல விற்கிறவனை எல்லாம் விட்டுட்டு, எங்களை வந்து எதுக்காக மிரட்டுறீங்க?’ என்று நியாயமாகத்தான் கேட்டார். அவர் பேசிட்டு இருக்கும்போதே சந்தானபாண்டியன், 'என்னடா நான் சொல்லிக்கிட்டே இருக்கேன், அதைக் கேட்காம நீ ஏதோ கதை பேசிட்டு இருக்க...’ என்றபடி கருணாமூர்த்தியின் கன்னத்தில் மாத்தி மாத்தி நான்கு அறைவிட்டார். கருணாமூர்த்தி நிலை தடுமாறிக் கீழே விழவே, அவருடன் இருந்த அவரோட மனைவி ஜீவா, 'நியாயத்தைக் கேட்டா, இப்படி அடிக்கிறீங்களே...’ என்றபடி கத்திக்கொண்டு எழ.. அவரையும் கன்னத்தில் அறைந்து, கழுத்தைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டார் டி.எஸ்.பி. அவர்கள் இருவருக்கும் முரட்டுத்தனமாக அடி விழுந்ததைப் பார்த்ததும், கூட்டம் கலைய ஆரம்பித்தது. உடனே அடிச்ச இரண்டு பேரையும் ஜீப்புல ஏத்திட்டுப் போனாங்க. அவங்களை போலீஸ் எங்கே கொண்டு போனாங்கன்னு தெரியலைங்க'' என்றார் ஆற்றாமையுடன்.

டி.எஸ்.பி. சந்தானபாண்டியனிடம் பேசினோம். ''ரொம்ப நேரமாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவங்க மறியலைக் கைவிடலை. ஒரு பக்கம் 2 எக்ஸாம் எழுதப்போகும் மாணவர்கள் தவிச்சிட்டு இருந்தாங்க. இன்னொரு பக்கம் ஆம்புலன்ஸ் போக முடியாம

அடிக்கலை... ஆனா, விழுந்துட்டாங்க!

இருந்துச்சு. லெனின்​குமார்ன்னு ஒருத்தர் போதையில வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிட்டு இருந்தார். அவரை மிரட்டுற தொனியில்தான் நான் கையை ஓங்கினேன். யாரையும் அடிக்கக் கிடையாது. அதுல ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக சிலர் கீழே விழுந்துட்டாங்க. தங்களோட கோரிக்கையை வெளிப்படுத்த எத்தனையோ வழிகள் இருக்கு. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதைப் போல மறியல் செய்வது எந்த விதத்தில் நியாயம்? என் மனசாட்சியைத் தொட்டு சொல்றேன்.. நான் யாரையும் அடிக்கவில்லை...'' என்று நிதானமாகச் சொன்னார். ஆனால், நம்மிடம் இருக்கும் வீடியோ ஆதாரத்தில், கணவன், மனைவி மீது டி.எஸ்.பி. தாக்குதல் நடத்துவது தெளிவாகவே பதிவாகி உள்ளது.

தர்மபுரி மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் அமித்குமார் சிங்கிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டோம். ''டி.எஸ்.பி. மறியல் செய்தவர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நேரத்தில், போதையில் இருந்த ஒரு ஆள் கூட்டத்தை உசுப்பேத்துற மாதிரியே பேசிட்டு இருந்திருக்கார். வேற வழி இல்லாம அந்த ஆளை அடிக்க வேண்டியதாப்போச்சு. இருந்தாலும் அந்தத் தம்பதியரைத் தனியே அழைச்சிட்டுப் போய், அவங்ககிட்ட வருத்தம் தெரிவிச்சு அனுப்பி இருக்கார். சம்பவம் தொடர்பா முழுமையான அறிக்கை கேட்டிருக்கோம். விசாரணைக்குப் பிறகே டி.எஸ்.பி. மீது நடவ டிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியும்'' என்று சொன்னார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு விண்ணப்பங்கள் பெறுவதற்குக் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டு, எந்தச் சிக்கலும் இல்லாமல் அனைவருக்கும் கிடைக்கிறது என்பதுதான் ஒரே ஆறுதல்!

- எஸ்.ராஜாசெல்லம்