Published:Updated:

எரித்துக் கொன்றதால் அடித்துக் கொலையா?

நேரு நம்பரைக் கேட்ட கொலையாளி!

எரித்துக் கொன்றதால் அடித்துக் கொலையா?
##~##

மீண்டும் ஒரு 'வாக்கிங் மர்டர்’ தமிழகத்​தின் ரத்தத்தை உறைய வைத்துள்ளது. தமிழகத்​தின் மையப் பகுதியில் மாநகர் ஒன்றில் தி.மு.க.வின் அசைக்க முடியாத மாவட்டச் செயலாளர் ஒருவரின் தம்பியை, அதுவும் மிகப்பெரிய தொழில்அதிபர் ஒருவரை அதிகாலை நேரத்தில் ஆயுதம் தாங்கியவர்கள் அள்ளிக் கொண்டுபோய்க் கொன்று போட்ட சம்பவம்,  திகில் ரகம்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மார்ச் 29-ம் தேதி அன்று திருச்சியில் படுகொலை செய்யப்​பட்டுள்ளார் கே.என்.ராமஜெயம். முன்னாள்

எரித்துக் கொன்றதால் அடித்துக் கொலையா?

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி. பல்வேறு தொழில் களைத் தன்வசம் வைத்திருக்கும் அதிபர்களில் ஒருவர். இரண்டு மாதங்களுக்கு முன் விபத்து ஒன்றில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவ்வளவாக நடக்காமல் ஓய்வாக இருந்த ராமஜெயம், கடந்த இரண்டு நாட்களாகத்தான் நடைப்பயிற்சி செல்ல ஆரம்பித்தார். சம்பவம் நடந்த அன்று காலை 5.30 மணிக்கு நடைப்பயிற்சி சென்றவர் 8.30 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. அதனால், பீதியடைந்தனர் குடும்பத்தினர். அவருடன் கூடவே வாக்கிங் செல்லும் திருச்சி மாநகராட்சி முன்னாள் உறுப்பினர் கண்ணனைத் தொடர்புகொண்டார்கள். 'இன்னைக்கு அண்ணனோட நான் போகலியே’ என்றார். ராம ஜெயத்தின் செல்போனைத் தொடர்புகொண்டார்கள். அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது, சந்தேகத்தை அதிகப்படுத்தியது. அடுத்த சில மணி நேரங்களில், பதற்றமான தகவல் வந்து சேர்ந்தது. கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில், ராமஜெயத்தின் உடல் ஸ்ரீரங்கம் ஏரியாவில் கிடப்பதை போலீஸ் கண்டுபிடித்தனர். அதிகாலை நேரத்தில் வாக்கிங் கிளம்பியவரை டெம்போ வேனில் வந்து கடத்திச் சென்றிருக்கிறது மர்மக் கும்பல்.

நேரு போன் நம்பர் கேட்ட கொலையாளி

''திட்டமிட்டுக் கூலிப்படை அரங்கேற்றிய படுகொலை சம்பவம் இது! திருச்சி தில்லை நகர் 10-வது குறுக்குத்தெருவில் ராமஜெயம் வீடு இருக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு வாக்கிங் கிளம்பி இருக்கிறார் ராமஜெயம். முழுமையாக விடியாத கொஞ்சம் இருட்டான நேரம் அது. மறைவான இடத்தில் நின்ற டெம்போ வேனில் இருந்து இறங்கிய மூவர் வலிய வந்து பேசி இருக்கிறார்கள். பொதுவாக டெம்போ வேனில் போலீஸ்தான் விசாரணைக்கு வருவது வழக்கம். நில அபகரிப்பு வழக்கு, வையம்பட்டி இரட்டைக் கொலை விவகாரம்... இப்படி சில விவகாரங்களில் ராமஜெயத்தின் மீது சந்தேகம் இருப்பதால், விசாரணைக்கு அழைக்க போலீஸ் வந்திருக்கலாம் என்று முதலில் நினைத்து இருக்கலாம். வேனில் இருந்தவர்களைப் பார்த்து ஏதோ கேள்வி கேட்க ராமஜெயம் முயற்சித்து இருக்கலாம். ஆனால், நொடி நேரத்தில் அவரை இழுத்துப்போட்டுக்கொண்டு வேன் பறந்து இருக்கிறது. வேனில் இருந்த கட்டுக் கம்பிக் குவியலில் இருந்து கம்பிகளை எடுத்து ராமஜெயத்தின் கை, கால்களைக் கட்டி இருக்கிறார்கள். வேனின் ரெக்சின் ஸீட் மீது போர்த்தப்பட்டு இருக்கும் துணியைக் கிழித்து வாயில் வைத்து அடைத்து இருக்கிறார்கள். தலையின் பின்பக்கம் கனமான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்து இருக்கிறார்கள். தில்லை நகரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் கல்லணை செல்லும் வழியில் உள்ள பொன்னுரங்கபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள காவிரிக் கரை ஓரத்தில் உடலை வீசியிருக்கிறார்கள்'' என்று சொல்கிறார் திருச்சி போலீஸ் அதிகாரி ஒருவர்.

பொதுவாகக் கொலை செய்வதாக இருந்தால், ஆளைப் பார்த்ததும் கொன்று தீர்த்து விடுவார்கள். ஆனால், இங்கு ராமஜெயம் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டுள்ளார். அப்படியானால் ஏதாவது பிளாக்மெயில் செய்யப்பட்டாரா என்றும் போலீஸ் சந்தேகப்படுகிறது. 'பேரம் படியவில்லை என்றவுடன், வேனில் வைத்தே கொன்று கீழே தள்ளி விட்டு இருக்கலாம். இடையில், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே சென்றதாக ராமஜெயத்தின் செல் போன் டவர் காட்டி இருக்கிறது. ராமஜெயத்தின் குடும்பத்தினர் யாரோ ஏழு மணி அளவில் அழைத்த போது, புதிய குரல்கள் பேசுவதைக் கேட்டு ஏதோ ராங் நம்பர் போட்டுவிட்டதாக நினைத்து கட் செய்து விட்டார்கள். அதன்பிறகு, லைன் போகவே இல்லை.'' என்கிறார்கள்.

எரித்துக் கொன்றதால் அடித்துக் கொலையா?

''கொலைக்குப் பிறகு, ராமஜெயத்தின் செல்போனை எடுத்த கொலையாளிகள்... அதில் கடைசியாக ராமஜெயம் பேசிய நம்பர்களுக்கு ரிங் செய்துள்ளனர். 'நேரு நம்பர் தெரியுமா?' என்று ராம​ஜெயத்தின் கேன்டீன் பணியாளர் ஒருவரிடம் கொலையாளிகள் கேட்டு இருக்கிறார்கள். அவர் தெரியாது என்று சொல்லவே, கட் செய்து விட்டார்கள். அடுத்து ஒருவருக்குப் போன் செய்துள்​ளனர். 'ராமஜெயம் வீட்டுப் பெண் ஒருவர் அதில் பேசவே, உடனே கட் செய்து இருக்கிறார்கள். கொலையைச் செய்து விட்டு, நேருவுக்குத் தகவல் சொல்ல நினைத்து இருக்கிறார்கள் என்றால், எதற்கோ பழி வாங்குவதற்காகச் செய்யப்​பட்ட பலி’ என் றுதான் இதனை நினைக்க வேண்டி உள்ளது.

'கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வேனை, பொன்னுரங்கபுரத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள பனையபுரம் என்கிற கிராமத்தருகே விட்டு​விட்டுப் போய் இருக்கிறார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தது அந்த வேன். அதிலிருந்த ஆவணங்களை பார்க்கும்போது, ஒருவருடத்துக்கு முன்பே காலாவதியானவை என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதில் சில க்ளூக்கள் கிடைத்துள்ளன. ஓரிரு நாட்களில் கொலையாளியைப் பிடித்துவிடுவோம்' என்கிறது போலீஸ்.

அன்புள்ள எம்.டி.

திருச்சி மாவட்டத் தி.மு.க.வின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் கே.என்.ராம ஜெயம். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் முதுகெலும்பே ராமஜெயம்தான். திருச்சியில் தி.மு.க-வின் மூன்று மாநில மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியது, கட்சிக்குச் சொந்தமாக அறிவாலயம் கட்டியது என்று பிரம்மாண்​டங்களை அரங்கேற்றுவதில் கைதேர்ந்தவர். அதேநேரம், தீவிர அரசியலில் நேரடியாக இற ங்காமல், தொழில்கள் செய்வதில்தான் அதிகம் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். 23 ஆண்டுகளுக்கு  முன்பே, மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற வெளி மாநிலங்களில் போர்வெல் போடும் கான்ட்ராக்டை எடுத்து நடத்தியவர். ஆந் திராவில் சுரங்கத் தொழில், இந்தோ​னேஷி​யாவில் நிலக்கரி குவாரி, புதுக்​கோட்டை எல்லை யோரம் கிரானைட் குவாரி, ஜனனி குரூப் ஆஃப் கம்பெனிகள், உயர் கல்வி நிறுவனங்கள் என்று மிகப்பெரிய தொழில் அதிபராக வலம் வந்தவர். அதனால், ராமஜெயத்தை 'எம்.டி' என்று மரியாதையுடன் திருச்சிவாசிகள் அழைப்பார்கள். அவரை யாரும் பெயரைச் சொல்லி அழைப்பது இல்லை. நேரு 1989-ல் தி.மு.க. ஆட்சியில் முதன்முதலாக அமைச்சராக அமர்ந்ததும், தனது வெளிமாநிலப் பிசினஸ் விஷயங்களில் இருந்து ஒதுங்கி திருச்சியில் நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்தார்.

காபி பிரியர்!

அதிகாலை நேரம், தில்லை நகரில் உள்ள கே.என்.ராமஜெயம் ஆபீஸ் எப்போதும் படு சுறுசுறுப்பாக இயங்கும். தனது நண்பர்களை அங்கே வரச்சொல்லி, பூப்பந்து விளையாடுவார். ஏதாவது பிசினஸ், அரசியல் பேச வேண்டி இருந்தால், இடைஇடையே வந்து பேசிவிட்டுப் போய் விளையாட்டைத் தொடருவார். சுடச்சுட ஹோட்டல் காபி... அங்கே வருகிறவர்களுக்கு விநியோகித்தபடி இருப்பார்கள். 'நம்ம உடம்புதான் சொத்து. அதை ஃபிட்டா வெச்சுக்கணும்' என்று வகுப்பே நடத்துவார். கட்சிக்காரர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், தோள் மேல் கை போட்டு உடன் இருந்து சரிசெய்வார். பள்ளி அட்மிஷன் சீஸன் வந்தால், இவரது தில்லை நகர் ஆபீஸில் கும்பல் நெட்டித் தள்ளும். தன்னைத் தேடி வருபவர்களின் குழந்தைகளுக்குப் பிரபல பள்ளிகளுக்கு அழைத்துப்போய் ஸீட் வாங்கித் தரு வார். இதெல்லாம் ராமஜெயத்தின் ஒரு முகம். அவரது இன்னொரு முகம்... ரொம்பவும் கோபக்காரர். வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசுவார். திருச்சி ஏரியாவில் சர்ச்சைக்குரிய நிலங்கள் விற்பனைக்கு வரும்போது, கட்டப் பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் பிசினஸ் பிரச்னை, நிலம் கொடுக்கல் வாங்கல் எல்லாவற்றிலும் ராமஜெயம் பெயர் அடிபடும். ஒரு கட்டத்தில், திருச்சியையே இவர் வளைத்துப் போட்டுவிட்டதாகவே அவரது அரசியல் எதிரிகள் பேச ஆரம்பித்தார்கள்.

நெப்போலியனுடன் நேரடி மோதல்!

எரித்துக் கொன்றதால் அடித்துக் கொலையா?

1996-2001... தி.மு.க. ஆட்சியின்போதுதான், ராமஜெயம் தி.மு.க-வின் முழுநேர அரசியல்வாதி ஆனார். அடுத்து வந்த 2006 -2011 தி.மு.க. ஆட்சியின்போது தி.மு.க-வின் உச்சத்துக்கே போய்விட்டார். இவரின் தீவிர அரசியல் பற்றி நேருவின் கவனத்துக்குப் போனபோது, ராமஜெயத்தை அழைத்துக் கண்டித்தார். அமைதியாக இருக்கும்படி சொல்லி அனுப்பினார். இதற்கிடையில், ராமஜெயத்தின் அடிவருடிகள் அவரை நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூரில் போட்டியிடும்படி தூபம் போட்டனர். இதற்கு நேரு சம்மதிக்கவில்லை. நடிகர் நெப்போலியனை நேரு முன்னிறுத்தினார். இதனால், அண்ணன் நேருவுடன் ராமஜெயத்துக்கு அரசியல்ரீதியான மோதல் வெடித்தது என்றுகூடச் சொல்வார்கள்.  தி.மு.க. தலைமையிடம் நேரடியாக ராமஜெயம் ஸீட் கேட்டுப் போராடினார். ஆனால், இறுதியில் ஸீட், நெப்போலியனுக்குப் போனது. சென்னை அண்ணா அறிவாலயம் வாசலில் ராமஜெயம் - நெப்போலியன் ஆகிய இருவருக்கும் நேரடியாக மோதல் நடந்தது. அது கைகலப்பாக முற்றியது. இவர் பெரம்பலூர் தொகுதியில் வேலையும் பார்க்கவில்லை. வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலிலாவது நிச்சயமாக ஸீட் தரப்படும் என்று ராம ஜெயம் ஆதரவாளர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் படுகொலை செய்யப்பட்டார்!  

வழக்குகள் ஏராளம்!

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு வழக்குகள் இவர் மீது போடப்பட்டன. இதனால் ராமஜெயம் தலைமறைவு ஆனார். கொச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு தப்ப முயன்றபோது இமிகிரேஷன் அதிகாரிகள் பிடித்து திருச்சிக் காவல் துறை வசம் ஒப்படைத்தனர். குறிப்பிட்ட சில நாட்கள் பாளையங்கோட்டை சிறையில் இருந்த பின்னர், அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார்.

இரட்டைக் கொலை வழக்கு!

எரித்துக் கொன்றதால் அடித்துக் கொலையா?

2007-ல் திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜும் அவரது கார் டிரைவர் சக்திவேலும் காரில் வைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். அதேதினத்தில், துரைராஜின் சகோதரர் தங்கவேலுவும் மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில், திருச்சி மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரான குடமுருட்டி சேகர் மீது போலீஸுக்கு சந்தேகம். ராமஜெயத்துக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், தி.மு.க. ஆட்சிக் காலத்தில், இந்தக் கொலை விவகாரம் பற்றி ராமஜெயத்திடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரிக்கவே இல்லை. அடுத்து, அ.தி.மு.க. ஆட்சி வந்ததும், இதே கொலை வழக்கை விசாரிக்க புதிய டி.எஸ்.பி-யாக மலைச்சாமி நியமிக்கப்பட்டார். அவரும் தீவிரமாக விசாரணை நடத்தினார். ஆனால், ராமஜெயத்துக்கும் இந்தக் கொலைக்கும் இடையேயான 'லிங்க்' கிடைக்கவில்லை.

ராமஜெயம் இறப்பதற்கு சில மாதங்கள் முன், இந்தக் கொலை வழக்கு பற்றி ராமஜெயத்திடம் நாம் கேட்டபோது, ''என்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் அழைத்தால், உடனே போவேன். எனக்கும் இந்தக் கொலைக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை. கொலை நடந்த சமயத்தில் தில்லை நகர் ஏரியாவில் அவர் செல்போன் டவர் காட்டியதாக போலீஸுக்கு சந்தேகம் இருக்கிறது. தில்லை நகர் என்றால், எவ்வளவு பெரிய ஏரியா? என் வீடு மட்டும்தான் இருக்கிறதா?  உண்மையான கொலையாளி பிடிபட்டால், என் மீதான சந்தேகப் பார்வை விலகும் ' என்று சொல்லிச் சிரித்தார். ஆனால் சிக்கல் அதில்தான் இருக்கிறது!

'ராமஜெயத்தைக் கொடூரமாகக் கொன்றதற்கு காரணம் இந்தப் பழிவாங்கலா?'' என்ற கோணத்தில் முதல் கட்ட விசாரணையை போலீஸ் தொடங்கி உள்ளது.

கோபப்பட்டாரா குடமுருட்டி?

இந்த இரட்டைக் கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டவர் குடமுருட்டி சேகர். ராமஜெயம் கொலை செய்யப்பட்டதற்கு முந்தைய நாள்தான் குடமுருட்டி சேகர், நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனை ஜாமீன் பெற்றார். ராமஜெயத்தைப் பார்க்கச் சென்ற குடமுருட்டி சேகர், 'நீங்கள் மட்டும் தப்பி விடுகிறீர்கள். எங்கள் குடும்பத்தார் மட்டும் நாய் போல ஊர் ஊராகத் திரிய வேண்டியுள்ளது’ என்று கோபப்பட்டதாகவும் ஒரு தகவல். இந்தக் கோணத்திலும் விசாரிக்கப் போகிறோம் என்கிறது போலீஸ்!

சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்து வழக்கை விரைந்து முடித்து நீதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர் துரைராஜ் குடும்பத்தினர். அதன்பிறகும், வழக்கு நொண்டியடித்துக் கொண்டு இருந்தது. கடுப்பான துரைராஜின் ஆதரவாளர்கள்தான் ராமஜெயம் கொலையை கூலிப்படையை ஏவி நடத்தி இருக்க வேண்டும் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரிக்கிறார்கள். இதற்காக, சில ஆட்கள் பொது வசூல் பண்ணி நிறையப் பணம் சேகரித்து வைத்து இருந்ததாகவும் விதவிதமான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

திருச்சியில் பிரபல ரௌடி ஒருவர் தி.மு.க. ஆட்சியில் என்கவுன்டர் செய்யப்பட்டார். அதற்குப் பின்னணியில் இருந்து தூண்டியது ராமஜெயம். அந்த ரௌடியின் ஆதரவாளர்கள் இதனைச் செய்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. 'ராமஜெயத்தின் உடல் இருந்த நிலையைப் பார்த்தால் அவர் கைதேர்ந்த தொழில் முறை கொலையாளிகளால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருப்பதைப் போல் தெரிகிறது. அதனால், வெளிமாநிலத் தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்குமா என்றும் அலசப்படுகிறது.

- நமது நிருபர்கள்

படங்கள்:  'ப்ரீத்தி’ கார்த்தி,  என்.ஜி.மணிகண்டன், ஜெ.வேங்கடராஜ்