Published:Updated:

அண்ணா செய்ததை ஒழித்துக் கட்டியது கலைஞர்தான்!

அண்ணா செய்ததை ஒழித்துக் கட்டியது கலைஞர்தான்!

##~##

மிழகத்தில் அதிகம் புகழப்பட்டதும், திட்டப்​பட்டதும் 'திராவிடம்’ என்ற வார்த்தையாகத்தான் இருக்கும். இப்போது, மீண்டும் திராவிடப் போர். 'திராவிடர் என்று நாம் சொன்னதால்தான் வீழ்ந்தோம். தமிழர் என்றால் வாழ்ந்திருப்போம்’ என்று பல இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் கொந்தளித்து வருகின்றன. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 'குடியரசு வாசகர் வட்டம்’  ஒரு கருத்தரங்கம் நடத்தியது. வழக்கறிஞர் குமாரதேவன் இதற்கான முயற்சிகளை எடுத்து இருந்தார்.

 மூத்த வழக்கறிஞர் துரைசாமி பேசும்போது, ''இந்திய வரலாற்றுப் பேராசிரியர் நீல​கண்ட சாஸ்திரி 4,000 ஆண்டுகளுக்கு முன், ஆரியர்கள் வந்ததாகச் சொல்கிறார். வெள்ளைத் தோல்கொண்ட ஆரியர்கள்,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கறுப்புத் தோல்கொண்ட திராவிடர்கள் என்ற அடைமொழியைப் பதிவு செய்கிறார். தமிழர்​களைத் திராவிடர்கள் என்றுதான் குறிப்​பிடுகிறார். சங்க காலத்தில் இருந்துதான் தமிழர்களின் வரலாறு பற்றிச் சொல்கிறார். அதற்குமுன் இருந்த ஆரம்பகட்ட வரலாற்றை இருட்டடிப்பு செய்வதுதான், வரலாற்று ஆசிரியர்களின் வேலையாக இருந்தது. மங் கோலியர்கள், வங்காளம், ஒரிசா, உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்தவர்கள் கலப்​புத் திராவிடர்கள் என்றும், தென் பகுதியில் வாழும் மக்கள்தான் கலப்பில்லாத திராவிடர்கள் என்றும் சொல்லப்பட்டது. தென் பகுதித் திராவிடர்கள்தான் தமிழர்கள். நீதிக் கட்சிக்கு பெரியார் தலைமை ஏற்கும் வரை, அது முழுமையான திராவிட இயக்க​மாகப் பரி ணமிக்கவில்லை. சுயமரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்பது சமூகநீதியாக எடுத்துக்​கொள் ளப்பட்டது திராவிட இயக்கத்​தால்தான்.

அண்ணா செய்ததை ஒழித்துக் கட்டியது கலைஞர்தான்!

1962-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் 12 நீதிபதிகள் இருந்தனர். இதில் 10 பேர் உயர் வகுப்​பினர். இரண்டு பேர் திராவிடர்கள். 2012-ல் 54 நீதிபதிகள் இருக்கின்றனர். இதில் உயர் வகுப்பினர் நான்கு. திராவிடர்கள்தான் 50 பேர். இதுதான் திராவிடர் கழகம் தமிழகத்தில் ஏற்படுத்திய மகத் தான மாற்றத்தின் அடையாளம். அண்ணா 1965 ஜனவரி 25-ல் பேசியபோது, 'நான் செய்த மூன்று காரியங்களை யாரும் அழிக்க முடியாது. தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது, சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டம் ஆக்கியது. இணைப்பு மொழியாக ஆங்கிலம்தான் தமிழ்நாட்டில் இருக்கும். இந்தி இருக்காது’ என்று சொன்னார்.

ஆனால், அண்ணா செய்ததை ஒழித்துக் கட் டியது கலைஞர்தான். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்​டம் நடந்தது. அதற்குப்பிறகு, தமிழ்நாட்டில் இந்தி இல்லை. ஆனால், தி.மு.க. ஆதரவுடன் டெல்லி யில் அமைச்​சரவை அமைந்ததும் அனைத்து மைல் கல், ரயில் நிலையங்கள், சாலைகளில் இந்தி வந்துவிட்டது. தன் சொந்தக் காரணங்​​களுக்காக, சொந்த லாபத்துக்காக கொள் கையைப் பலி இட்டதால்தான் திராவிட இயக்கம் தேக்கம் கண்டது.  இனி​யாவது மறுமலர்ச்சி உண்டாக்க வேண்டும்'' என்று ஆதங்கத்தோடு பேசினார்.

வரலாற்று ஆசிரியரும் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளருமான 'விடுதலை’ ராசேந்திரன் பேசியபோது, ''1967-ல் பெரியார் சிலை திறப்பு விழா திருச்சியில் நடந்தது. அதில் அண்ணா பேசியபோது, 'பெரியாரால் வளர்க்கப்பட்ட தொண்டர்கள் பல கட்சி களில் இருக்கிறார்கள். நாங்கள் தேர்தலில் நின்று வெற்றிக்கனி கொடுத்தோம். நான் கேட்டது இந்தக் கனி அல்ல என்று பெரியார் சொன்னார். நீங்கள் கேட்கும் கனியைத் தர எங்களால் முடியவில்லை. ஆனால், உங்கள் கனி கிடைக்கும்போது நாங்கள் தட்டிப்பறிக்க மாட்டோம். தடை​யாக இருக்க மாட்டோம். கீழே விழாமல் பார்த்துக்கொள்வோம் என்று சொன்​னேன்’ என்றார். அந்தப் பாதுகாப்பை அண்ணாவுக்குப் பிறகு செய்ய தி.மு.க. தவறி​ விட்டது. அரசியலில் அதிகாரத்தைத் தக்க வைக்க எதை வேண்டுமானாலும் செய்யும் நிலைக்கு வந்துவிட்டது.  

திராவிடக் கட்சிதான் நாட்டைக் கெடுத்து​விட்டது. திராவிடம் மாயை என்று சிலர் சொல்லி வருகிறார்கள். சாதி ஒழிப்பு, சுயமரியாதை, சமத்துவம், இடஒதுக்கீடு, பெண்ணடிமை மறுப்பு, விதவை மறுமணம், கல்வித்துறையில் மாற்றங்கள் ஆகியவற்றைச் செய்தது திராவிடர் கழகம்தான். இதுவா நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கியது? சென்ற ஆண்டு பதிவு செய்யப்பட்ட 70 ஆயிரம் திருமணங்களில் 30 ஆயிரம் திருமணங்கள் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் செய்து​கொண்ட சிறப்புத் திருமணங்கள். மற்ற மாநிலங்களில் சாதி மறுப்புத் திருமணங்கள் அதிகம் இல்லை. தமிழகத்தில்தான் அதிகம். இந்த சமூகப் புரட்சி யாரால் சாத்தியம் ஆனது?  இதுதானே வளர்ச்சி? சுயமரியாதை இயக்கத்தை எதிர்ப்பது பெரியாரை எதிர்ப்​பது மாதிரி'' என்று ஆவேசமாக முடித்​தார்!

தமிழகத்​தில் மீண்டும் தத்துவார்த்த மோதல்கள் நடக்கத் தொடங்கி இருப்பது, நல்ல மாற்றம்தான்!

- க.நாகப்பன்,

படம்: ச.இரா.ஸ்ரீதர்.